Published:Updated:

போலி பத்திரம் தயாரித்து விற்பனை செய்த தொழிலதிபர் கைது!

Vikatan Correspondent
போலி பத்திரம் தயாரித்து விற்பனை செய்த தொழிலதிபர் கைது!

சிவகாசி: ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தைப் போலி பத்திரங்கள் தயாரித்து விற்பனை செய்த சிவகாசியைச் சேர்ந்த வட மாநில தொழிலதிபரை போலீஸார் கைது செய்தனர்.

சிவகாசி சிறுகுளம் கண்மாய் பகுதியில் வசித்து வருபவர் வட மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்த் சிங்வி. பேப்பர் கப் தொழில் செய்து வரும் இவர், வட மாநில ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுடன் நெருங்கி பழகுவார்.

பிறகு, போலீஸ் அதிகாரிகளிடம் தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி நில மோசடி, கட்டப்பஞ்சாயத்து, போலீஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர் என்று பந்தாவாக வலம் வந்தார். அதனால், இவருக்கு போலீஸ் சேட் என்றே சிவகாசி வட்டாரத்தில் பெயர்.

போலீஸ் அதிகாரிகள் மத்தியில் இவருக்கு இருந்த செல்வாக்கு காரணமாக இவர் மீது எந்த புகார்கள் வந்தாலும் அதில் இருந்து தப்பி வந்தார்.

இதற்கிடையே ராஜபாளையத்தைச் சேர்ந்த விவசாயி பாஸ்கர்ராஜா(44) என்பவருக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் தாலுகாவில் வடுகப்பட்டி, மூவரைவென்றான் பகுதிகளில் 42 ஏக்கர் 96 சென்ட் பூர்வீக நிலம் இருந்தது. ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த இடத்தை கடந்த 2010ஆம் ஆண்டு ஈரோட்டைச் சேர்ந்த தனுஷ்கோடி, சாவித்திரி ஆகியோர் தனக்கு கிரையம் செய்து தந்ததுபோல் ஆனந்த்சிங்வி போலி பத்திரங்கள் தயார் செய்தார்.

பிறகு சென்னையைச் சேர்ந்த தனது உறவினர்கள் ரகுமத்மால், அசோக்குமார், மகேந்திரகுமார் ஆகியோரிடம் அந்த இடத்தை விற்பனை செய்தார். இதுபற்றி அறிந்த பாஸ்கர்ராஜா விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

##~~##
இது தொடர்பாக பாஸ்கர்ராஜா உயர் அதிகாரிடம் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் நேற்று அதிரடியாக போலி பத்திரங்கள் தயாரித்து மோசடி செய்ததாக சிவகாசி ஆனந்த்சிங்வியை கைது செய்து, மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக 10 பேரை தேடி வருகின்றனர்.
- எம்.கார்த்தி


படம்:
ஆர்.எம்.முத்துராஜ்