Published:Updated:

சுற்றுலா போறீங்களா... உங்கள் வீட்டை போலீஸ் பாதுகாக்கும்!

சுற்றுலா போறீங்களா... உங்கள் வீட்டை போலீஸ் பாதுகாக்கும்!
சுற்றுலா போறீங்களா... உங்கள் வீட்டை போலீஸ் பாதுகாக்கும்!
சுற்றுலா போறீங்களா... உங்கள் வீட்டை போலீஸ் பாதுகாக்கும்!

கோடை காலம் வந்துவிட்டது. வெப்பத்தை தணிக்கும் இடமாகப் தேடிப்பிடித்து பிள்ளைகளுடன் சுற்றுலா செல்வதில் பெற்றோர்கள் ஆயத்தமாகிக்கொண்டிருக்கிற நேரம் இது.

ஆனால் ஓரிரு நாட்கள் முதல் சில வாரங்கள் வரை இருப்பிடம் மறந்து சுற்றுலாவுக்காக வேறிடம் நோக்கிச் செல்லும்  குடும்பங்களால் அந்த சுற்றுலாவை முழுமையாக அனுபவிக்க முடிவதில்லை. காரணம்,  அதிகரித்துவரும் திருட்டு சம்பவங்கள்!

கோயில் வாசலில் சாதாரணமாக 100 ரூபாய் மதிப்புள்ள புதுச் செருப்பை கழற்றி வைத்து விட்டு வந்தாலே அரைகுறையாகதான் ஆண்டவனை வணங்கத்தோன்றும். 100 ரூபாய் செருப்புக்கே இந்த திக் திக் திக் என்றால் ஒரு வீட்டையே பூட்டிக் கொண்டு சுற்றுலா போகிறவர்களின் மனது எத்தகைய மனநிலையில் இருக்கும். அந்தளவுக்கு பட்டப்பகல் கொள்ளையர்கள் சென்னையில் அதிகம்.

பண்டிகையோ, கோடை விடுமுறையோ, நிம்மதியாக வெளியிடங்களுக்கு போய் கொண்டாட முடியலையே என்ற மக்களின் வேதனைக்குரல்,  அரசாங்கத்தின் காதுகளில் ஊடகங்கள் மூலமாக போய்ச் சேர்ந்ததை தொடர்ந்து,  அதற்காகவே ஒரு சிறப்பு திட்டத்தை சென்னை மாநகர காவல்துறை சில ஆண்டுகளுக்கு முன் அறிவித்தது. மூன்றாண்டுகளுக்கு முன்னர் அப்போதைய சென்னை போலீஸ் கமிஷனர் ஜே.கே.திரிபாதி, இதை அறிவித்தார்.

"வீட்டை பூட்டிக்கொண்டு வெளியூர் செல்பவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் தாங்கள் வெளியூர் செல்லும் தகவலை பதிவு செய்ய வேண்டும். இதற்காக மாநகர காவல்துறையில் இயங்கும் அனைத்து காவல் நிலையங்களிலும் பூட்டியிருக்கும் வீடுகள் என்ற பதிவேடு பராமரிக்கப்படுகிறது. அந்த பதிவேட்டில் சம்பந்தப்பட்ட நபர்களின் தகவல்கள் பதிவு செய்யப்பட்டு,  அந்த பகுதி போலீசார் அந்த வீட்டை கண்காணிப்பார்கள். வீட்டை பூட்டிச்செல்லும்போது புறப்படும் நாள், திரும்ப வரும்நாள் , வீட்டில் விலை மதிப்புள்ள பொருட்கள் உள்ளதா போன்றவைகளையும் போலீசில் பதிவு செய்ய வேண்டும்.

நேரில் தகவல் தெரிவிக்க விருப்பமில்லாதவர்கள், அல்லது உடல் நலமின்றி வர வாய்ப்பில்லாதவர்கள் 9840700100 என்ற எண்ணுக்கு தாங்கள் வசிக்கும் வீட்டின் முகவரி குறித்த தகவல்களை, எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பலாம்.

சுற்றுலா போறீங்களா... உங்கள் வீட்டை போலீஸ் பாதுகாக்கும்!

"வீடு பூட்டியிருக்கிறது என்ற தகவலை ஆங்கிலத்தில் , இப்படி டைப் செய்ய வேண்டும்(LOCKEDHOUSE DOOR NO LOCALITY FROM DATE, MONTH TO DATE, MONTH )இப்படி டைப் செய்ய வேண்டும். பின்னர் அதை 98407 00100- என்ற எண்ணுக்குக்கு எஸ்.எம்.எஸ். செய்தால் நீங்கள் அனுப்பும், எஸ்.எம்.எஸ் தகவல்கள் அதில் பதிவு செய்யப்பட்டு,  சம்பந்தப்பட்ட வீடு கண்காணிப்பில் கொண்டு வரப்படும். இரவும் பகலும் பைக்கில் கண்காணிப்பு பணியை போலீசார் மேற்கொள்வர். இந்த எஸ்.எம்.எஸ் தகவல்களை பராமரிக்கவும் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு தகவலை தெரிவிக்கவும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனிப்பிரிவு ஒன்று இதற்கென தொடங்கப்பட்டுள்ளது" என்றார் அன்றைய போலீஸ் கமிஷனர் திரிபாதி

இந்த வீடு பாதுகாப்பு திட்டம் 2009-ம் ஆண்டு,  அன்றைய சென்னை போலீஸ் கமிஷனர் டி.ராஜேந்திரனால், ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டபோது அதற்கு போதிய வரவேற்பு இல்லை. 'வீட்டை நன்றாக பூட்டிவிட்டு பூட்டையும் இழுத்து பார்த்து விட்டு கிளம்பியபின் போலீசுக்கு ஏன் போவது? ' என்ற எண்ணத்தில் இதை பொதுமக்கள் புறந்தள்ளினர்.  போலீசால் பராமரிக்கப்படும் பதிவேட்டில்  தங்கள் வீடு குறித்த விபரத்தை பதிவு செய்து கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதை நினைவில் கொண்டுதான் எஸ்.எம்.எஸ் முறையை போலீசார் கொண்டு வந்தனர்.

சுற்றுலா போறீங்களா... உங்கள் வீட்டை போலீஸ் பாதுகாக்கும்!

இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு நிமிடமும் பெறப்படும் எஸ்.எம்.எஸ் தகவல்கள் அந்தந்த காவல் நிலையத்துக்கு தெரியப்படுத்தப்பட்டு,  மஞ்சள் பைக்கில் வரும் போலீசார் பகலிலும், நீல நிற பைக்கில் வரும் போலீசார் இரவிலும் ரோந்து மூலம் கண்காணிப்பில் இருப்பார்கள் என்றும் போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது.
பூட்டப்பட்ட வீடுகளில் பணியாற்றும் வேலையாட்கள், பால்காரர், பேப்பர்காரர், காய்கறி கடைக்காரர் போன்றோர் கண்காணிக்கப்படுவர் என்பதும் அதில் முக்கியமான ஒன்று... ஆனால், இன்னமும் சிலரின் மனநிலையோ, என் வீட்டுக்கு நீங்கள் என்ன பாதுகாப்பு தருவது? என்பது போலத்தான் உள்ளது.

இது தொடர்பாக ஓரிருவரிடம் பேசிய போதே, தோராயமாக மக்கள் மனநிலையை புரிந்து போனது. "சார், வீட்டில் என்னென்ன பொருட்களை எங்கெல்லாம் வைத்துள்ளோம் என்று போலீசிடம் போய் எதற்குச் சொல்வது ? என்றார் ஒருவர்.

போலீஸ் உயரதிகாரிகளிடம் பேசினோம். "இந்த திட்டத்தை கொண்டு வந்த 2009-ம் ஆண்டே இதை யாரும் பெரிதாக கொண்டாடவில்லை. பொது மக்களோ, இது நமக்கான திட்டம் என்று உணராமல் ஏளனமாகவே பார்த்தனர். இந்த திட்டத்தோடு இன்னொரு திட்டமான மூத்த குடிமக்கள் பாதுகாப்பு குறித்த ஒரு திட்டத்தையும் கொண்டு வந்தோம். அதையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
'வீட்டில் நாங்கள் தனியாக இருக்கிறோம் பிள்ளைகள் அல்லது உறவினர்கள் உணவளிக்காமல் தவிக்க விடுகின்றனர் போன்ற விபரங்களை 044-2345-2320 -என்ற எண்ணுக்கு தொலைபேசி மூலம் சொல்லி போலீஸ் உதவியைப் பெறுங்கள்' என்று அப்போது நாங்கள் அறிவித்த திட்டத்துக்கு ஊடகங்கள் மூலம் பிரசாரமும் செய்தோம், ஒரு பயனுமில்லை.

போலீசை பொதுமக்கள் தங்களின் நண்பனாகப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இப்படி அவர்களோடு சேர்ந்து பயணிக்கும் பாதுகாப்பு அம்சங்களில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். ஆனால், பெரும்பாலான மக்கள் மனதில் மாற்றம் ஏதும் வரவில்லை" என்கிறார்கள் அக்கறையுடன்.

காவலுக்கு தயாராக இருக்கிறது போலீஸ். மக்கள்தான் அவர்களை நாடவேண்டும்!

- ந.பா.சேதுராமன்