Published:Updated:

தர்மபுரியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் கார் பறிமுதல்

தர்மபுரியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் கார் பறிமுதல்
தர்மபுரியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் கார் பறிமுதல்

தர்மபுரி: சுழல் விளக்கு பொறுத்திய காரில் வலம் வந்ததால், தர்மபுரி மாவட்ட பஞ்சாயத்து தலைவரின் வாகனத்தை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.

தர்மபுரியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் டி.ஆர்.அன்பழகன். இவர் அ.தி.மு.க. கட்சியில் மாநில ஜெயலலிதா பேரவை செயலாளராகவும் இருந்து வருகிறார். இவர் தனது கார்பியோ வாகனத்தில் சுழல் விளக்கு பொறுத்தி நகரத்தின் பல பகுதிகளில் வலம் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தர்மபுரி போலீசார் அதிரடியாக அவரது வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

##~~##
இதுகுறித்து காவல்துறையினரிடம் விசாரித்தபோது, ''முதலமைச்சர், தலைமை நீதிபதிகள், ஆளுநர், ஆற்காடு நவாப் உள்ளிட்ட 18 உயர் பதவிகளில் இருப்பவர்கள் மட்டும்தான் சுழல் விளக்கு பொறுத்திய காரில் வலம் வர சட்டத்தில் விதி உள்ளது. மற்ற உயர் பதவிகளில் உள்ள சிலரும் இதேபோன்று சுழல் விளக்கு பொறுத்திய காரை பயன்படுத்த விரும்பினாலும் அதை சட்டம் அனுமதிக்கவில்லை. இருந்தபோதிலும் அனுமதியின்றி இந்த விளக்கை பொறுத்தி வலம் வருகின்றனர்.
இந்நிலையில் தர்மபுரி போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கார் தர்மபுரி நகர பி.1 காவல்நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் மீது பெரிய அளவிலான குற்ற நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்பில்லை என்றாலும், குறைந்தபட்ச அபராதம் விதிப்பதோடு,  காவல்துறை மூலம் கடுமையான எச்சரிக்கை விடப்படும் என்று தெரியவருகிறது.
உயர் பதவியில் இருக்கும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒருவரின் கார் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தர்மபுரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்.ராஜாசெல்லம்