Published:Updated:

' 75 வயது மூதாட்டியை இப்படி அடிக்கலாமா?' -சிக்கலில் சிவகங்கை போலீஸ்

' 75 வயது மூதாட்டியை இப்படி அடிக்கலாமா?' -சிக்கலில் சிவகங்கை போலீஸ்
' 75 வயது மூதாட்டியை இப்படி அடிக்கலாமா?' -சிக்கலில் சிவகங்கை போலீஸ்

' 75 வயது மூதாட்டியை இப்படி அடிக்கலாமா?' -சிக்கலில் சிவகங்கை போலீஸ்

சிவகங்கை மாவட்டத்தில், காவல்நிலையத்தில் வைத்தே மூதாட்டி ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டிருக்கிறார். 'மருமகள் கொடுத்த புகாரின்பேரில் விசாரணைக்கு அழைத்து மயக்கம் வரும் வரையில் மூதாட்டியை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள்' என கொந்தளிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

காளையார் கோவில், தவசக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கொங்கை ஈஸ்வரன். விவசாயக் கூலியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு பத்து ஆண்டுகளுக்கு முன்னால் சாந்தி என்பவரோடு திருமணம் நடந்தது. இந்நிலையில், வேறு ஒரு பெண்ணுடன் ஈஸ்வரனுக்கு தொடர்பு இருப்பதை அறிந்து சண்டை போட்டு வந்திருக்கிறார் சாந்தி. நேற்று குடும்பத்தில் சண்டை தீவிரமடையவே, காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

சாந்தி அளித்த புகாரின் பேரில் ஈஸ்வரனையும்,  அவருடைய 75 வயதான தாய் வெள்ளச்சியையும் காளையார் கோவில் காவல் நிலையத்திற்கு விசாரிப்பதற்காக அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணையின்போது, ஈஸ்வரனையும் வெள்ளச்சியையும் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். இதையடுத்து, அங்கேயே மயக்கமடைந்து விழுந்துவிட்டார் மூதாட்டி வெள்ளச்சி. ' உன் அம்மாவைத் தூக்கிட்டு ஓடிப் போய்விடு' என போலீஸார் அவசரம் காட்டியுள்ளனர். வீட்டிற்கு வந்த பிறகும், அந்த மூதாட்டிக்கு மயக்கம் தெளியாததால் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். நிலைமை சீரியஸாகப் போகவே, இன்று காலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மூதாட்டி மீதான தாக்குதல் குறித்து நம்மிடம் பேசிய ஈஸ்வரன், " குடும்பச் சண்டையில என் மனைவி புகார் கொடுத்தாள். ' ஸ்டேசனில் போய் பேசிக்கலாம்'னு போலீஸ்காரங்க என்னை இழுத்துட்டுப் போனாங்க. எங்க அம்மாவும் கூட வந்தாங்க. அங்க போனதும் விசாரிக்காம, போலீஸ்காரர் சுப்பையா லத்தியால அடிச்சார். கூடவே இரண்டு மகளிர் போலீஸ்காரங்களும் சேர்ந்து அடிச்சாங்க. எங்க அம்மா விலாவுல லத்தியால அடிச்சாங்க. 75 வயதான பெரியவங்கன்னுகூடப் பார்க்காம, பூட்ஸ் காலால எங்க அம்மாவை எட்டி உதைச்சார் சுப்பையா. விடாம அடிச்சதுல அம்மா மயக்கமாகி விழுந்துட்டாங்க. அம்மாவை எழுப்பி பார்த்தாங்க. எழுந்திருக்கலைன்னதும் ஆட்டோவுல ஏத்தி அனுப்பி வச்சுட்டாங்க. இப்ப நிலைமை கொஞ்சம் சீரியஸா இருக்குன்னு டாக்டருங்க சொல்றாங்க. என் மனைவி புகார் கொடுத்தா, வழக்குப் போடுறத விட்டுட்டு தாறுமாறா அடிக்கறாங்க. எங்க அம்மாவும் போய்ச் சேர்ந்துட்டா எனக்கு யார் இருக்கா?" என்றார் வேதனையோடு.

'தொடர்ந்து நடக்கும் கொலை, கொள்ளை, செயின் பறிப்பு என குற்றங்களின் விகிதம் அதிகரித்துக் கொண்டே போகிறது. சாதாரண குடும்பத் தகராறுக்காக மூதாட்டியைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். இப்படியொரு கொடூர தாக்குதலில் ஈடுபட்ட காவலர்களை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும்' என சிவகங்கை மாவட்ட எஸ்.பிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள். ' நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்டரீதியான போராட்டத்தைத் தொடருவோம்' எனவும் எச்சரிக்கின்றனர்.

-ஆ.விஜயானந்த்
 

அடுத்த கட்டுரைக்கு