Published:Updated:

"போலீஸ் இன்சூரன்ஸ் குளறுபடி..." உயிருக்குப் போராடும் பெண்காவலர் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
"போலீஸ் இன்சூரன்ஸ் குளறுபடி..." உயிருக்குப் போராடும் பெண்காவலர் !
"போலீஸ் இன்சூரன்ஸ் குளறுபடி..." உயிருக்குப் போராடும் பெண்காவலர் !

"போலீஸ் இன்சூரன்ஸ் குளறுபடி..." உயிருக்குப் போராடும் பெண்காவலர் !

போலீஸாருக்கான 'தனியார் இன்சூரன்ஸ்' மூலம் அவர்களின் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, போலீஸாருக்குக்கூட பயன் இல்லை என்பதை நிரூபிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர் பெண் தலைமைக் காவலர் சங்கீதா. இவர், சென்னை மத்திய குற்றப்பிரிவில் பணியில் உள்ளார். கணவரால் கைவிடப்பட்ட சங்கீதா, ஏழாம் வகுப்பு படிக்கும் மகனுடன் சென்னையில் வசிக்கிறார். சங்கீதாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் ரத்தப்புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது. நோயின் தாக்கத்தால் அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படவே காவல்துறை பணிக்குச் சரியாகச் செல்ல முடியவில்லை. காவல்துறையில் எல்லா போலீஸாரும் செலுத்துவதுபோல இவரும் அரசால் பரிந்துரைக்கப்பட்ட தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மாதம் 180 ரூபாயை சம்பளத்தில் இருந்து கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் தனது சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்ற சங்கீதாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. "அவரின் காப்பீட்டு அட்டையை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது' என்று சங்கீதாவை விரட்டாத குறையாக அனைத்து மருத்துவமனைகளும் திருப்பி அனுப்பின.

கடந்த (12/07/2017) வாரம் 'விகடன்' இணையத்தில் "பெற்றோருக்குச் சிகிச்சை மறுப்பு! போலீஸ் இன்ஷூரன்ஸ் அவதி" என்பதை எழுதியிருந்தோம். தற்போது போலீஸாருக்கும் அந்த இன்சூரன்ஸ் மூலம் எந்தப்பயனும் இல்லை என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

விகடன் கட்டுரையில், "தமிழ்நாட்டில் மொத்தம் ஒரு லட்சத்து 11 ஆயிரம் போலீஸார் இருப்பதாக அரசின் கணக்குக் கூறுகிறது. மாதந்தோறும் இவர்களிடமிருந்து இன்ஷூரன்ஸ் தொகையாக மட்டும் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டு தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்குச் செலுத்தப்படுகிறது. ஆண்டுக்கணக்குப்படி மொத்தம் 22.5 கோடி ரூபாய்!" என்று சொல்லியிருந்தோம். ஆனால், அந்த நிறுவனத்தின் காப்பீட்டை, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் தலைமைக்காவலரால் பயன்படுத்த முடியவில்லை என்பது அபத்தமான உண்மை.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் தலைமைக் காவலர் சங்கீதாவின்  சொந்த ஊர் வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி. இரண்டு தம்பிகள் உள்ளனர். பாலாஜி என்ற பெரிய தம்பி இந்திய ராணுவத்தில் பணியாற்றுகிறார். அக்காவின் இந்த நிலையறிந்து துடித்துப்போன பாலாஜி, அவசரவிடுப்பில் சென்னை வந்தார்.

பாலாஜியிடம் பேசியபோது, "வருமானம் ஏதுமில்லாமல் இருக்கிற இன்னொரு தம்பிதான் அக்காவை அருகிலிருந்து பார்த்துக் கொள்கிறார். நான், கையில் இருக்கும் நகைகளை விற்று சில லட்சங்கள் வரை செலவுசெய்து விட்டேன். எந்த முன்னேற்றமும் இல்லை. கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜூன் 16-ம் தேதி  காலை சேர்த்தோம். ஒரேநாளில் ஒரு லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் பில் வந்திருக்கிறது.
இன்சூரன்ஸ் மூலம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று மருத்துவமனையின் இன்சூரன்ஸ் துறை பொறுப்பாளர்கள் சொன்னார்கள். ஆனால், புற்றுநோய் சிகிச்சைக்கு போலீஸார் செலுத்தும் காப்பீடு செல்லுபடியாகாது என்று கூறி பின்னர் நிராகரித்து விட்டனர். 'எத்தனைநாள் சிகிச்சை பெற வேண்டும் என்று தெரிவித்த பின், சிகிச்சைக்கான மொத்தத் தொகையையும் செலுத்தவேண்டும். சிகிச்சை முடிந்ததும் இன்சூரன்ஸ் தொகையைக் கழித்துக் கொண்டு செலுத்த வேண்டிய எஞ்சியுள்ள கட்டணத்தைச் செலுத்துங்கள்' என்றுதான் அனைத்து மருத்துவமனையிலும் சொல்கிறார்கள்.

மொத்தப் பணத்தையும் கட்டுகிற சூழ்நிலையில் நாங்கள் இல்லை. மேலும், இப்போது சங்கீதாவை அனுமதித்துள்ள மருத்துவமனையில் இருந்து ஓரிருநாளில் டிஸ்சார்ஜ்செய்வதாக இருந்தாலும் மேலும் சில லட்சங்கள் கட்டணமாகச் செலுத்த வேண்டி வரும். அடையாறு புற்றுநோய் மையத்திலும் சிகிச்சை அளிக்க உதவி கேட்டிருக்கிறோம்" என்று  சொன்னபோது, அவரின் கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது.

போலீஸ் அக்காவைக் காப்பாற்ற, ராணுவ வீரர் வடிக்கும் கண்ணீர்த்துளி ஆட்சியாளர்களின் இருக்கையைத் தொடும்போது இன்னும் உஷ்ணமாகத்தான் இருக்கும்....

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு