Published:Updated:

காவல்துறைக்கு தமிழிசை எச்சரிக்கை!

காவல்துறைக்கு தமிழிசை எச்சரிக்கை!
காவல்துறைக்கு தமிழிசை எச்சரிக்கை!

வேலூர்: பாஜக நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் எங்கள் தொண்டர்கள் அமைதியாக இருக்கமாட்டார்கள் என பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை ஆவேசமாக கூறினார்.

பா.ஜ.க பொதுக்குழு உறுப்பினரான வாணியம்பாடியை சேர்ந்த சிவப்பிரகாசம்,  கடந்த வாரம் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்தாக்குதலை கண்டித்து வேலூரில் பாஜக  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில்  தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார்.

காவல்துறைக்கு தமிழிசை எச்சரிக்கை!

ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழிசை,  “ பாஜக தலைவர்கள் மீது வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகின்றன. இதற்கு முன்னர் அரவிந்த் ரெட்டி, வெள்ளையப்பன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். இப்போது வாணியம்பாடியில் பட்டப்பகலில் சிவப்பிரகாசம் தாக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடந்து 5 நாட்களுக்கு மேலாகியும் காவல் துறை, குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்தளவிற்கு உள்ளது என்பதற்கு இதுவே உதாரணம்.

வேலூர் மாவட்டத்தில் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை. முன்னர் ஆம்பூரில் காவல்துறையினரே தாக்கப்பட்டனர். இத்தாக்குதல் காவல்துறையினருக்கு விடப்பட்ட சவால். வேலூரும் ஆம்பூரும் தீவிரவாதிகளின் இடமாக உள்ளது. நேற்று மீனாட்சி அம்மன் கோயில் அருகே வெடிகுண்டு கண்டறியப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. இதனை ஒரு தலைவர்களும் கண்டிக்கவில்லை. காவல் துறை,  குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இனியும் எங்கள் தொண்டர்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள்” என்றார்.

காவல்துறைக்கு தமிழிசை எச்சரிக்கை!

பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, “பாஜகவினர் மீது தமிழகம் முழுவதும் தாக்குதல் அரங்கேறுகிறது. காவல்துறையினர் நடுநிலையான நடவடிக்கை எடுப்பதில்லை” என்றார்.

ஜல்லிக்கட்டு பற்றிய கேள்விக்கு, “ ஜல்லிக்கட்டு விளையாட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி தடை செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு விளையாட்டில் அப்படியான துன்புறுத்தல்கள் எதுவும் நடைபெற்றதில்லை என்பதை ஆதாரத்துடன் அறிக்கை அளித்துள்ளோம். பொங்கல் பண்டிகை தமிழகத்தில் நிச்சயம் ஜல்லிக்கட்டோடு சிறப்பாக நடைபெறும். இதில் எந்த முயற்சியுமே எடுக்காத காங்கிரஸிற்கு எங்களை குறை கூற தகுதியில்லை” என்றார்.

- அ.அச்சணந்தி
படங்கள்: ச.வெங்கடேசன்