Published:Updated:

100 கிருஷ்ணமூர்த்திகள் முளைப்பார்கள்: போலி பாஸ்போர்ட் மன்னன் வாக்குமூலம்!

100 கிருஷ்ணமூர்த்திகள் முளைப்பார்கள்: போலி பாஸ்போர்ட் மன்னன் வாக்குமூலம்!
100 கிருஷ்ணமூர்த்திகள் முளைப்பார்கள்: போலி பாஸ்போர்ட் மன்னன் வாக்குமூலம்!

சென்னை: என்னை சிறைக்கு அனுப்பினால், என்னைப்போல 100 கிருஷ்ணமூர்த்திகள் முளைத்து விடுவார்கள் என்று இலங்கையை சேர்ந்த போலி பாஸ்போர்ட் மன்னன் கிருஷ்ணமூர்த்தி காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
 

100 கிருஷ்ணமூர்த்திகள் முளைப்பார்கள்: போலி பாஸ்போர்ட் மன்னன் வாக்குமூலம்!

இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி என்ற கிருஷ்ணமூர்த்தி (55) என்பவர்,  கடந்த 1982ஆம் ஆண்டு, இலங்கையில் இருந்து அகதியாக சென்னைக்கு வந்தவர், போலி பாஸ்போர்ட், விசா தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்துள்ளார். கடந்த 2003 மற்றும் 2005ஆம் ஆண்டுகளில் போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தி,  ஜாமீனில் வெளியே வந்தபின்னர் தலைமறைவானார்.

இதையடுத்து, சென்னை நீதிமன்றத்தால் பிரவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் கிருஷ்ணமூர்த்தியிடம் போலிபாஸ்போர்ட் ஏஜெண்டாக செயல்பட்ட, சென்னை ஆலப்பாக்கத்தில் வசிக்கும் ராஜன் (42) என்பவரை பிடித்தனர். அவர் கொடுத்த தகவல் அடிப்படையில், போலி பாஸ்போர்ட் கும்பல் தலைவன் கிருஷ்ணமூர்த்தியை, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பிடித்தனர்.

மேலும், போலி பாஸ்போர்ட் மற்றும் விசாவை கம்ப்யூட்டர் மூலம் தயாரிப்பதில் நிபுணரான, ஜூலி என்ற ஜெயசேகரன் (29) என்பவரை மதுரவாயல், ஓம்சக்தி நகரிலும், புரசைவாக்கத்தைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் (29), ஆலப்பாக்கத்தில் வசித்த சிவரங்கன் (55), திருவான்மியூர், வால்மீகி நகரைச் சேர்ந்த தேவசகாயம் பேட்ரிக் ஸ்ரீதர் (48) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அபுபக்கர் சித்திக்கை தவிர, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட மற்ற 5 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.

போலி பாஸ்போர்ட் மன்னன் கிருஷ்ணமூர்த்தி, காவல்துறையினரிடம் கொடுத்துள்ள வாக்குமூலம் வருமாறு:

நான் கடந்த 2002ஆம் ஆண்டு முதல் போலி பாஸ்போர்ட், போலி விசா தயாரித்து விற்கும் தொழில் செய்து வருகிறேன். 2 முறை சிறைக்கு சென்றுவந்தாலும், எனக்கு வேறு தொழில் தெரியாது என்பதால், இந்த தொழிலை விட முடியவில்லை. இலங்கை வாசிகளுக்கு வெளிநாடுகள் கைகொடுத்து வாழ்வு கொடுக்கின்றன.

எனவே, பிழைப்புக்காக வெளிநாடு செல்லும் இலங்கைவாசிகளுக்கு, போலி பாஸ்போர்ட் மற்றும் போலி விசா தயாரித்து கொடுக்கும் தொழிலை, இலங்கை மக்களுக்காக ஒரு சேவைமனப்பான்மையுடன் செய்து வருகிறேன். இதோடு எனது பிழைப்பும் ஓடுகிறது.

உலகம் முழுவதும் நெட்வொர்க் அமைத்து இந்த தொழில் நடக்கிறது. உலகம் முழுவதும் 53 நாடுகளில் எங்கள் ஆட்கள் உள்ளனர். இந்தியாவில் அனைத்து விமான நிலையங்களிலும், பணிபுரியும் குடியுரிமை அதிகாரிகள் சிலரும், எங்கள் கூட்டத்தில் ரகசியமாக பணியாற்றுகிறார்கள். சென்னை விமான நிலையத்தில் மட்டும் கெடுபிடி அதிகமாக உள்ளது.

போலி பாஸ்போர்ட்டை எளிதில் தயாரித்துவிடுவோம். ஆனால் போலி விசா தயாரித்து, சம்பந்தப்பட்டவர்களை, வெளிநாட்டுக்கு அனுப்புவது மிகவும் கஷ்டமான காரியம். சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அகதிகள் முகாமில் தங்கி இருக்கும், இலங்கைவாசிகள் யார்-யார், எந்த நாட்டுக்கு செல்லவிரும்புகிறார்கள் என்பதை, ராஜன் மூலம் கணக்கெடுப்போம். அவர்களது புகைப்படத்தை வாங்குவோம்.

காலாவதியான பாஸ்போர்ட்டுகள், வெளிநாடுகளுக்கு போக முடியாதவர்களின் பாஸ்போர்ட்டுகளை டிராவல்ஸ் நிறுவனங்கள் மூலம் விலைக்கு வாங்குவோம். அந்த பாஸ்போர்ட்டுகள் ஒன்றிற்கு, ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை கொடுப்போம். அந்த பாஸ்போர்ட்டுகளில் உள்ள புகைப்படங்களை நீக்கிவிட்டு, போலி பாஸ்போர்ட்டு கேட்பவர்களின் புகைப்படங்களை அதில் ஒட்டுவோம். அந்த பாஸ்போர்ட்டுகளில் உள்ள முகவரிகளை நீக்கி விட்டு, போலி முகவரிகளை பதிவு செய்வோம். ஆக பழைய பாஸ்போர்ட்டு நம்பரில், போலி பாஸ்போர்ட்டுகள் தயார்.

இந்த போலி பாஸ்போர்ட்டுகளில், போலி விசாவை தயாரித்து ஒட்டி விடுவோம். அந்த விசா மூலம், குறிப்பிட்ட நாடுகளுக்கு பலமுறை சென்றுவந்ததாக, போலி ரப்பர் ஸ்டாம்பு மூலம் போலி பாஸ்போர்ட்டில் பதிவு செய்துவிடுவோம். சுற்றுலா விசா மட்டுமே போலியாக தயாரித்து கொடுப்போம். சுற்றுலா விசா 10 நாட்களுக்கு மட்டும் செல்லுபடி ஆகும். அடுத்து காலாவதியான போலி விசாவை காட்டி, குறிப்பிட்ட நாடுகளின் உண்மையான விசாவுக்கு விண்ணப்பம் செய்வோம்.

போலி விசா மூலம் ஏற்கனவே குறிப்பிட்ட நாட்டுக்கு சென்று வந்ததுபோல, பாஸ்போர்ட்டில் பதிவு செய்யப்பட்டு இருப்பதால், அதை உண்மை என்று நம்பி, உண்மையான விசாவை புதிதாக கொடுத்து விடுவார்கள். அந்த விசாவை வைத்து, வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து விடுவோம்.

எங்கள் கையாட்களாக செயல்படும் விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், எங்களது ஆட்களை சோதனை எதுவும் போடாமல் அனுப்பி விடுவார்கள். ஒரு ஆளை அனுப்புவதற்கு, குடியுரிமை அதிகாரிகளுக்கு ரூ.1.5 லட்சம் கொடுப்போம். வெளிநாடு சென்றவுடன், பாஸ்போர்ட் மற்றும் விசாவை கிழித்து எறிந்துவிட்டு, சம்பந்தப்பட்டவர்கள், அகதிகள்போல நடித்து விடுவார்கள்.

இலங்கை அகதி என்றால், வெளிநாடுகளில் ராஜமரியாதை கொடுத்து தங்க வைப்பார்கள். பின்னர் காலப்போக்கில், அகதிகள் போர்வையை விலக்கிவிட்டு, குறிப்பிட்ட நாட்டின் குடியுரிமையை பெற்று நிரந்தரமாக, குறிப்பிட்ட நாட்டில் தங்கிவிடுவார்கள். இதுதான் எங்களது தொழில் ரகசியம். இந்த தொழிலை அழிக்க முடியாது. இந்திய அரசு, இலங்கை மக்களை வெளிநாடுகளுக்கு சென்று பிழைப்பு நடத்த, எளிதில் அனுமதி பெற்று கொடுத்தால், இந்த தொழிலை நாங்கள் விட்டு விடுகிறோம்.

கடந்த 2010ஆம் ஆண்டு முதல் சுமார் 53 நாடுகளுக்கு 200 பேர்வரை போலி பாஸ்போர்ட் மற்றும் போலி விசா மூலம் சென்றுள்ளனர். சென்னையில் இருந்து முதலில் மலேசியா அல்லது சிங்கப்பூர் அல்லது மெக்சிகோ அருகே உள்ள கோட்மாலா என்ற நாட்டுக்கு அனுப்பி வைப்போம். அங்கிருந்து விரும்பிய நாட்டுக்கு செல்வது எளிதில் முடிந்துவிடும்.

எனக்கு 3 மனைவிகள் உள்ளனர். 3 பேரையும் காதலித்து மணந்துள்ளேன். முதல் மனைவி பெயர் சரோஜினி, அவளுக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். அவள் கனடா நாட்டில் வசிக்கிறாள். 2வது மனைவி இளவரசி, சென்னை அரும்பாக்கத்தில் வாழ்கிறாள். அவளுக்கும் 4 பிள்ளைகள் உள்ளனர். 3வது மனைவி பெயர் தனம். புதுக்கோட்டையைச் சேர்ந்த அவள்தான் தற்போது, என்னுடன் வாழ்கிறாள். அவளுக்கு ஒரு மகன் இருக்கிறான். 2வது மனைவி இளவரசி, என்னுடன் சண்டை போட்டுவிட்டு தனியாக வாழ்கிறாள். என்னை சிறைக்கு அனுப்புவதால் மட்டும், இந்த தொழிலை அழித்து விட முடியாது. என்னை சிறைக்கு அனுப்பினால், என்னைப்போல 100 கிருஷ்ணமூர்த்திகள் முளைத்து விடுவார்கள்" என்று வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.