Published:Updated:

இந்து இயக்கத்தினரின் கொலைகள் காவல்துறையின் இயலாமை: விஸ்வ இந்து பரிஷத் குற்றச்சாட்டு

இந்து இயக்கத்தினரின் கொலைகள் காவல்துறையின் இயலாமை: விஸ்வ இந்து பரிஷத் குற்றச்சாட்டு
இந்து இயக்கத்தினரின் கொலைகள் காவல்துறையின் இயலாமை: விஸ்வ இந்து பரிஷத் குற்றச்சாட்டு
இந்து இயக்கத்தினரின் கொலைகள் காவல்துறையின் இயலாமை: விஸ்வ இந்து பரிஷத் குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் இந்து இயக்கத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருவது, தமிழக அரசின் அலட்சியத்தையும், காவல்துறையின் இயலாமையையும்தான் காட்டுகிறது என்று விஸ்வ இந்து பரிஷத்தின் செயல் தலைவர் ஆர்.எஸ்.நாராயணசாமி கூறியுள்ளார்.

சேலத்தில் நேற்று (19.07.13) இரவு மர்ம நபர்களால் பா.ஜ.க. மாநில செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், இது தொடர்பாக விஸ்வ இந்து பரிஷத்தின் செயல் தலைவர் நாராயணசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "பா.ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளரான ஆடிட்டர் ரமேஷ் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 9.30  மணியளவில் சேலத்தில் தன்னுடைய அலுவலகத்தில் சில மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் செய்தியைக்கேட்டு பேரதிர்ச்சியும் மிகவும் துயரமும் அடைந்துள்ளோம்.

இம்மாதம் 1 ஆம் தேதிதான் வேலூரில் இந்து முன்னணியின் தேசியச் செயலர் வெள்ளையப்பன் படுகொலை செய்யப்பட்டார். இன்றுவரை கொலையாளிகள் கைதும் செய்யப்படவில்லை; அவர்கள் யார் என்பதையும் மாநிலக் காவல்துறை கண்டுபிடிக்கவில்லை.

அதே வேலூரில் சென்ற வருடம் அக்டோபர் மாதம் 23ஆ-ம் தேதியன்று பா.ஜ.க. மருத்துவர் அணி மாநிலச் செயலாளர் டாக்டர் அர்விந்த் ரெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கிலும் இன்றுவரை கொலையாளிகளை மாநிலக் காவல்துறை கண்டுபிடிக்கவில்லை.

உதகை குன்னூரில் இந்து முன்னணியைச் சேர்ந்த ஹரி, நாகர்கோவிலில் பா.ஜ.க. மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி, மேட்டுப்பாளையத்தில் ஆர்.எஸ்.எஸ். செயலாளர் ஆனந்த் ஆகியோர் பயங்கரவாதிகளால் கொலைவெறியோடு தாக்கப்பட்டனர்.

தமிழகத்தில் ஹிந்து இயக்கங்களை சேர்ந்தவர்கள் கொல்லப்படுவதும் தாக்கப்படுவதும் வாடிக்கையாக நடந்து வருவது காவல்துறையின் இயலாமையையும், அரசின் அலட்சியத்தையும் காட்டுகிறது. இரும்புப் பெண்மணி என்று பெயர் பெற்ற ஜெயலலிதாவின் ஆட்சியில் இவ்வாறு தொடர்ந்து இந்து இயக்கத்தினர் தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் அவருடைய அரசின் அலட்சியத்தையும், சட்டம் ஒழுங்கு முழுவதுமாக சீர்குலைந்து விட்டது என்பதையும் காட்டுகிறது.

##~~##
டாக்டர் அர்விந்த் ரெட்டி, வெள்ளையப்பன், ஆடிட்டர் ரமேஷ் ஆகியோரைக் கொன்ற கொலையாளிகளை உடனடியாகக் கண்டுபிடித்து தண்டிக்குமாறு காவல்துறையை முதல்வர் அறிவுறுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். அரசின் அலட்சியத்தை ஹிந்து சமுதாயம் கவனித்துக் கொண்டிருக்கிறது. எனவே இவ்விஷயத்தில் இனியும் காலம் தாழ்த்தாமல் தீவிர நடவடிக்கைகளை முதல்வர் எடுப்பார் என்று நம்புகிறோம்.
சிறந்த செயல்வீரரும், பழகுவதற்கு இனியவருமான ஆடிட்டர் ரமேஷின் மறைவு அவருடைய குடும்பத்திற்கும், பா.ஜ.க. கட்சிக்கும் மட்டுமல்லாது ஹிந்து சமுதாயத்திற்கே பேரிழப்பாகும். அவருடைய குடும்பத்தாருக்கும் பா.ஜ.க. கட்சியினருக்கும் எங்களுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்" என்று கூறியுள்ளார்.