Published:Updated:

காணும் பொங்கல்: கடற்கரை, பூங்காக்களில் போலீசார் பாதுகாப்பு!

Vikatan Correspondent
காணும் பொங்கல்: கடற்கரை, பூங்காக்களில் போலீசார் பாதுகாப்பு!
காணும் பொங்கல்: கடற்கரை, பூங்காக்களில் போலீசார் பாதுகாப்பு!
காணும் பொங்கல்: கடற்கரை, பூங்காக்களில் போலீசார் பாதுகாப்பு!

சென்னை: காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை கடற்கரை, பூங்காக்களில் சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

காணும் பொங்கல் விழா இன்று (சனிக்கிழமை) தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சென்னையில் காணும் பொங்கலன்று குடும்பத்துடன் மெரினா, பட்டினப்பாக்கம், எலியட்ஸ், திருவான்மியூர் மற்றும் நீலாங்கரை கடற்கரைகள், தனியார் பொழுதுபோக்கு பூங்காக்கள், கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் மிருககாட்சி சாலை போன்ற இடங்களுக்கு சென்று பொதுமக்கள் பொழுதை உற்சாகமாக கழிப்பார்கள்.

குறிப்பாக கடற்கரைகளில் மணல் பரப்பு தெரியாத அளவுக்கு எங்கும் மக்கள் கூட்டமே கடல்போல இருக்கும். இதனால், அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் இன்று கடலில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்து உள்ளனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி அத்துமீறி செயல்படுபவர்களை கண்காணிக்கும் வகையிலும், கடலில் குளிப்பதை தடுக்கும் வகையிலும் போலீசார் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து உள்ளனர்.

கூட்டத்தை கண்காணிப்பதற்காகவே 10 கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவைகளில் நவீன பைனாகுலர்கள் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். குதிரைப்படை போலீசார் மற்றும் கடற்கரை வாகனமான ‘பீச் பக்’ ஆகியவற்றின் மூலமும் போலீசார் கண்காணிப்பார்கள். மேலும், மாறு வேடங்களிலும் போலீசார் கூட்டத்துடன் கூட்டமாக சுற்றிவந்து கண்காணிப்பார்கள்.

கடலில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடற்கரை முழுவதும் 50 நகரும் கழிப்பறைகள், தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், தீயணைப்பு மீட்பு படையினர், 50 நீச்சல் வீரர்கள், ஆம்புலன்சுகள் நிறுத்தப்படுவதுடன், முதலுதவி முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை கடற்கரையில் மட்டும் ஆயிரம் போலீசாரும், சென்னையில் உள்ள பூங்காக்கள், வண்டலூர் மிருககாட்சி சாலை உள்பட மாநகர் முழுவதும் 3 ஆயிரம் போலீசாரும் ஒரு இணை கமிஷனர், 4 துணை கமிஷனர்கள், 12 உதவி கமிஷனர்களின் மேற்பார்வையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.