Published:Updated:

மாணவிகள் மீது ஆசிட் வீசியவர் மனநலம் பாதிக்கப்பட்டவராம்: காவல்துறை சொல்கிறது

Vikatan Correspondent
மாணவிகள் மீது ஆசிட் வீசியவர் மனநலம் பாதிக்கப்பட்டவராம்: காவல்துறை சொல்கிறது
மாணவிகள் மீது ஆசிட் வீசியவர் மனநலம் பாதிக்கப்பட்டவராம்: காவல்துறை சொல்கிறது
மாணவிகள் மீது ஆசிட் வீசியவர் மனநலம் பாதிக்கப்பட்டவராம்: காவல்துறை சொல்கிறது

மதுரை: மதுரையில் கல்லூரி மாணவிகள் மீது அமிலம் வீசிய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைக்கு பின் கைதான சங்கரநாராயணன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருமங்கலத்திலுள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவிகள் மீனா (17) மற்றும் அங்காள ஈஸ்வரி (18). இவர்கள் கடந்த 12 ஆம் தேதி கல்லூரி முடிந்து வீடு திரும்புவதற்காக பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் திடீரென இவர்கள் மீது ஆசிட்டை வீசிவிட்டு தப்பியோடிவிட்டார்.

இந்த சம்பவத்தில், மாணவி மீனாவுக்கு முகத்தின் வலதுபுறம், தோள்பட்டை, வயிறு உள்ளிட்ட இடங்களிலும், மாணவி அங்காள ஈஸ்வரிக்கு தோள்பட்டை, கைகளிலும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி அந்தக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் வகுப்பை புறக்கணித்துவிட்டு, போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகன்தான் மாணவிகள் மீது ஆசிட் வீசியுள்ளான் என்று கூறி சுதாகர் என்பவர் தனது மகன் சங்கர நாராயணனை போலீசில் ஒப்படைத்துள்ளார். மேலும், சங்கர நாராயணன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதற்கான மருத்துவ சான்றையும் அவரது தந்தை போலீசாரிடம் அளித்துள்ளார். இதையடுத்து, சங்கர நாராயணனை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து சுதாகர் கூறும்போது, ''மனநலம் பாதிக்கப்பட்ட எனது மகன் சங்கர நாராயணன் கடந்த 4 நாட்களாக காணவில்லை. திடீரென வீட்டிற்கு வந்த சங்கர நாராயணனின் கைகளில் காயம் இருந்தது. அதை பார்த்து விசாரித்தபோது, கல்லூரி மாணவிகள் மீது நான் தான் ஆசிட் வீசினேன். அதில்தான் இந்த காயம் ஏற்பட்டது என்று கூறினான். இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த நான் வழக்கறிஞர் உதவியுடன் எனது மகன் சங்கர நாராயணனை போலீசில் ஒப்படைத்தேன்" என்றார்.

கடந்தாண்டு பெண் ஒருவரை கத்தியால் வெட்ட முயன்றதாக சங்கர நாராயணன் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை அறிந்து போலீசார் அவரை எச்சரித்து பெற்றோருடன் அனுப்பி வைத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.