Published:Updated:

ரோந்து காவலர்களைக் கண்காணிக்கப் புதிய செயலி! - கடலூரில் அறிமுகம்

ரோந்து காவலர்களைக் கண்காணிக்கப் புதிய செயலி! - கடலூரில் அறிமுகம்
ரோந்து காவலர்களைக் கண்காணிக்கப் புதிய செயலி! - கடலூரில் அறிமுகம்

கடலூர் காவல் துறையில் ரோந்து காவலர்களைக் கண்காணிக்க புதிய செயலி இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் ரோந்து செல்லும் காவலர்கள் எந்த நேரத்தில், எந்த இடத்தில் பணி செய்துகொண்டிருக்கிறார் என்பதை உயர் அதிகாரிகள் மொபைல் ஆப் மூலம் கண்காணிக்க புதிய செயலி தொடங்கப்பட்டது. இதற்கான தொடக்க விழா கடலூரில் இன்று நடைபெற்றது. 

பழைய நடை முறையில் ரோந்து செல்லும் காவலர்கள் ஒவ்வொரு கிராமத்திலும், நகர்ப் பகுதியில் ஏடிஎம் மையங்கள், குற்றம் நடைபெறும் என்று அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் இருக்கும் பட்டா புத்தகத்தில் கையெழுத்திடுவது வழக்கம். இதேபோல் தணிக்கை செய்யும் அதிகாரிகள் அந்த பீட் புக்கை பெற்று ஆய்வு செய்து கையொப்பம் இடுவார்கள்.  

தற்போது கடலூர் மாவட்டக் கண்காணிப்பாளர் சரவணன் புதிய முயற்சியால் ஹெச்சான் இன்போ டெக் நிறுவனத்தின் உதவியுடன் புதிய ஆப் மூலம் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், பீட் பாயின்டில் கணினி மூலம் கியூஆர் கோடு அடங்கிய பதிவு அட்டைப் பொருத்தப்பட்டு உள்ளது. ரோந்து காவலர்கள் தனது ஆண்டிராய்டு மொபைல் மூலம் ஸ்கேன் செய்தால் அவருடைய விபரம், நேரம், தூரம் ஆகியவை பதிவு செய்யப்படும்.

இந்த விபரங்கள் உடனடியாகக் காவல் நிலையத்தில் உள்ள கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். மேலும், காவல் துறை உயர் அதிகாரிகளின் மொபைல் போனுக்கு இந்த அறிக்கை உடன் பதிவு செய்யப்படும். உயர் அதிகாரிகள் ரோந்து காவலர் எந்த நேரத்தில், எந்த இடத்தில் ரோந்து பணி செய்துகொண்டிருக்கிறார் என்பதைத் தனது மொபைல் மூலமே கண்காணிக்க முடியும். இந்த வசதியை மஞ்சக்குப்பம் ஸ்டேட் பேங்க் வங்கி வளாகத்தில் இ-பட்டா புத்தகம் என்ற புதிய ஆப் வசதியைக் கடலூர் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் சரவணன் தொடங்கி வைத்தார். அப்போது இன்ஸ்பெக்டர் சரவணன், தனியார் நிறுவன அதிகாரி சரண்ராஜ் உட்படப் பலரும் உடனிருந்தனர்.