Published:Updated:

மதுரையில் வாலிபர் தீக்குளித்து சாவு: இலங்கை பிரச்னை காரணம்? ( படங்கள் )

மதுரையில் வாலிபர் தீக்குளித்து சாவு: இலங்கை பிரச்னை காரணம்?  ( படங்கள் )
மதுரையில் வாலிபர் தீக்குளித்து சாவு: இலங்கை பிரச்னை காரணம்? ( படங்கள் )

மதுரை: மதுரையில் உடலில் தீவைத்துக் கொண்டு பெட்ரோல் பல்க்கிற்குள் நுழைந்த வாலிபர், படுகாயமடைந்து உயிரிழந்தார்.  

மதுரை கோரிப்பாளையம் சிக்னலில் எச்.பி. பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது.இன்று மாலை 7.15 மணியளவில் அங்கு வந்த ஒரு இளைஞர், இரண்டு லிட்டர் வாட்டர் கேனில் வைத்திருந்த பெட்ரோலை தன் உடல் முழுவதும் ஊற்றிக் கொண்டு தீ வைத்தார்.

பின்னர் பற்றி எரிந்த தீயுடன்,பெட்ரோல் நிரப்பும் குழாயை பிடிக்க முயன்ற அவரை, அங்கிருந்த ஊழியர் ஆரோக்கியராஜ் கீழே தள்ளினார். இதில் ஆரோக்கியராஜின் இரண்டு கைகளும் பொசுங்கின. உடனே மற்ற ஊழியர்கள் திரண்டு வந்து, கீழே எரிந்து கொண்டிருந்த வாலிபர் மீது தண்ணீர் மற்றும் மணலைக் கொட்டி தீயை அணைத்தனர்.

கோரிப்பாளையம் தேவர் சிலை அருகில் எப்போதும் குறைந்தது 10 போலீஸார் இருப்பார்கள் என்பதால், உடனே அவர்கள் இதுபற்றி தீயணைப்புத்துறை மற்றும் ஆம்புலென்சுக்குத் தகவல் கொடுத்தனர்.

மதுரையில் வாலிபர் தீக்குளித்து சாவு: இலங்கை பிரச்னை காரணம்?  ( படங்கள் )

ஆம்புலென்ஸ் டிரைவர் வந்த போது,அந்த வாலிபரின் உள்ளாடை,தலை, கால் ஆகியவற்றின் மீது தொடர்ந்து தீ எரிந்து கொண்டிருந்தது.அதனை அணைக்கும் வரையில் அனத்திக் கொண்டிருந்த அந்த வாலிபர்,வேனில் ஏற்றும் முன்பே இறந்து போனார்.

மதுரையில் வாலிபர் தீக்குளித்து சாவு: இலங்கை பிரச்னை காரணம்?  ( படங்கள் )

நடந்த சம்பவத்தை நேரில் பார்த்த அக்கம் பக்கத்துக் கடைக்காரர்களிடம் விசாரித்த போது,"தனி ஈழம் மலரட்டும், பிரபாகரன் வாழ்க, ராஜபக்சே ஒழிக!" என்று கோஷமிட்டபடி அந்த வாலிபர் தீக்குளித்ததாகச் சொன்னார்கள்.

காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஆரோக்கியராஜிடம் கேட்டபோது, "அவருக்கு 30 வயதிற்குள் தான் இருக்கும். முகத்தில் ஸ்கார்ப் கட்டியிருந்ததால் அடையாளம் காண முடியவில்லை.எங்கள் பங்க்கில் பெட்ரோல் வாங்கவில்லை.வெளியில் இருந்து கொண்டு வந்தவர், திடீரென்று உடலில் ஊற்றிக் கொண்டு லைட்டரால் பற்ற வைத்தார்.

மதுரையில் வாலிபர் தீக்குளித்து சாவு: இலங்கை பிரச்னை காரணம்?  ( படங்கள் )

பங்குக்குள் அவர் வந்ததால்,பெரும் விபத்து ஏற்படுவதைத் தடுக்க அவரைக் கீழே தள்ளினேன்.அதற்குள் மற்ற ஊழியர்கள் எல்லாம், மெயினை ஆஃப் பண்ணிவிட்டார்கள்.எங்கள் பங்க்கில் சுமார் 4 ஆயிரம் லிட்டர் பெட்ரோல், 6 ஆயிரம் லிட்டர் டீசல் இருந்தது.தீ பிடித்திருந்தால் 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும்" என்றார்.

போலீஸாரோ, "அவர் எந்தக் கோஷத்தையும் எழுப்பவில்லை.அவர் யாரென்று விசாரித்துக் கொண்டிருக்கிறோம்.யார் என்று தெரிந்தால்தான் எதற்காகத் தற்கொலை செய்தார் என்ற விவரமும் தெரியவரும்" என்றார்கள்.

சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும் மதிமுக,நாம் தமிழர் கட்சி,ஈழ ஆதரவாளர்கள், மாணவர்கள் அனைவரும் அரசு மருத்துவனையில் கூடினார்கள்.அவர்கள் இலங்கைக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷமிட்டார்கள்.

மதுரையில் வாலிபர் தீக்குளித்து சாவு: இலங்கை பிரச்னை காரணம்?  ( படங்கள் )

போலீஸ் படையும் குவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பேசிய ஈழ ஆதரவு வழக்கறிஞர் சங்கர்நாராயணன், "இறந்த வாலிபர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கோஷமிட்டதை போலீஸார் மறைக்கிறார்கள்.அவர் வந்த இருசக்கர வாகனம்,அவரது செல்போன்,கைப்பை ஆகியவற்றை கைப்பற்றிய போலீஸார், இறந்தது யார் என்பதை கண்டுபிடித்து விட்டார்கள்.

ஆனால், அந்த வாலிபரின் வீர மரணத்தைக் கொச்சைப்படுத்துவதற்காக,ஏதாவது காரணம் சிக்காதா என்று அலைந்து கொண்டிருக்கிறார்கள்.இறந்து 5 மணி நேரம் ஆகியும் இதுவரையில் அவரது பெயர் விவரத்தை போலீஸார் வெளியிடவில்லை" என்றார் வருத்தத்துடன்.

இதற்கிடையே,அந்த பெட்ரோல் பங்க் காங்கிரஸ் பிரமுகருடையது என்றும்,அதனால் தான் உடலில் தீவைத்துக் கொண்டு அந்த இளைஞர் அங்கே நுழைந்தார் என்றும் தகவல்கள் பரவி வருகிறது.

- கே.கே.மகேஷ், சல்மான்
படங்கள்:
பா.காளிமுத்து