Published:Updated:

மதுரையில் கல்லூரி மாணவிகள் 3 பேர் மாயம்

மதுரையில் கல்லூரி மாணவிகள் 3 பேர் மாயம்
மதுரையில் கல்லூரி மாணவிகள் 3 பேர் மாயம்

மதுரை: மதுரையில் கல்லூரி மாணவிகள் 3 பேர் மாயமான சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை செல்லூர் பூந்தமல்லி நகரை சேர்ந்தவர் முகம்மது ஹாபில். இவருடைய மகள் செய்யது அபுசபர் நிஷா. இவர் மதுரை டி.பி.கே. ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த 3ஆம் தேதி செமஸ்டர் தேர்வு எழுத கல்லூரிக்குச் சென்ற இவர், மாலையில் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அந்த மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதேபோல மதுரை கோரிப்பாளையம் அருகே உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் படிக்கும் மாணவி இந்துமதியும் கடந்த 4ஆம் தேதி மாயமானார். இவர் பி.டி.ஆர். மெயின்ரோட்டைச் சேர்ந்த வேல்முருகன் என்பவரது மகள். தேர்வு எழுதச் சென்ற தன் மகள் மாயமானது குறித்து வேல்முருகன் கொடுத்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள கே.சென்னம்பட்டியைச் சேர்ந்தவர் பிச்சைக்கனி. இவரது மகள் விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்.ஸி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். விடுதி மாணவியான இவர், கடந்த 5ஆம் தேதி வீட்டிற்கு வந்தார். அன்று மாலையில் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. கல்லூரிக்கும் செல்லவில்லை.

இதுகுறித்து போலீசில் புகார் செய்த தந்தை பிச்சைக்கனி, தன் மகளை குராயூரை சேர்ந்த சுந்தரபாண்டியன் என்ற வாலிபர் கடத்திச் சென்றிருக்கலாம் என்று தெரிவித்தார். அதன் அடிப்படையில் கள்ளிக்குடி போலீசார் வழக்குப் பதிந்து அந்த மாணவியைத் தேடி வருகின்றனர்.

அடிக்கடி கல்லூரி மாணவிகள் காணாமல் போகும் சம்பவம் மதுரையிலுள்ள பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

-கே.கே.மகேஷ், செ.சல்மான்