Published:Updated:

காவல் நிலைய தற்கொலை...இது கொஞ்சம் புதுசு!

Vikatan Correspondent

சீர்காழி: காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்தவர் இறந்தார், காவல் துறையினரால் தேடப்பட்டவர் விசாரணைக்குப் பயந்து தற்கொலை செய்துகொண்டார், என்பதெல்லாம் வாடிக்கையான செய்தி. ஆனால் வழக்கு, விசாரணை என்று எதிலுமே சம்பந்தப்படாத ஒருவர் காவல் நிலைய ஜன்னலில் தூக்கு மாட்டி இறந்து கிடக்கும் செய்தி இப்போது புதுசு!

நாகை மாவட்டம் சீர்காழியில் மகளிர் காவல் நிலையம், நகர காவல் நிலையம், டி.எஸ்.பி. அலுவலகம் ஆகியவை ஒரே வளாகத்தில் அமைந்துள்ளது. பரந்து விரிந்த அந்த வளாகத்தில் எப்போதும் மக்கள் வந்து சென்றபடி இருப்பார்கள். இன்று காலை பணிக்கு வந்த போலீஸார், மகளிர் காவல் நிலையத்துக்கு  பின்புறமாக உள்ள ஜன்னலில் யாரோ ஒருவர் தூக்கு மாட்டி தொங்குவதைக் கண்டு அதிர்ந்தனர். உடனடியாக போலீஸ் உயரதிகாரிகள் அந்த இடத்துக்கு வந்து சடலத்தை ஆராய்ந்தனர். 30 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் யார், எந்த ஊர் என்ற தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. சடலத்தை  பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு, மணடையை பிய்த்தபடி இருக்கிறார்கள் போலீஸார். .

மகளிர் காவல் நிலையத்துக்குப் பின்னால் தூக்கு மாட்டிக்கொண்டார் என்பதால், அங்கு ஏதாவது வழக்குக்காக வந்தவரா? இல்லை, காவல் நிலையத்தில் பணிபுரிகிற யாருடனாவது சம்பந்தப்பட்டவரா? இல்லை, நகர காவல் நிலையத்துக்கு வந்தவரா? என்று ஆராய்ந்தனர். அப்படி எதுவும் இல்லை என்பதே விசாரணை முடிவு. அதனால், மனநலை சரியில்லாதவர் இங்கு வந்து தூக்கு போட்டு இறந்திருக்கலாம் என்று வழக்கமான பல்லவியைப் பாடுகிறார்கள்.

இது கொலையாக இருக்கக்கூட வாய்ப்பு உண்டு. சமீபகாலமாக சீர்காழியில் கூலிப்படையினர் அதிகரித்துவிட்டார்கள். யாரிடமாவது பணம் பெற்றுக்கொண்டு,  இவரைக் கடத்தி வந்து கொலைசெய்து காவல் நிலையத்தில் தூக்கு மாட்டிவிட்டு சென்றிருக்கலாம் என்கிறார்கள் விவரம் அறிந்த வட்டாரத்தினர்.

என்ன இருந்தாலும், காவல் நிலையத்தில் தூக்கு மாட்டி இறந்திருப்பது  கொஞ்சம் புதுசுதான். அவர் ஏன் செத்தார், எப்படி செத்தார் என்பதை போலீஸார் விரைவில் கண்டுபிடிக்க வேண்டும். இல்லை என்றால், காவல் நிலைய வளாகத்திலேயே இறந்தவர் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாதவர்கள் என்ற அவப்பெயரை சுமக்க நேரிடும்!

-  கரு.முத்து