Published:Updated:

வாகனத்தை ரவுடிகளிடம் கொடுத்து பணம் வசூலித்த எஸ்.ஐ.!

வாகனத்தை ரவுடிகளிடம் கொடுத்து பணம் வசூலித்த எஸ்.ஐ.!
வாகனத்தை ரவுடிகளிடம் கொடுத்து பணம் வசூலித்த எஸ்.ஐ.!

புதுக்கோட்டை: காவல்துறை அதிகாரி ஒருவரே, தனது வாகனத்தை தவறாகப் பயன்படுத்தி தனது கல்லாவை நிரப்பி வந்திருக்கிறார். இந்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்திற்கு எஸ்.ஐ.யாக சுகுமார் என்பவர் சமீபத்தில் பொறுப்புக்கு வந்தார். வந்த வேகத்தில் தன்னை ஒரு நேர்மையான அதிகாரியாக காட்டிக் கொண்டார். ஆனால், இவரின் மறுபக்கம் தற்போதுதான் காவல்துறைக்கே தெரியவந்திருக்கிறது.

தனது டூவீலரை (காவல் என்று எழுதப்பட்டது) இவருக்கு நெருக்கமான ரவுடிகள் இரண்டு பேரிடம் கொடுத்திருக்கிறார். ரவுடிகள் இரண்டு பேரும் எஸ்.ஐ.யின் வாகனத்தைக் கொண்டு, இரவு நேரங்களில் மாட்டு வண்டியில் மணல் அள்ளிச் செல்வோரிடம் மிரட்டி மாமூல் பறித்திருக்கிறார்கள். காலை வரை வசூல் செய்த அவர்கள் இருவரும் கொண்டு வரும் பணத்தை எஸ்.ஐ. உள்பட மூன்று பேரும் பங்கிட்டு கொள்வார்களாம்.

இந்தத் தகவல் குறிப்பிட்ட பட்டுக்கோட்டை காவல் நிலையத்திற்கே தெரியாதாம். பொதுமக்களின் சந்தேகப் பார்வை ரவுடிகள் மீது பட, அவர்கள் காவல்துறைக்கு ரகசிய தகவல் சொல்லியிருக்கிறார்கள். அதன்பிறகுதான் காவல்துறையே விழித்துக் கொண்டிருக்கிறது.

##~~##
விசாரணையில், நடந்தவைகள் அனைத்தும் உண்மையென அறிந்த எஸ்.பி. அன்பு, சம்பந்தப்பட்ட எஸ்.ஐ. சுகுமாரை ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்துள்ளார்.
குற்றச்செயலில் ஈடுபட்ட ரவுடிகள் இரண்டு பேர் மீதும் வேறொரு வழக்கு பதிவு செய்து கைது செய்திருக்கின்றனர்.
எஸ்.ஐ. சுகுமார் பட்டுக்கோட்டை வரும்போது நேர்மையானவராகத்தான் வந்தாராம். காவல் நிலையத்தில் பணிபுரியும் மூன்று போலீசார் தான் அவரை இந்த நிலைக்கு ஆளாக்கியிருக்கிறார்களாம். தற்போது சுகுமார் மட்டுமே மாட்டியிருக்கிறார். விரைவிலேயே சம்பந்தப்பட்டவர்கள் சிக்குவார்கள் என காவல்துறை தரப்பினர் கூறுகின்றனர்.
வீ.மாணிக்கவாசகம்