Published:Updated:

47 ஆண்டுகளுக்கு முன் மாயமான 7 ஐம்பொன் சிலைகள்! - வழக்கு பதிவு செய்த பொன்.மாணிக்கவேல்

47 ஆண்டுகளுக்கு முன் மாயமான 7 ஐம்பொன் சிலைகள்! - வழக்கு பதிவு செய்த பொன்.மாணிக்கவேல்
47 ஆண்டுகளுக்கு முன் மாயமான 7 ஐம்பொன் சிலைகள்! - வழக்கு பதிவு செய்த பொன்.மாணிக்கவேல்

கும்பகோணம் தண்டந்தோட்டம் நடனபுரீஸ்வரர் கோயிலில் பல கோடி மதிப்புள்ள 7 ஐம்பொன் சிலைகள் காணாமல் போய், 47 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காதநிலையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் முதன்முறையாக 47 ஆண்டுக்குப் பிறகு இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ளார்.

கும்பகோணம் அருகே தண்டந்தோட்டத்தில் 1,300 ஆண்டுகள் பழைமையான முற்கால சோழர் காலத்திய சிறப்பு மிக்க நடனபுரீஸ்வரர் கோயில் உள்ளது. கடந்த 12.5.1971 அன்று கோவில் கதவு மற்றும் பூட்டுகள் உடைக்கப்பட்டு 60 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு அடி கிருஷ்ண காளிங்கநர்த்தனம், ஒன்றரை அடி கிருஷ்ண காளிங்க நர்த்தனம், இரண்டடி அகஸ்தியர், தலா ஒன்றரை அடி உயரம் கொண்ட அய்யனார் மற்றும் அம்மன் ஐம்பொன் சிலைகள் என இவை அனைத்தும் காணாமல் போயின.

அதேபோல் 1972-ம் ஆண்டு 50 கோடி ரூபாய் மதிப்பிலான நடராஜர் மற்றும் கொலு அம்மன் ஐம்பொன் சிலைகள் காணாமல் போயின. காணாமல் போன நடராஜர் சிலை லண்டனிலிருந்து, தற்போது அமெரிக்காவில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இக்கோயிலில் காணாமல் போன 7 சிலைகளை தவிர மீதமுள்ள 17 சிலைகள் உப்பிலியப்பன் கோயிலில் கடந்த 40 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த சிலைகள் காணாமல் போனதும், பாதுகாப்பில் உள்ள 17 தொன்மையான சிலைகளில் பல சிலைகள் மாற்றப்பட்டுள்ளதாக தண்டந்தோட்டத்தைச் சேர்ந்த வாசு அய்யர் என்பவர் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் புகார் செய்தார்.

இதையடுத்து, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியான பொன்மாணிக்கவேல், இன்று நடனபுரீஸ்வரர் கோயிலுக்குச் சென்று பார்வையிட்டார். அப்போது கோயில் அர்ச்சகர்களிடம் அங்கிருந்து காணாமல்போன சிலைகள், பாதுகாப்பில் உள்ள சிலைகள் குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து, 47 ஆண்டுகளுக்குப் பிறகு கோயிலில் காணாமல் போன சிலைகள் தொடர்பாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் முதன் முதலாக வழக்கு பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்.