Published:Updated:

500 பேரிடம் ரூ.50 கோடி மோசடி: மீண்டும் ஒரு ஈமுக்கோழி அதிபர் கைது!

500 பேரிடம் ரூ.50 கோடி மோசடி: மீண்டும் ஒரு ஈமுக்கோழி அதிபர் கைது!
500 பேரிடம் ரூ.50 கோடி மோசடி: மீண்டும் ஒரு ஈமுக்கோழி அதிபர் கைது!
500 பேரிடம் ரூ.50 கோடி மோசடி: மீண்டும் ஒரு ஈமுக்கோழி அதிபர் கைது!

திருப்பூர்: ஈமு கோழி மோசடி விவகாரத்தில் 500 பேரிடம் 50 கோடி ரூபாய் மோசடி செய்த மணிகண்டன் என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

ஈமுக்கோழி வளர்ப்பு தொழில் என்ற பெயரில் கவர்ச்சி விளம்பரங்கள் மூலம் பொதுமக்களிடம் முதலீடு பெற்று அதை முறையாக திருப்பித்தராமல் மோசடி செய்த 25 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குத் தொடர்ந்தனர். அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் சிலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இன்னும் சில நிறுவனத்தினர் முதலீட்டாளர்களை சமாதானம் செய்து, அவர்கள் தங்கள் மீது போலீஸுக்கு போகாமல் பார்த்துக்கொண்டனர். ஒருகட்டத்திற்கு மேல் இவர்கள் சமாதானம் எடுபடவில்லை. முதலீட்டாளர்கள் புகார் கொடுத்து விட்டதை தொடர்ந்து, 6 மோசடி நிறுவனங்களின் உரிமையாளர்கள் பல மாதங்களாக தலைமறைவாகி விட்டனர். அதில் ஒருவர்தான் ‘வெல்டெக்ஸ்‘ ஒப்பந்தமுறை ஈமுக்கோழி நிறுவன உரிமையாளர் மணிகண்டன் என்கிற மணிராஜ்.

திருப்பூர் அடுத்துள்ள பொல்லிக்காளிபாளையத்தில் இயங்கி வந்த ‘வெல்டெக்ஸ்‘ நிறுவனத்திற்கு கோவை, ஈரோடு, தேனி உள்ளிட்ட 15 ஊர்களில் கிளைகளும் உண்டு. ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 9,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும், ஆண்டு முடிவில் முதலீடு செய்த பணமும் திரும்ப கொடுக்கப்படும் என்கிற கவர்ச்சிகர விளம்பரத்தை நம்பி, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர், கடந்த 2 வருடங்களில் வெல்டெக்ஸ் நிறுவனத்தில் 500 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். ஒப்பந்தப்படி சில மாதங்கள் மட்டுமே முதலீட்டாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி வந்த மணிராஜ், ஈமுக்கோழி தொழிலை விட்டு ‘வெல்டெக்ஸ்' என்ற பெயரில் பல ஊர்களில் வேட்டி, சட்டை, மற்றும் உள்ளாடை ஷோ ரூம்களை தொடங்கி அதில் பரபரப்பாகி விட்டார்.

இதில் அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள், ஊக்கத்தொகை மற்றும் முதலீட்டு பணத்தை கேட்டுள்ளனர். 'முதலீட்டு பணத்தை ஜவுளிதொழிலில் போட்டு விட்டேன். இந்தியா முழுதும் 1,000 ஷோரூம் திறக்கவுள்ளேன். சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்போகிறேன். அதன் மூலம் பலநூறு கோடி லாபம் வரும் அந்த பணத்தை உங்களுக்கு பங்கு போட்டு தருகிறேன். அதுவரை பணம் கேட்டு யாரும் என்னிடம் வரக்கூடாது' என்று மிரட்டல் தொனியில் சொல்லியுள்ளார் மணிராஜ். இதில் அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள், சிலர் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் மணிராஜ் மீது புகார் கொடுத்துள்ளனர். இதை அறிந்த மணிராஜ் தலைமறைவாகி விட்டார்.

##~~##
பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி.ஈஸ்வரி தலைமையிலான தனிப்படை போலீசார் சென்னை, கோவை, ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பல இடங்களில் வலை வீசி மணிராஜை தேடி வந்தனர். இந்தநிலையில், திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உறவினர் ஒருவர் வீட்டில் பதுங்கி இருந்த மணிராஜை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து மணிராஜ் மீது 120 பி (கூட்டுசதி), 406 (நம்ப வைத்து ஏமாற்றுதல்),  தமிழக முதலீட்டாளர் பாதுகாப்பு சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து ரகசிய இடத்தில் வைத்து இவரிடம் விசாரணை நடந்து வருகிறது. சினிமா நடிகைகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கும் மணிராஜுக்கும் தொடர்பு உள்ளது என்று தகவல்கள் கசிந்து கொண்டிருப்பதால், 'மேல் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரலாம்' என்கிறது போலீஸ் வட்டாரம்.
ஜி.பழனிச்சாமி