Published:Updated:

அண்ணா ஹஜாரே கைது குறித்த பிரதமரின் அறிக்கை

அண்ணா ஹஜாரே கைது குறித்த பிரதமரின் அறிக்கை
அண்ணா ஹஜாரே கைது குறித்த பிரதமரின் அறிக்கை

புதுடெல்லி, ஆக.17,2011

அண்ணா ஹஜாரே கைது குறித்த பிரதமரின் அறிக்கை

டெல்லி காவல்துறையின் கைது நடவடிக்கைக்கு பிஜேபி, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சூழலில், அண்ணா ஹஜாரேவுக்கு ஆதரவாக நாடு தழுவிய அளவில் மக்கள் ஆதரவு பெருகியுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மக்களவையில் பிரதமர் இன்று அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து வாசித்தார்.

அண்ணா ஹஜாரே மீதான நடவடிக்கை குறித்து பிரதமர் கூறுகையில், "புதுடெல்லியில் நேற்று நடந்த குறிப்பிட்ட சில சம்பவங்கள் தொடர்பாக இந்த அவையில் அறிக்கை சமர்ப்பிப்பதை எனது வலிமிகுந்த கடைமையாக கருதுகிறேன்.

மிகுதியான ஆலோசனைகளுக்குப் பிறகு, மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்ட லோக்பால் மசோதா தற்போது நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் உள்ளது.

இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என அண்ணா ஹஜாரே விரும்புகிறார். லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் அரசு அறிமுகப்படுத்துகிறது. அண்ணா ஹஜாராவும் அவரது ஆதரவாளர்களும் ஜன் லோக்பால் மசோதா வேண்டும் என கோருகின்றனர்," என்றார். ##~~##

அப்போது, அண்ணா ஹஜாரே நேற்று கைது செய்யப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அறிக்கையை வாசித்த பிரதமர், "அண்ணா உண்ணாவிரதம் மேற்கொள்ள டெல்லி காவல்துறை குறிப்பிட்ட சில நிபந்தனைகளை விதித்தனர். ஜே.பி. பூங்காவில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படுவதாக ஆகஸ்ட் 13-ல் டெல்லி காவல்துறை தகவல் தெரிவித்தது. அதில், அவர்கள் (அண்ணா ஹஜாரே குழு) கையெழுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஆனால், ஆகஸ்ட் 15-ல் காவல்துறையின் நிபந்தனைகளில் ஆறு நிபந்தனைகளை அவர்கள் ஏற்க மறுத்தனர். நிபந்தனைகளை ஏற்கவில்லை என்றால் அனுமதி அளிக்க முடியாது என்று காவல்துறை தெரிவித்தது. பின்னர், ஜே.பி. பூங்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அண்ணா ஹஜாரே குழு ஜே.பி. பூங்காவில் போராட்டம் நடத்துவதை டெல்லி காவல்துறையினர் நேற்று காலை உறுதி செய்துகொண்டனர். அதன்பிறகே அண்ணா ஹஜாரேவை அவர்கள் தடுப்புக் காவலில் வைத்தனர். முன்னெச்செரிக்கை நடவடிக்கையாகவே அண்ணா ஹஜாரே கைது செய்யப்பட்டார்," என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.

மேலும், "புதுடெல்லி நேற்று நிகழ்ந்த சம்பவங்கள் இன்று நிகழாது என்றும், இனி வரும் காலத்திலும் அதுபோல் நிகழாது என்று நான் நம்புகிறேன்.

ஜனநாயகத்தில் பல தரப்பு கருத்துகளும் கேட்கப்பட வேண்டும். கருத்துவேற்றுமைகள் அனைத்தும் பேச்சுவார்த்தை மற்றும் சுமூகமான முறையில் தான் தீர்க்கப்பட வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கடைமை ஆற்ற அவர்கள் அனுமதிக்க வேண்டும்.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் சுமுகமாக நடைபெற ஒத்துழைக்க வேண்டும் என அரசியல் கட்சிகளைக் கேட்டுக்கொள்கிறேன்," என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.

அப்போது, எதிர்கட்சி எம்.பி.க்கள் பிரதமருக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கியதால் அவையில் கடும் அமளி நிலவியது.

அதைத் தொடர்ந்து அறிக்கையை வாசித்த பிரதமர் மன்மோகன் சிங், "அண்ணா ஹஜாரேவையும் அவரது ஆதரவாளர்களையும் விடுவிக்க நேற்று 7 மணியளவில் டெல்லி காவல்துறை முடிவு செய்தது. ஆனால், ஜே.பி. பூங்காவில் உண்ணாவிரதம் நடத்த அனுமதித்தால் தான் வெளியேறுவோம் என அவர்கள் கூறினர்.

நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள உரிமையை எமது அரசு நிலைநாட்டும். ஆனால், எந்த அமைப்பாளர்களுக்கும் உரிய நிபந்தனைகள் விதிக்கப்படுவது முறை. சட்டம் - ஒழுங்கை காப்பதற்கே இந்த விதமான நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது," என்றார் பிரதமர்.

இந்த விளக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டதால், அறிக்கையை முடித்துக்கொண்டார் பிரதமர்.

அடுத்த கட்டுரைக்கு