Published:Updated:

லத்தி... துப்பாக்கி... இப்போது பெப்பர் ஸ்ப்ரே! - மக்களை மிரட்டும் போலீஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
லத்தி... துப்பாக்கி... இப்போது பெப்பர் ஸ்ப்ரே! - மக்களை மிரட்டும் போலீஸ்
லத்தி... துப்பாக்கி... இப்போது பெப்பர் ஸ்ப்ரே! - மக்களை மிரட்டும் போலீஸ்

லத்தி... துப்பாக்கி... இப்போது பெப்பர் ஸ்ப்ரே! - மக்களை மிரட்டும் போலீஸ்

பிரீமியம் ஸ்டோரி

சென்னை ராயப்பேட்டையில் ஜூலை 2-ம் தேதி இரவு தகராறு செய்த ரவுடி ஆனந்தன் உள்ளிட்ட கும்பலைக் கலைந்து செல்லச் சொன்ன தலைமைக் காவலர் ராஜவேலு, அந்தக் கும்பலால் வெட்டப்பட்டார். அடுத்த 24 மணி நேரத்தில் என்கவுன்டரில் ஆனந்தன் சுட்டுக் கொல்லப்பட்டார். காவலர் ராஜவேலு ரோந்து சென்றபோது, ஆனந்தனும் அவரின் நண்பர்களும் மது அருந்திக்கொண்டிருந்ததாகவும், போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ராஜவேலுவை வெட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங் களில் இதுபோல சுமார் 70 போலீஸார் தாக்கப்பட்டுள்ளனர். இந்தக் குற்றச்செயல்களில் பெரும்பாலானவை குடிபோதையில் நிகழ்த்தப்பட்டவை என்பதால், இதுபோன்ற வன்முறைகளைக் கையாள ஒரு புதிய வழிமுறையைக் கையில் எடுத்திருக்கிறது காவல்துறை. மது போதையில் பொது இடங்களில் தகராறு செய்பவர்களின் கண்களில் ‘பெப்பர் ஸ்ப்ரே’ அடித்துக் கட்டுப்படுத்துவதுதான் அந்த வழிமுறை. இதற்காக, பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து 400 ‘பெப்பர் ஸ்ப்ரே’ பாட்டில்களை சென்னை மாநகரக் காவல்துறை வாங்கியுள்ளது. சோதனை முயற்சியாக, சென்னை அம்பத்தூர் வட்டத்தில் உள்ள 15 காவல் நிலையங்களுக்கு தலா 10 பெப்பர் ஸ்ப்ரே பாட்டில்கள் வழங்கப்பட்டுள்ளன. காவல்துறையின் இந்த முடிவு இப்போது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

லத்தி... துப்பாக்கி... இப்போது பெப்பர் ஸ்ப்ரே! - மக்களை மிரட்டும் போலீஸ்

போலீஸைத் தாக்க முற்படுகிற அல்லது பொதுமக்களின் இயல்பைக் குலைக்கிற ரவுடிகள்மீது நடவடிக்கை எடுப்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால், இந்த பெப்பர் ஸ்ப்ரே தாக்குதல், சாதாரண மக்கள்மீதும் நிகழ்த்தப்படலாம். ‘இந்த ஸ்ப்ரேயை அடித்தால் சருமத்திலும் கண்களிலும் கடும் எரிச்சல் ஏற்படும். சுவாசமும் பாதிக்கப்படும். நெடுநாள் பாதிப்புகளும் ஏற்படக்கூடும்’ என்கிறார்கள் மருத்துவர்கள். பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து மனித உரிமை ஆணையமும் இந்த விவகாரத்தைத் தானாக முன்வந்து விசாரிக்கத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து இரண்டு வாரங்களுக்குள் பதில் தருமாறு காவல்துறைக்கு நோட்டீஸும் அனுப்பியிருக்கிறது.

மனித உரிமை செயற்பாட்டாளர் ஹென்றி திபேன் ஆதங்கமாக நம்மிடம் பேசினார். ‘‘கண்ணீர்ப்புகை குண்டுகளை விட இந்த ஸ்ப்ரே வேகமாகச் செயல்படும் என்று சொல்கிறார்கள். இதனால், கண் பார்வை பறிபோனால் அவர்களுக்கு யார் இழப்பீடு தருவார்கள்? நகரம், கிராமம் வித்தியாசமின்றி மதுக்கடை களைத் திறந்து, மது அருந்துபவர்களின் எண்ணிக்கையை அரசு உயர்த்திவருகிறது. மது போதையில் உள்ள மனிதன் தன்னிலை இழப்பது இயல்பு. மதுவால் நிகழும் குற்றச் செயல்களுக்குத் தீர்வு, மது விற்பனையைக் கட்டுப்படுத்துவதும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதும்தானே தவிர, பெப்பர் ஸ்ப்ரே அடிப்பதல்ல!

லத்தி... துப்பாக்கி... இப்போது பெப்பர் ஸ்ப்ரே! - மக்களை மிரட்டும் போலீஸ்

ரவுடிகளிடமிருந்தும், தகராறு செய்பவர்களிடமிருந்தும் தற்காத்துக்கொள்ளத் தான் காவலர்களுக்கு லத்தி, துப்பாக்கியெல்லாம் தந்திருக்கிறார்கள். அப்பாவிப் பொதுமக்கள்மீது இவற்றையெல்லாம் காவலர்கள் பிரயோகிக்கத் தான் செய்கிறார்கள். பிறகு எதற்கு பெப்பர் ஸ்ப்ரே? இதைப் பயன்படுத்தும் அதிகாரத்தை யார் இவர்களுக்குக் கொடுத்தது? எந்தச்  சட்டத்தில் இதற்கு இடமிருக்கிறது? முதலில், ‘குடிபோதையில் இருப்பவர்கள்மீதுதான் இதைப் பயன்படுத்துகிறோம்’ என்று ஆரம்பிப்பார்கள். பிறகு எல்லோர்மீதும் பயன்படுத்தக்கூடும். எனவே, கண்டிப்பாக இதற்குத் தடைவிதிக்க வேண்டும்’’ என்கிறார் ஹென்றி திபேன்.

ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி சித்தண்ணன், ‘‘இந்திய தண்டனைச் சட்டம் 149  மற்றும் சட்டப்பிரிவு 46 உள்பட பல பிரிவுகளில் ‘குற்றம் நடக்கிற இடங்களில் விரைந்து அவற்றைத் தடுக்கக் காவல்துறை அனைத்து அவசியமான நடவடிக்கையிலும் ஈடுபடலாம்’ எனச் சொல்லப்பட்டுள்ளது. ‘மரணம் விளைவிக்கும்வரை பலத்தைப் பிரயோகிக்கலாம்’ என்றுகூட அந்தப் பிரிவுகள் சொல்கின்றன. ‘லத்திதான் பயன்படுத்தவேண்டும்’ என்றோ, ‘துப்பாக்கிதான் பயன்படுத்த வேண்டும்’ என்றோ எந்த இடத்திலும் சொல்லப்பட வில்லை. ‘பெப்பர் ஸ்ப்ரே பயன்படுத்தக் கூடாது’ என்றும் எந்த இடத்திலும் கூறப்படவில்லை. இந்திய தண்டனைச் சட்டம் 100, ‘தற்காப்புக்காகப் பெண்கள் பெப்பர் ஸ்ப்ரே பயன்படுத்தலாம்’ என்கிறது. இது சாதாரண மக்களுக்கே சட்டம் தந்திருக்கிற உரிமை. எனவே, போலீஸுக்கு அதிகாரம் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது.

லத்தி... துப்பாக்கி... இப்போது பெப்பர் ஸ்ப்ரே! - மக்களை மிரட்டும் போலீஸ்

சாதாரண மனிதர்களுக்கும் போதையில் இருப்பவர்களுக்கும் வித்தியாசம் உள்ளது. போதையில் இருப்பவர்கள் பயப்படமாட்டார்கள். அவர்களின் செயல்பாட்டில் நிதானம் இருக்காது. யாரைப்பற்றியும் கவலைப்பட மாட்டார்கள். இந்தச்சூழலில் கண்களில் பெப்பர் ஸ்ப்ரே அடித்தால், அவர்கள் நிலைகுலைந்து போவார்கள். கண்களைத் திறக்க முடியாது. உடனடியாக அவரின் குற்ற நடவடிக்கையைத் தடுத்துவிடலாம். லத்தியால் தாக்கினால், தள்ளாடி விழுந்தோ அல்லது படக் கூடாத இடங்களில் பட்டோ உயிரிழக்க வாய்ப்பிருக்கிறது. பெப்பர் ஸ்ப்ரே பயன்படுத்துவதில் ஒரு தவறுமில்லை.  

தவறு செய்யாதவர்கள்மீது பெப்பர் ஸ்ப்ரே அடித்தால், ‘மனித உரிமை பாதிக்கப்படுகிறது’ என்று சொல்லலாம். போதையில் தகராறு செய்பவர்களுக்காகக் குரல் கொடுக்கும் மனித உரிமைக் காவலர்கள், ஏன் ரவுடி ஆனந்தனால் வெட்டப்பட்ட காவலர் ராஜவேலுக்காகக் குரல் கொடுக்கவில்லை? மனித உரிமை ஆணையம் ஏன் தானாக முன்வந்து வழக்குத் தொடரவில்லை? போலீஸாரும் மனிதர்கள்தான்’’ என்கிறார் சித்தண்ணன்.

பெப்பர் ஸ்ப்ரேவை கண்களில் அடிப்பதால் என்னெனன பாதிப்புகள் ஏற்படும்? கண் மருத்துவர் திரிவேணியிடம் கேட்டோம். ‘‘கண்களில் கடும் எரிச்சல் ஏற்படும். கண்களைக் கசக்கினால் கார்னியாவில் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உண்டு. சருமத்தில் பட்டால் எரிச்சல் ஏற்படும். இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு அதன் பாதிப்பு இருக்கும். எவ்வளவு பெப்பர் ஸ்ப்ரே தெளிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து, பாதிப்பின் தன்மை வேறுபடும்’’ என்கிறார் அவர்.

பாவம் ‘குடிமகன்’கள்!

- ஜி.லட்சுமணன்
படம்: எஸ்.விவேகானந்தன்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு