Published:Updated:

“கவருமெண்டு போடுற சோறுதான்... அதுக்காக ஜாதி கௌரவத்தை விடமுடியுமா?”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“கவருமெண்டு போடுற சோறுதான்... அதுக்காக ஜாதி கௌரவத்தை விடமுடியுமா?”
“கவருமெண்டு போடுற சோறுதான்... அதுக்காக ஜாதி கௌரவத்தை விடமுடியுமா?”

சாப்பாட்டில் ஜாதி பார்க்கும் சமூகம்

பிரீமியம் ஸ்டோரி

மிழகத்தில் தீண்டாமைக் கொடுமைகள் பல வடிவங்களில் இன்னும் நீடிக்கின்றன. விருதுநகர் மாவட்டம்  கம்மாபட்டியில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளியில் சமையலராக இருந்தவர் தலித் என்பதால், தங்கள் பிள்ளைகள் அங்கு சாப்பிட மாட்டார்கள் என்று வேற்று ஜாதியைச் சேர்ந்த பெற்றோர்கள், ஜாதிய வன்மத்துடன் நடந்துகொண்டனர். அதற்கு, கடும் கண்டனம் எழுந்தது. அதைப்போன்ற ஒரு சம்பவம் இப்போது திருப்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே திருமலைக் கவுண்டம்பாளையம் என்ற ஊரில், அரசு உயர்நிலைப் பள்ளியின் சத்துணவு சமையலராக மாற்றுப்பணி பெற்று வந்தார் பாப்பாள். உடனே, அந்தப் பள்ளியில் படிக்கும் சில மாணவர்களின் பெற்றோர், பெரும் ரகளையில் ஈடுபட்டனர். அந்த சமையலரைப் பணிசெய்யவிடாமல் தடுத்ததுடன், பள்ளிக்கூடத்துக்குப் பூட்டுப்போட்டனர். சமையலர் பாப்பாள், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதே காரணம்.

‘தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த ஒருவர், எங்கள் பிள்ளைகளுக்கு சமைத்துப் போடுவதா? இனி, எங்கள் பிள்ளைகளை இந்தப் பள்ளிக்கூடத்துக்கே அனுப்பமாட்டோம்’ என்று அவர்கள் தகராறு செய்தனர். அதனால், அந்த சமையலரை, முன்பு பணியாற்றிய பள்ளிக்கூடத்துக்கே அதிகாரிகள் திருப்பியனுப்பி, அப்பட்டமான இந்த சாதியக் கொடுமைக்குத் துணைபோயினர், இதற்கு, பல தரப்பினரிடமிருந்தும் கண்டனம் எழுந்தது.

“கவருமெண்டு போடுற சோறுதான்... அதுக்காக ஜாதி கௌரவத்தை விடமுடியுமா?”

இந்த விவகாரம் தொடர்பாக, திருப்பூர் மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், டி.எஸ்.பி ஆகியோரை நேரில் ஆஜராகுமாறு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால், சமையலர் பாப்பாளை, திருமலை கவுண்டம்பாளையம் பள்ளிக்கே பணிமாற்றல் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. தீண்டாமைக் கொடுமையில் ஈடுபட்ட 87 பேர்மீது எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளான பாப்பாள் தரப்பினரிடம் பேசினோம். “இங்கிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள ஒச்சாம்பாளையம் அரசுத் தொடக்கப் பள்ளியில் 12 வருஷமா பாப்பாள் வேலை பார்த்தாங்க. திருமலைக் கவுண்டம்பாளையம் சொந்த ஊருன்றதால, இங்க மாறுதல்ல வர்றதுக்கு ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. ஜூலை 17-ம் தேதி காலையில சமையல்கூடத்துக்குள் நுழைஞ்சதும், ஊர்க்காரங்க சிலபேர் திரண்டுவந்து, ‘நீ எப்படி எங்க புள்ளைங்களுக்கு சமைச்சுப்போடலாம்? உன் கைப்பட்ட சோத்த திங்கிறத்துக்கா எங்க புள்ளைங்களை ஸ்கூலுக்கு அனுப்புறோம்’னு சொல்லி அசிங்கமா திட்டினாங்க. எங்களோட சாதியைச் சொல்லி, ‘உனக்கெல்லாம் கவுருமெண்டு வேலை ஒரு கேடா?’ன்னு ரொம்ப மோசமா திட்டினாங்க. பாப்பாளுக்கு ரொம்ப அவமானமா போச்சு. ‘இங்கேருந்து போயிரு’ன்னு சொல்லி சமையல் அறையிலிருந்து பாப்பாளைத் துரத்திட்டாங்க. மறுநாள் காலையில நிறைய பேர் ஸ்கூலுக்கு வந்து ரகளை செஞ்சாங்க. டீச்சருங்ககிட்ட போய், ‘இவ இங்கே இருக்கவே கூடாது’ன்னு மிரட்டினாங்க. அதுக்கப்புறம்தான், அதிகாரிகள் மறுபடியும் பழைய ஸ்கூலுக்கே அவரை அனுப்பிட்டாங்க. ஆரம்பத்திலேயே திருமலை கவுண்டம்பாளையம் ஸ்கூல்லதான் பாப்பாளுக்கு வேலை கெடச்சுது. அப்பவும், இதே மாதிரி ரகளை பண்ணினாங்க. அதுக்கப்புறம் கந்தாயிபாளையம், வையாபுரி கவுண்டம்புதூர் ஆகிய ஊர்கள்ல வேலை செஞ்சாங்க. அங்கேயும், சாதிப் பேரைச் சொல்லி இவங்களை வேலை செய்யவிடாம ஆதிக்க சாதிக்காரங்க பிரச்னை செஞ்சாங்க. சொந்த ஊர்ல இந்த மாதிரி அசிங்கப்படுத்திட்டாங்க. இந்த இன்டர்நெட் காலத்திலேயும் சக மனுஷங்ககிட்ட சாதி பாக்குறது அசிங்கமில்லையா?” என்றனர் வேதனையுடன்.

பாப்பாளின் கணவர் பழனிசாமி, “என் மனைவி அதிகாலையிலே எந்திரிச்சு, சமைச்சு முடிச்சு, குழந்தைங்களைப் பள்ளிக்கு கிளப்பி விட்டுட்டு, அவசர அவசரமா பஸ்ஸைப் புடிச்சு ஒச்சாபாளையம் பள்ளிக்கூடத்துக்கு ஓடுவா. பாதிநாளு அவ சோறு தண்ணியே குடிச்சதில்ல. நம்ம ஊர்லயே வேலை வந்திருச்சுன்னு சந்தோசப் பட்டோம். இப்போ, ரொம்ப வேதனையா இருக்கு” என்றார் விரக்தியுடன்.

“கவருமெண்டு போடுற சோறுதான்... அதுக்காக ஜாதி கௌரவத்தை விடமுடியுமா?”

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் நந்தகோபால், “இந்தப் பகுதியில் தீண்டாமைக் கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. திருமலைக் கவுண்டம்பாளையம் பள்ளிக்கூடத்தில், ஆதிக்க ஜாதி மாணவர்களுக்கு ஆர்.ஓ தண்ணீரும், தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்குk குடத்தில் சாதாரண தண்ணீரும் என வைத்துள்ளார்கள். இத்தனைக்கும், இது சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலின் தொகுதி” என்று குமுறினார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிசாமியிடம் பேசினோம். “இந்தப் பிரச்னை குறித்து சார் ஆட்சியர் தலைமையில் விசாரணை நடக்கிறது. சமையலர் பாப்பாளை அதே பள்ளியில் பணியாற்ற உத்தரவிட்டுள்ளோம். சாதிரீதியான பாகுபாட்டை அனுமதிக்க முடியாது” என்றார்.

பாப்பாளை சமைக்க விடாமல் எதிர்த்த ஆதிக்க ஜாதியினர் சிலரிடம் பேசினோம். “இந்த வட்டாரத்துல எந்தப் பள்ளிக்கூடத்திலேயும்  கீழ்ஜாதிக்காரங்க சமைக்கலை. எங்க ஊர்ல மட்டும் சமைக்க விட்டோம்னா, நாளைக்கு எங்க சொந்தபந்தம் முன்னாடி நாங்க தலைநிமிர்ந்து நடக்க முடியுமா? கவுருமெண்டு போடுற சோறுதான்... அதுக்காக ஜாதி கௌரவத்தை விட முடியுமா’ என்றனர்.

இந்தப் பள்ளியில் 75 மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்களில், 45-க்கும் மேற்பட்டோர் பள்ளியில் சத்துணவு சாப்பிடு கிறார்கள். இந்தப் பிரச்னைக்குப்பின், ஆதிக்க ஜாதியைச் சேர்ந்த 29 மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை.

சாப்பாட்டிலும் ஜாதி பார்க்கிறது இந்த சமூகம். கொடுமையிலும் கொடுமை!

- தி.ஜெயப்பிரகாஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு