Published:Updated:

கோவையில் வடமாநிலத்தவர்கள் விவரம் சேகரிக்காமல் இருக்க லஞ்சம்?

கோவையில் வடமாநிலத்தவர்கள் விவரம் சேகரிக்காமல் இருக்க லஞ்சம்?
கோவையில் வடமாநிலத்தவர்கள் விவரம் சேகரிக்காமல் இருக்க லஞ்சம்?

கோவை: கோவையில் வடமாநில தொழிலாளர்கள் குறித்த விவரங்களை தராமல் இருக்க, வடமாநில தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய தொழிலதிபர்களிடம் இருந்து போலீசார் லஞ்சம் பெற்றுள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக உளவு போலீசார் விசாரிக்கின்றனர்.

கோவையில் தொழிற்சாலை ஒன்றில், சாதாரண தொழிலாளியாக இருந்த மாவோயிஸ்ட் தீவிரவாதி ஷ்யாம் சரண் டுடூவை கடந்த 6ஆம் தேதி மேற்கு வங்க போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக மத்திய புலனாய்வு போலீசார், மாவோயிஸ்ட் ஷ்யாம் சரண் டுடூ வேலை பார்த்த கம்பெனியில் விசாரித்த போது, அவனைப் பற்றி எந்த விவரங்களும் இல்லை. போட்டோவும் இல்லை. பெயர் கூட நிறுவனத்துக்கு முழுமையாக தெரியவில்லை. போலீசாரின் கேள்விகளுக்கு எல்லாம், ‘எங்களுக்கு எதுவும் தெரியாது’ என்று தான் பதில் வந்தது.

பொதுவாக, வெளிமாநில தொழிலாளிகளின் ஐ.டி. கார்டு, கைரேகை, போட்டோ ஆகியவற்றுடன் அவர்களின் விவரங்களை போலீசார் பெற வேண்டும் என்பது நடைமுறை. ஆனால் கோவையில் இதுபோன்ற முறைகள் போலீசாரால் பின்பற்றப்படவில்லை. லட்சக்கணக்கில் இருப்பார்கள் என யூகிக்கப்படும் வடமாநில தொழிலாளர்களில், வெறும் 2 ஆயிரம் பேரின் விவரங்கள் மட்டுமே காவல் துறையில் உள்ளது.

##~~##
ஏற்கனவே கோவை, திருப்பூரில் தொடர்ச்சியாக வடமாநிலத்தினரால் குற்ற சம்பவங்கள் நிகழ்ந்த போது கட்டாயமாக வடமாநிலத்தினரின் விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும் என உயர் அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். ஆனாலும் போலீசார் இதில் கவனம் செலுத்தவில்லை. குறிப்பாக மாவோயிஸ்ட் பணியாற்றிய கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை செய்யும் நிலையில், யாருடைய விவரமும் போலீசாரால் பெறப்படவில்லை.
மாவோயிஸ்ட் சிக்கிய பிறகும் கூட, அந்த கம்பெனியில் போலீசார் தீவிரமாக விசாரிக்கவில்லை. அந்த கம்பெனி முதலாளி மீது வழக்கு தொடரப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முறையாக விசாரணை கூட நடத்தாதது பலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்த வழக்கை மிகவும் உன்னிப்பாக கவனித்து வந்த மத்திய  உளவு போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தியபோது, பெரிய அளவில் பணம் கைமாறியது தெரியவந்துள்ளது.
"கோவை மாநகரில் ஏராளமான கம்பெனியில வெளிமாநில தொழிலாளர்கள் வேலை செய்யறாங்க. சுமார் 1 லட்சம் பேர் இங்கே வேலை செய்யறாங்க. இவங்கள வேலைக்கு வைக்கிற கம்பெனி கண்டிப்பா போலீஸ்ல இவங்க முழு விவரத்தை பதிவு செய்யணும். அது தான் சட்டம். ஆனா கோயமுத்தூர்ல பல பிரச்னைகளுக்கு அப்புறமும், இன்னைக்கு வரைக்கும் முறையா பதிவு செய்யாத நிலை தான் இருந்துட்டு வருது.
வெளிமாநில தொழிலாளர்கள் குறித்த விவரத்தை பதிவு செய்யணும்னா ஐ.டி.கார்டு கொடுக்கணும். ஐ.டி. கார்டு கொடுத்தா பேக்டரி லேபர் ரூல்ஸ் எல்லாம் பாலோ பண்ணனும். அதனால ஐ.டி. கார்டு கொடுக்காம, கூலி குறைச்சு கொடுத்து வேலைக்கு வெச்சிருக்காங்க. போலீஸ் இதை கண்டுக்காம இருக்க, கம்பெனிகாரங்க எல்லாம் சேர்ந்து மாச மாசம் ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் மாமூல் கொடுத்துட்டு இருக்காங்க. நிறைய கம்பெனிங்கறதாலே பெரிய தொகை கிடைக்கறதா சொல்றாங்க,” என்கின்றனர் உளவு போலீசார்.
இந்நிலையில், அந்த கம்பெனி உரிமையாளர்களிடம் உளவு போலீசார் தனியாக விசாரிக்க திட்டமிட்டனர். அந்த விசாரணை மாவோயிஸ்ட்டுகளை பற்றியதா அல்லது எந்தெந்த போலீஸ் அதிகாரிகளுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பது பற்றியதா என்பது விரைவில் தெரியும்.
ச.ஜெ.ரவி