Published:Updated:

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் புகார் எதிரொலி: நவ.17ல் காவல்துறை ரெய்டு!

விகடன் விமர்சனக்குழு
ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் புகார் எதிரொலி: நவ.17ல் காவல்துறை ரெய்டு!
ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் புகார் எதிரொலி: நவ.17ல் காவல்துறை ரெய்டு!
ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் புகார் எதிரொலி: நவ.17ல் காவல்துறை ரெய்டு!

சென்னை: சென்னையில் மீட்டருக்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில், மீட்டர் கட்டணமாக 1.8 கிலோ மீட்டருக்கு ரூ.25 குறைந்தபட்ச கட்டணமும், அதையடுத்து ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12ம் வசூலிக்க வேண்டும் என்று அரசு நிர்ணயித்து நடைமுறைக்குக் கொண்டு வந்தது.

அதனால் ஆட்டோக்களில் மீட்டரை பொருத்தி அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் வலியுறுத்தியதால், சென்னையில் ஓடக்கூடிய 70 ஆயிரம் ஆட்டோக்களில் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

ஆனால், அரசின் உத்தரவை மதிக்காமல் இன்றும்  ஆட்டோ டிரைவர்கள் பெயரளவிற்கு மட்டுமே  மீட்டரை வைத்துக்கொண்டு பயணிகளிடம் அதிக அளவில்  கட்டணம் வசூலிப்பதை தொடர் கதையாகவே வைத்துள்ளனர்.

ஆட்டோக்களில் பயணம் செய்யும் பயணிகளிடம் இருந்து சமீபகாலமாக அதிக புகார்கள் வருகின்றன. சென்ட்ரல், எழும்பூர், பாரிமுனை, கோயம்பேடு, பெரம்பூர், அண்ணாநகர், அயனாவரம், வேளச்சேரி, அடையாறு, தாம்பரம், வளசரவாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் எழுந்துள்ளது.

இதைத் தொடர்ந்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளின் அதிரடி வேட்டை மீண்டும் தொடருகிறது. போக்குவரத்து போலீசாருடன் இணைந்து 17ஆம் தேதி முதல் தீவிர சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள 62 காவல் துறை ஆய்வாளர்கள் தலைமையில் சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. இதில் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகளும் இடம் பெறுவார்கள். அதிகக்  கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் மீது வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து போலீசாரிடம் ஒப்படைப்பார். அவர்கள் ஆட்டோக்களைப்  பறிமுதல் செய்து கொண்டு செல்வர்.

அதிக கட்டணம், பர்மிட் இல்லாத ஆட்டோக்கள், தகுதி சான்று ஆகியவை இல்லாமல் போக்குவரத்து விதிமுறைகளுக்கு மீறி செயல்படும் ஆட்டோக்களை பறிமுதல் செய்து வைப்பதற்கு தீவுத்திடலில் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் திங்கட்கிழமை முதல் தொடரும் சோதனையில் சிக்கும் ஆட்டோக்கள் தீவுத்திடலுக்கு கொண்டு வரப்படும்.