Published:Updated:

நாங்குநேரி துப்பாக்கி சூடு: பதட்டம் நீடிப்பு; இன்ஸ்பெக்டர் இடமாற்றம்!

நாங்குநேரி துப்பாக்கி சூடு:  பதட்டம் நீடிப்பு; இன்ஸ்பெக்டர் இடமாற்றம்!
நாங்குநேரி துப்பாக்கி சூடு: பதட்டம் நீடிப்பு; இன்ஸ்பெக்டர் இடமாற்றம்!
நாங்குநேரி துப்பாக்கி சூடு:  பதட்டம் நீடிப்பு; இன்ஸ்பெக்டர் இடமாற்றம்!

நாங்குநேரி: நாங்குநேரியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலியானவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெற்ற நிலையில், துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான இன்ஸ்பெக்டர் விஜயகுமார் இடமாற்றம் செய்யப்பட்டு,காத்திருப்போர் பட்ட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர்  வானமாமலை (வயது30). இவரது தம்பி முருகன் (28). இவர்கள் அந்த பகுதியில்  உள்ள குளத்தில் மணல் அள்ளி விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.இதில்  முருகன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
 
இது தொடர்பாக நாங்குநேரி இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் கடந்த 3  நாட்களுக்கு முன்பு முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மணல் கடத்தல்  தொடர்பாக மேலும் விசாரணை நடத்த நேற்று இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும்  போலீசார் மறுகால்குறிச்சி கிராமம் சென்றனர்.
 
அங்கு முருகனின் அண்ணன் வானமாமலையிடம் விசாரணை நடத்தியபோது அவருக்கும்  போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது வானமாமலையும் அவரது ஆதரவாளர்களும் அரிவாளால் இன்ஸ்பெக்டர்  விஜயகுமாரை தாக்க முயன்றதாகவும்,உடனடியாக இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தனது  கைத்துப்பாக்கியால் வானமாமலையை நோக்கி சுட்டதாகவும் காவல்துறை தரப்பில்  கூறப்படுகிறது.
 
இதில் வானமாமலையின் நெஞ்சில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே சுருண்டு  விழுந்து உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். சிறிது நேரத்தில்  மறுகால்குறிச்சி கிராம மக்கள் பெரும் கூட்டமாக திரண்டு வந்து துப்பாக்கி சூடு நடத்திய  போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி பலியான வானமாமலையின்  உடலுடன் நாகர்கோவில்- நெல்லை 4 வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.  ரோட்டில் கற்களையும் போட்டு போக்குவரத்தை தடை செய்தனர். இதனால் அந்த  வழியாக போக்குவரத்து தடை ஏற்பட்டது.
 
உடனடியாக சம்பவ இடத்துக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ், டி.ஐ.ஜி.  வரதராஜு, மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.  ஏராளமான போலீசாரும், அதிரடிப்படை போலீசாரும் குவிக்கப்பட்டு அசம்பாவிதம்  நடைபெறாமல் கண்காணிக்கப்பட்டது.
 
உயர் அதிகாரிகள் சமரசப்பேச்சுவார்த்தை நடத்தியதால் பொதுமக்கள் போராட்டத்தை  கைவிட்டனர். இதைத்தொடர்ந்து இரவு 8 மணிக்கு மேல் அந்த பகுதியில் போக்குவரத்து  சீரானது.

துப்பாக்கி சூட்டில் பலியான வானமாமலையின் உடல் இன்று அதிகாலை  பாளையங்கோட்டை ஹைகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.  அங்கு 3-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பிரேத பரிசோதனை நடத்தினர்.

உடலை வாங்க மறுப்பு
 
இந்நிலையில் வானமாமலை உயிரிழப்புக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை  எடுத்தால்தான், இன்று அவரது உடலை வாங்குவோம் என்று மறுகால்குறிச்சி கிராம  மக்கள் அங்கு மொத்தமாக கூடி அமர்ந்தனர்.

இதனால் இன்றும் நாங்குநேரி - மறுகால்குறிச்சியில் பதட்டம் நிலவுகிறது.அங்கு  அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் நாங்குநேரி மற்றும்  மறுகால்குறிச்சி விலக்கில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சமாதானம்; தடியடி!
 
இந்நிலையில், வானமாமலையின் உடலை ஒப்படைப்பதற்காக போலீசார் மற்றும் உயர்  அதிகாரிகள் வானமாமலையின் மனைவி மஞ்சு மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை  நடத்தினர்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பலியான வானமாமலையின் உடல் அவரது  சொந்த ஊருக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு, அங்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது. .

அதற்கு முன்னதாக பொன்னாகுடி‌ அருகே மர்ம கும்பல் சிலர் போலீஸின் வாகனங்களை அடித்து  நொறுக்கினர். இதனையடுத்து போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.  இதனால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது.

இடமாற்றம்
 
இந்நிலையில் துப்பாக்கி சூடு சம்பந்தமாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய  சேரன்மாதேவி உதவி கலெக்டர் ரோகிணி ராமதாசுக்கு, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.  நாங்குநேரி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு சுந்தர்ராஜன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று  நடந்த உண்மை சம்பவம் என்ன என்று விசாரணை நடத்தி வருகிறார். தென் மண்டல  ஐ.ஜி. ராஜேஷ் தாசும் இன்று சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

முதல்கட்டமாக துப்பாக்கியால் சுட்ட் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் இடமாற்றம் செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
 
விசாரணை அதிகாரிகளின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதும் மேல் நடவடிக்கை  எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது தவறு இருந்தால் அவர்  மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் எஸ்.பி. விஜயேந்திர பிதரி  அறிவித்துள்ளார்.