Published:Updated:

வானூரில் இன்று 7 கடைகள் எரிப்பு: மரக்காணத்தில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பு

வானூரில் இன்று 7 கடைகள் எரிப்பு: மரக்காணத்தில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பு
வானூரில் இன்று 7 கடைகள் எரிப்பு: மரக்காணத்தில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பு
வானூரில் இன்று 7 கடைகள் எரிப்பு: மரக்காணத்தில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பு

சென்னை: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக வானூரில் இன்று அதிகாலை  7 கடைகள் எரிக்கப்பட்டதால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சித்ரா பவுர்ணமியையொட்டி, மாமல்லபுரத்தில் நேற்று பா.ம.க. சார்பில் சித்திரை முழு நிலவு இளைஞர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள தமிழ்நாடு, புதுச்சேரியில் இருந்து பா.ம.க.வினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் ஆயிரக்கணக்கான கார், வேன் மற்றும் பேருந்துகளில் சென்றனர்.

அவர்கள் புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை வழியாக தங்களது வாகனங்களில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க கொடிகளை கட்டிக் கொண்டு, கோஷங்களை எழுப்பியவாறு சென்று கொண்டிருந்தனர். அப்போது, நேற்று பிற்பகல் 2 மணி அளவில் மரக்காணம் காலனியை சேர்ந்த 3 பேர் இருசக்கர வாகனங்களில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது மாநாட்டுக்கு சென்று கொண்டு இருந்த வாகனம் ஒன்று திடீரென்று அவர்கள் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் காயம் அடைந்தனர்.

இது பற்றிய தகவல் அறிந்த காலனியை சேர்ந்தவர்கள் மரக்காணம் மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். எந்த வாகனத்தையும் அவர்கள் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ஒரு கும்பல் திடீரென்று போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் வேன் மீது கல் வீசி தாக்கியது. இதில் அவரது கார் முழுவதும் சேதம் அடைந்தது. அதைத்தொடர்ந்து கலவரக்காரர்களை கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரித்தனர். ஆனால் தொடர்ந்து அவர்கள் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.

இதற்கிடையே ஒரு கும்பல் காலனி பகுதிக்குள் நுழைந்து அங்கு இருந்தவர்களை தடி, கம்பு மற்றும் பீர் பாட்டில்களால் தாக்கியது. இதனால் வீடுகளில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். உடனே அந்த கும்பல் அவர்களையும் தடி மற்றும் கம்புகளால் பயங்கரமாக தாக்கியது. இதனால் அவர்கள் பயந்து மரக்காணம் கடற்கரை ஓரம் உள்ள சவுக்கு தோப்புக்குள் புகுந்து மறைந்து கொண்டனர்.

ஒரு கும்பல் மண்டவாய் என்ற கிராமத்தில் சென்னையில் இருந்து வந்த புதுச்சேரி அரசுக்கு சொந்தமான பேருந்து ஒன்றுக்கு தீ வைத்தது. மேலும் அந்த வழியாக வந்த தமிழக அரசுக்கு சொந்தமான 2 பேருந்துகளையும் தீ வைத்து எரித்தனர். இதில் அந்த பேருந்துகள் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. மேலும் புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சென்னையை சேர்ந்த கணேசன் என்பவரது காருக்கும், சில இருசக்கர வாகனங்களுக்கும் தீ வைத்தனர். இதனால் அங்கு பதற்றம் அதிகமானது.

இதைத் தொடர்ந்து கலவரக்காரர்களை நோக்கி போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். ஆனால் தொடர்ந்து கலவரக்காரர்கள் அந்த வழியாக வந்த தமிழக அரசுக்கு சொந்தமான 5 பேருந்துகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். கலவரம் கட்டுக்கடங்காமல் போகவே கலவரத்தை அடக்க வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 3 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

##~~##
இந்த நிலையில் இன்று காலை வானூரில் 7 கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது. தகவல் அறிந்து விரைந்து வந்த ஐ.ஜி. கண்ணப்பன்  விசாரணை நடத்தினார். தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர்.
இதனிடையே, மாநாடு முடிந்து சொந்த ஊர் திரும்ப முயன்ற பா.ம.க.வினர் வாகனம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அனுமதிக்கப்படவில்லை.
மேலும் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கும், புதுச்சேரியில் இருந்து சென்னைக்கும் கிழக்கு கடற்கரை சாலையில் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை.  தனியார் கம்பெனி வாகனங்கள், உள்ளூர் வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
வன்முறை காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் பொது சொத்துகளுக்கு  சேதம் விளைவித்ததாக கூறி மரக்காணம், கோட்டக் குப்பம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வன்முறை காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்களின் கண்ணாடி சிதறல்களாக காணப்படுகின்றன.
வன்முறை மேலும் வெடிக்காமல் இருக்க வஜ்ரா வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.