Published:Updated:

மரக்காணம் கலவர குற்றவாளிகள் இதுவரை ஏன் கைது செய்யப்படவில்லை: மார்க்சிஸ்ட் கேள்வி

மரக்காணம் கலவர குற்றவாளிகள் இதுவரை ஏன் கைது செய்யப்படவில்லை: மார்க்சிஸ்ட் கேள்வி
மரக்காணம் கலவர குற்றவாளிகள் இதுவரை ஏன் கைது செய்யப்படவில்லை: மார்க்சிஸ்ட் கேள்வி
மரக்காணம் கலவர குற்றவாளிகள் இதுவரை ஏன் கைது செய்யப்படவில்லை: மார்க்சிஸ்ட் கேள்வி

சென்னை: மரக்காணத்தில் நடைபெற்ற கலவரம் சம்பந்தமாக காவல்துறை வழக்கு பதிவு செய்திருந்தும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாதது ஏன் என மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் நேற்று சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் செல்வசிங் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, பி.சம்பத், அ.சவுந்தரராசன், கே.பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், "மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னியர் சங்க விழாவிற்கு வாகனங்களில் வந்த பா.ம.க தொண்டர்கள் பாண்டிச்சேரியை அடுத்து வழிநெடுகிலும் சென்றவர்கள் மீது மதுபாட்டில்கள் வீசி தாக்கியுள்ளனர். மரக்காணத்தை அடுத்த கடையன் தெரு என்ற தலித் மக்கள் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் சில வீடுகளில் பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. தாக்குதலில் சிலர் காயமடைந்துள்ளனர். இதுமட்டுமின்றி அரசுப் பேருந்துகள், காவல்துறை வாகனங்கள் மற்றும் பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. வாகன போக்குவரத்து நெரிசலில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் உள்ளன. இதன் காரணமாக இப்பகுதி முழுவதும் பதற்றமான நிலைமை நீடித்து வருகிறது.

ஏற்கனவே தருமபுரி மாவட்டத்தில் தலித் மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்ட வலியும், வேதனையும் அடங்குவதற்குள்ளே மீண்டும் தற்போது வன்முறைச் சம்பவம் நடத்தப்பட்டு தலித் மக்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியையும், கவலையும் அளிக்கிறது. இத்தகைய தாக்குதல் குறித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

நடைபெற்றுள்ள சம்பவங்கள் குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது, ஏன் என்ற கேள்வி எழுகிறது. இவ்வாறு சாதிக் கலவரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது காவல்துறை தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுப்பதன் மூலமே எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்திடமுடியும் என்பதை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

##~~##
கடந்தாண்டு மாமல்லபுரத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய பேச்சுக்கள் தான் தருமபுரிச் சம்பவத்திற்கு அடிப்படையாக அமைந்தது என்பது அனைவரும் அறிந்ததே. மீண்டும் இந்த ஆண்டு நடைபெற்ற விழாவிலும் தலித் மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதும், அதன் மூலம் பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் தன்மையில் பேச்சுக்கள் அமைந்துள்ளது கண்டிக்கத் தகுந்ததாகும்.
சமூக பணி பாரம்பரியம் கொண்ட தமிழகத்தில் சாதிக்கலவரத்தை திட்டமிட்டு உருவாக்க முனைவதை அனுமதிக்கக்கூடாது. தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, நலனை காக்க சாதி வித்தியாசமில்லாமல் உழைக்கும் மக்கள் ஒன்றுபட்டு போராட வேண்டிய நேரத்தில், உழைப்பாளி மக்களாக உள்ள பிற்படுத்தப்பட்ட, தலித் மக்களிடையே மோதலை உருவாக்கி, அரசியல் ஆதாயம் தேடும் சக்திகள் மீதும் தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
மேலும் தமிழக மக்களும் இத்தகைய சக்திகளின் நடவடிக்கைகளுக்கு இரையாகாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமெனவும், அமைதி காக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கேட்டுக்கொள்கிறது" என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.