Published:Updated:

ஆந்திரா:உண்ணாவிரதம் இருந்த சந்திரபாபு நாயுடு கைது

Vikatan Correspondent

ஹைதராபாத், டிச.20,2010

மழை வெள்ள நிவாரணம் கோரி காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு, வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  ##~~##

ஆந்திராவில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி , முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு ஐதராபாத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். இன்று 4-வது நாளாக உண்ணாவிரதம் தொடர்ந்தது.

உண்ணாவிரதத்தில் அவர் தண்ணீர் மட்டும் அருந்துவதால் அவரது உடல் நிலை சோர்ந்து வருகிறது. இந்தநிலையில் போலீஸார் அவரை கைது செய்து குண்டு கட்டாக தூக்கி சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சந்திரபாபு நாயுடுவை கைது செய்தபோது போலீஸாருக்கும், தெலுங்கு தேசம் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சந்திரபாபுநாயுடுவின் மகன் லோகேஷ், எம்.எல்.சி.யான ராஜேந்திரபிரசாத் உள்பட பலர் காயமடைந்தனர்.

சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று மாநிலம் தழுவிய முழுஅடைப்பு போராட்டத்துக்கு தெலுங்கு தேசம் அழைப்பு விடுத்துள்ளது.