புதுச்சேரி சிறையில் 80 செல்போன் பறிமுதல்: கைதிகள் மீது போலீஸ் தடியடி

புதுச்சேரி: புதுச்சேரி சிறையில் 80 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த கைதிகள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடி சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மத்திய சிறைச்சாலையில் ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைச் சாலையில் கொலை குற்றவாளிகள், செல்போன்கள் மூலம் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர். மேலும் விசாரணை கைதிகளையும் மிரட்டி வீட்டில் உள்ளவர்களிடமும் பணம் பறித்துள்ளனர்.
##~~## |
சிறைக்குள் அதிகாரிகள் சோதனைக்கு சென்றபோது, அதை எதிர்த்து மல்லுக்கு நின்ற தண்டனை கைதிகள் சிலர், ''எங்களைச் சீண்டினால், உங்கள் வீட்டுப் பிள்ளைகளையும் ஆளை வைத்துத் தூக்குவோம்" என்று மிரட்டினார்களாம். இப்படி மிரட்டல் விடுத்த 18 கைதிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, ''தண்டனை கைதிகள் இருக்கும் பிளாக்குகளில் இரண்டில் மட்டுமே செல்போன் தேடுதல் வேட்டை நடந்து முடிந்திருக்கிறது. எஞ்சியுள்ள பிளாக்குகளில் இன்னும் சோதனை நடத்தப்படவில்லை. அந்த பிளாக்குகளிலும் ஏராள மாக செல்போன்கள் இருப்பதாக தகவல் இருக்கு. அந்த செல்போன்கள் மூலமாக தாதா கைதிகள் வெளியில் இருக்கும் தங்களது வக்கீல்களுக்கு தகவல் கொடுத்து, அவர்கள் மூலமாக புதுச் சேரி சிறைக்குள் பெரிய அளவில் கலவரம் நடந்து கைதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக பொய்யான தகவல்களையும் எஸ்.எம்.எஸ்களையும் தட்டிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்" என்கிறார்கள் சிறை வட் டாரத்தில்.
புதுச்சேரி சிறையில் ஒரே நேரத்தில் 80 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் காவலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நந்தக்குமார்
படங்கள்: தேவராஜன்