Published:Updated:

பெற்றோருக்குச் சிகிச்சை மறுப்பு! போலீஸ் இன்ஷூரன்ஸ் அவதி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பெற்றோருக்குச் சிகிச்சை மறுப்பு! போலீஸ் இன்ஷூரன்ஸ் அவதி
பெற்றோருக்குச் சிகிச்சை மறுப்பு! போலீஸ் இன்ஷூரன்ஸ் அவதி

பெற்றோருக்குச் சிகிச்சை மறுப்பு! போலீஸ் இன்ஷூரன்ஸ் அவதி

போலீஸ் சங்கம் கோரி காவலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். போலீஸ் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் குளறுபடி உள்ளிட்ட பல உள்விவகாரங்கள் அதில் அடங்கும்... கடந்த 6-ம் தேதி தமிழக சட்டசபையில் நடந்த போலீஸ் மானியக் கோரிக்கையின்போது ஓய்வுபெற்ற போலீசார் மற்றும் தற்போது பணியிலிருக்கும் போலீசாரின் பெற்றோர்கள்  கோட்டை அருகே திரண்டனர். தமிழகக் காவல்துறை அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி திருமண மண்டபத்துக்குக் கொண்டுசென்று அடைத்தனர். அப்படிக் கொண்டு போகப்பட்டவர்களில் சிலர் மிகவும் வயதானவர்கள். வெயில் கொடுமை, பசி, களைப்பு என மூன்றும் கைகோத்துக் கொள்ள, மண்டபத்தின் மூலைகளில் மிகவும் சோர்ந்து போய்க் கிடந்தனர்.

அவர்களிடம் பேச முயன்றோம். ''இங்கிருந்து ஊருக்குப்போனபிறகு உங்களிடம் நிறையப் பேசுகிறோம்'' என்று சொல்லி பேச்சைத் தவிர்த்தனர். இந்நிலையில், இன்று காலை நமது செல்பேசியில் தொடர்புகொண்ட அந்தப் போராட்டக்காரர்கள், “சோறு போடாமல், பெற்றோரைத் தவிக்க விட்டதாகப் பிள்ளைகள் மீது புகார் வந்தால், கைது செய்யும் எங்க வீட்டுப் பிள்ளைங்க (போலீசார்), அவங்களைப் பெத்தவங்களுக்கு எதையும் பெரிசா செய்ய முடியலைப்பா. முன்னேயெல்லாம் பஸ்சுல பிள்ளைங்ககூட நாங்களும் போவோம். டிக்கெட்டு கேட்கமாட்டாங்க. போலீஸ்னு தெரிஞ்சாலே அப்படி ஒரு மரியாதை இருந்தது. நாட்டுக்காக உழைக்கிற குடும்பம்கற நினைப்பு எல்லா மட்டத்துலயும் இருந்தது. இப்போ அப்படி இல்லைப்பா. அவனவன் சம்சாரத்தைக் கூட்டிட்டுப் போனாலும் பஸ்சுல டிக்கெட்டு வாங்கியாகணும்.ஏதோ போலீஸ் மெடிக்கல் இ‌ன்ஷூரன்ஸ்னு மாசாமாசம் சம்பளத்துல 180 ரூபாயைப் பிடிச்சுக்கறாங்க. கல்யாணம் ஆகாதவரைக்கும் அந்த இன்ஷூரன்சை வைத்து அம்மா, அப்பாவுக்கு உடம்புக்கு முடியலைன்னா ட்ரீட்மென்ட் எடுத்துக்கலாம். கல்யாணம் ஆகிட்டா அம்மா, அப்பாவுக்கு ட்ரீட்மென்ட் கிடையாது. பொண்டாட்டி, புருஷன், அவங்க பிள்ளைங்களுக்கு மட்டும்தான் அந்த மெடிக்கல் இன்ஷூரன்சைப் பயன்படுத்த முடியும்.

முன்பெல்லாம் வயசான அம்மா, அப்பா  வீட்டில் இருக்காங்கன்னா, போலீஸ் குவார்ட்டர்ஸ்ல மாடி வீட்டை ஒதுக்கமாட்டாங்க. இப்போ அப்படி  இல்லை. வயசான அம்மா, அப்பா இருந்தாக்கூட நேரே நாலாவது மாடியாப் பாத்துதான் வீட்டையே ஒதுக்கிக் கொடுக்கிறாங்க. 
இப்படிச் சின்னச் சின்னப் பிரச்னைகளைக்கூட அதிகாரிகள் காது கொடுத்துக் கேட்காததால்தான் இன்னைக்குப் போலீஸ் சங்க கோரிக்கை பெரிதாகக் கேட்க ஆரம்பித்துள்ளது" என்றனர்.

போலீஸ் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் குறித்து போலீசார் சிலரிடம் பேசினோம்.... “தனியார் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் மூலமாகத்தான் பணத்தைப் பிடிக்கிறார்கள். ஆனால், குறிப்பிட்ட அறுவை சிகிச்சைகளுக்கு மட்டுமே அனுமதி கிடைக்கிறது. வயதான பெற்றோர் கூட இருந்தால்தான் அதை நாங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். எங்களுக்குத் திருமணமாகி விட்டால், அந்த வசதியைப் பெற்றோரால் பயன்படுத்திக்கொள்ள முடியாது என்கிறது இந்தப் போலீஸ் மெடிக்கல் இன்ஷூரன்ஸ். சாதாரண தலைவலி, காய்ச்சலுக்கு நாங்கள் ஏன் தனியார் மருத்துவமனைக்குப் போகப் போகிறோம்? மொத்தத்தில், போலீஸ் மெடிக்கல் இன்ஷுரன்ஸால் சம்பந்தப்பட்ட நிறுவனம்தான் லாபம் அடைகிறதே தவிர, எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை.

சென்னையில் போலீஸ் மருத்துவமனை இருக்கிறது. இங்கு  ரத்த அழுத்தம் சோதித்துக் கொள்ளலாம். சர்க்கரை, காய்ச்சலுக்கு மருந்து வாங்கலாம். ஆனால், முக்கியமான மருத்துவ வசதிகள் ஏதும் அங்கில்லை. ஸ்கேன், ரத்தப் பரிசோதனை,  கண் பரிசோதனை இப்படி எதுவுமே இங்கு கிடையாது. இடுப்பு வலியுடன் வரும் கர்ப்பிணி போலீசாருக்கும் இதே நிலைதான். மகப்பேறுக்கு எந்த வைத்தியமும் கிடையாது, ஆனால், பெண் போலீசார் ஓய்வெடுக்கும் வகையில் மிக நீளமான மேசைகள் மட்டும் உண்டு" என்கிறார்கள்.தமிழ்நாட்டில் மொத்தம் 1 லட்சத்து 11 ஆயிரம் போலீசார் இருப்பதாக அரசின் கணக்குக் கூறுகிறது. மாதந்தோறும் இவர்களிடமிருந்து இன்ஷூரன்ஸ் தொகையாக 1 கோடியே 80 லட்ச ரூபாய் தனியார் மெடிக்கல் இன்ஷூரன்ஸுக்குப் போகிறது. ஆண்டுக் கணக்குப்படி மொத்தம் 22.5 கோடி ரூபாய். இருபது கோடியில் மிகத் தரமான அளவில் சென்னையிலும், திருச்சியிலும் இரண்டு  காவலர் மருத்துவமனைகளையே கட்ட முடியும்! எல்லோரையும் காவல் காத்துவரும் போலீஸாரின் நலனை உரிய அக்கறை எடுத்துக் காவல் காக்கத் தவறுகிறது மாநில அரசு! கொடுமையின் உச்சக்கட்டமாக, அதே பாதிக்கப்பட்ட காவலர்களிடமிருந்தே இன்ஷூரன்ஸ் தொகை எனக் குறிப்பிட்டப் பணத்தைப் பிடித்தம் செய்து தனியாருக்குத் தாரை வார்க்கும் தவறையும் செய்து கொண்டிருக்கிறது, அரசு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு