Published:Updated:

எஸ்.ஐ. கர்ப்பத்துக்கு யார் காரணம்? எஸ்.எம்.எஸ். பீதியில் போலீஸ்!

சேலம்: சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியில் 3 மாத கர்ப்பிணியான சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, தற்போதைய எஸ்.எம்.எஸ்.சால் பல அதிகாரிகளை பீதி அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயப்பிரபா. இவருக்கும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த அழகேசனுக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஹரிஸ் என்ற ஆறாம் வகுப்பு படிக்கும் மகன் இருக்கிறான். இந்த நிலையில் ஜெயப்பிரபா எஸ்.ஐ. ஆவதற்கு முன்பு சேலம் ரயில்வே போலீஸாக இருந்தார். அப்போது அங்கு எஸ்.ஐ.யாக இருந்த ராஜதுரையோடு பழக்கம் ஏற்பட்டு நெருக்கமாக இருந்து வந்தார். 

இதை அழகேசன் கண்டித்ததால் அடிக்கடி ஜெயப்பிரபாவுக்கும், அழகேசனுக்கும் சண்டை வந்தது. ஒரு கட்டத்தில் ஜெயப்பிரபா விவகாரத்து பெற்று மகனை தன்னோடு அழைத்து வந்து, கன்னங்குறிச்சியில் அடுக்குமாடி குடியிருப்பில் தன் மகனோடு தனியாக வசித்து வந்தார். அதன்பிறகு ஜெயப்பிரபாவும், ராஜதுரையும் கோவிலில் திருமணம் செய்துக் கொண்டு கணவன், மனைவியாக வாழந்து வந்தனர். 

ராஜதுரையின் சொந்த ஊர் ஈரோடு. இவர் சேலம் பேர்லேண்ட்ஸ், அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.யாக இருந்திருக்கிறார். தற்போது பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி மாவட்டம் ஊத்துமலை ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். இவருக்கு ஏற்கனவே இன்னொரு பெண்ணோடு திருமணம் ஆகி இரு குழந்தைகள் இருக்கின்றன. இருந்தாலும் அடிக்கடி சேலம் வந்து ஜெயப்பிரபாவை மாதத்திற்கு மூன்று, நான்கு நாட்கள் பார்த்துச் செல்லுவது வழக்கம். இந்த நிலையில் ஜெயப்பிரபா மூன்று மாத கர்ப்பிணியாக இருந்திருக்கிறார். 

இதனிடையே, அடிக்கடி ராஜதுரைக்கும், ஜெயப்பிரபாவுக்கும் தகராறு வந்துக் கொண்டிருந்தது. தகராறு வரும் போதெல்லாம் ஜெயப்பிரபா கதவை பூட்டி போட்டுக் கொண்டு படுத்து தூங்கி விடுவாராம். இதே போல கடந்த 16 ஆம் தேதி இருவருக்கும் சண்டை வந்திருக்கிறது. அப்போது ராஜதுரை, ‘‘நாம் இருவரும் சேர்ந்திருந்தது போதும், இனி இருவரும் பிரிந்து விடலாம்’’ என்று சொல்லி திட்டியிருக்கிறார்.

இதில் மன வேதனை அடைந்த ஜெயப்பிரபா, ராஜதுரை இருந்த அறையை பூட்டி விட்டு, தன் படுக்கை அறையில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்த ராஜதுரை சத்தம் போட்டு கத்தினார். அடுத்து ஜெயப்பிரபாவின் அம்மா கல்யாணிக்கும், அண்ணன் ஜெயபிரகாஷூக்கும் தகவல் கொடுத்திருக்கிறார்.

இதை அறிந்த சேலம் கன்னங்குறிச்சி இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த, எஸ்.ஐ. நெப்போலியன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெயப்பிரபாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். ஜெயப்பிரபாவின் உடல் சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மூன்று மாதம் கர்ப்பத்திற்கு காரணம் யார் என்பதை கண்டறியவும் டி.என்.ஏ. சோதனை மேற்கொள்ளப்படுகிறது. தற்கொலைக்கு தூண்டியதாக ராஜதுரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்த சம்பவத்தை தொடர்ந்து சேலத்தில் பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு தொந்தரவு கொடுத்த ஆண் காவல்துறை உயர் அதிகாரிகள் பெரும் கலக்கத்தில் இருக்கிறார்கள்.

ஜெயப்பிரபா கர்ப்பம் தொடர்பாக மேச்சேரி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டுள்ளது. அதில் ‘எஸ்.ஐ. ஜெயப்பிரபா வயிற்றில் 3 மாத ஆண் குழந்தை இருந்ததாக பிரேத பரிசோதனை செய்த டாக்டர் கூறியுள்ளார். அது உங்களுடையது தானா? இது தான் எஸ்.ஐ. ஜெயபிரபாவுக்கும், இன்ஸ்பெக்டர் ராஜதுரைக்கும் மோதல் வர காரணமாம். கிரேட் எஸ்கேப்’’ எனவும் இன்னொரு எஸ்.எம்.எஸ்.சில் ‘‘சவ ஊர்வலத்தில் கலந்து கொண்டு, மலர் வளையம் வைத்தால், சிறந்த சமூகசேவகர் என்ற டயலாக் சொல்லி விடலாம்’’ என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த எஸ்.எம்.எஸ். அனைத்தும் சேலம் காவலர் பயிற்சி பள்ளியில் பணியாற்றி வரும் எஸ்.ஐ. கோமளவள்ளி அனுப்பியிருப்பது தெரியவந்துள்ளது.

இதைப்பற்றியும் தற்போது சேலம் மாவட்ட எஸ்.பி. அஸ்வின்கோட்னீஷ் விசாரித்து வருவதாகவும் சொல்லியிருக்கிறார். இன்னும் காவல்துறையில் என்னென்ன வெளியே வரப்போகிறதோ தெரியவில்லை.

வீ.கே.ரமேஷ்