Published:Updated:

''சிஸ்டமே நாம்தான்!'' சீறும் ரியல் `சிங்கம் போலீஸ்` எஸ்.பி அண்ணாமலை #VikatanExclusive

''சிஸ்டமே நாம்தான்!''  சீறும் ரியல் `சிங்கம் போலீஸ்` எஸ்.பி அண்ணாமலை #VikatanExclusive
''சிஸ்டமே நாம்தான்!'' சீறும் ரியல் `சிங்கம் போலீஸ்` எஸ்.பி அண்ணாமலை #VikatanExclusive

''சிஸ்டமே நாம்தான்!'' சீறும் ரியல் `சிங்கம் போலீஸ்` எஸ்.பி அண்ணாமலை #VikatanExclusive

ப்படி ஒரு போலீஸ் அதிகாரியை நாம் சினிமாவில்தான் பார்க்க முடியும் என்றில்லை. நேரில்கூடப் பார்க்கலாம்! நேர்மையாக, அதிகார அழுத்தங்களுக்கு வளைந்துகொடுக்காமல் தன் கடமையில் எந்தவித பாரபட்சமும் காட்டாத ஒரு போலீஸ் அதிகாரியாக வலம்வருபவர், கர்நாடக மாநிலம் சிக்மங்கலூர் எஸ்.பி அண்ணாமலை. கடுமையான நடவடிக்கைகளாலும், நேர்மையாக சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளை அணுகி அதனை உடனடியாகத் தீர்ப்பதாலும், கர்நாடகாவில் இவரை `சிங்கம் போலீஸ்` என்கிறார்கள். மக்கள்முதல் ஊடகங்கள்வரை இவரின் அதிரடி நடவடிக்கைகளை இடைவிடாது பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவரிடம் உரையாடினோம்...

''உங்களைப் பற்றி?''

''என்னுடைய சொந்த ஊர் கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகே உள்ள சொக்கம்பட்டி. கோவையில் கல்லூரிப் படிப்பு முடிந்ததும், லக்னோவில் எம்.பி.ஏ படித்தேன். விவசாய குடும்பம்தான் எங்களுடையது. என் மனைவி கோவையைச் சேர்ந்தவர். நானும் அவரும் ஒரே கல்லூரியில்தான் படித்தோம். இரண்டு வயதில் குழந்தை ஒன்று இருக்கிறது''. 

''சிவில் சர்வீஸ்மீது எப்படி ஆர்வம் வந்தது?''
''லக்னோவில் படித்துக்கொண்டிருந்தபோது மும்பை அட்டாக் நடந்தது. அந்தச் சம்பவம் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதால் சிவில் சர்வீஸ்மீது ஆசை வந்தது''. 

''ஒரு தமிழரான உங்களை, கர்நாடகாவில் எப்படிப் பார்க்கிறார்கள்?''

''கர்நாடகாவில் தமிழர்களுக்கு நல்ல மரியாதை கொடுப்பார்கள். இங்கே அரசுப் பணியில் இருக்கும் மிக முக்கியமான அதிகாரிகளில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள்தான். வேலைக்குச் சேர்ந்த புதிதில் மொழி எனக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது. பிறகு பழகிக்கொண்டேன். தினமும் நுற்றுக்கணக்கான நபர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கும். ஒவ்வொரு நாளும் புதிதாக இருக்கும்''. 

''இதுவரை நீங்கள் செய்த அதிரடி மாற்றங்கள் குறித்து?''

''பான்மசாலா போட்டுக்கொண்டு தெருவில் சத்தம் போடுவது, பெண்களைக் கிண்டல் செய்வது... இப்படிச் சின்னச்சின்ன க்ரைம்மீது முதலில் கடுமையான நடவடிக்கை எடுத்தேன். அடுத்ததாக பான்மசாலா, குட்கா போன்றவற்றைத் தடை செய்தேன். காரணம், இந்தப் போதைப் பொருள்களால் பள்ளி, கல்லூரி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. ஏனென்றால், இந்தியாவைக் கட்டமைப்பவர்களே மாணவர்கள்தான். எனவே, வாரத்தில் மூன்று நாள்கள் மாவட்டத்தில் இருக்கும் ஏதாவது ஒரு பள்ளி, கல்லூரிக்குச் சென்று மாணவர்களோடு கலந்துரையாடுவேன். அதேபோல், என் கட்டுப்பாட்டில் இருக்கும் இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.ஐ-க்களையும் மாணவர்களோடு சந்தித்துப் பேச உத்தரவு போட்டிருக்கிறேன். இதனால் மாணவர்களின் போக்கு மாறியிருக்கிறது''.

''மாணவர்களிடம் நடத்தப்படும் கலந்துரையாடல் என்ன?''

''கலந்துரையாடலின்போது குற்றங்களின் வகைகள், போதைப் பொருள்கள், மாஃபியா குழுக்கள், சமூக வலைதள குற்றங்கள் குறித்துப் பேசப்படும். நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதுபோன்ற நடவடிக்கைகளால் பல மாணவர்களை மீட்டெடுத்திருக்கிறோம். மாணவர்கள் - போலீஸ் இருவருக்குமான நெருக்கத்தை அதிகப்படுத்தியிருக்கிறோம். அதை, மாணவர்கள் வழியாக அவர்களின் பெற்றோர்களுக்கும் சென்று சேர்த்திருக்கிறோம்''.

'' 'உடல் எடையைக் குறைத்தால்தான் டிரான்ஸ்ஃபர் தருவேன்' என்கிறீர்களாமே?''

''அதெல்லாம் இல்லை. என் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் 1,425 போலீஸ்காரர்களில், 47 சதவிகிதம் பேர் உடல் பருமனுடன் இருக்கிறார்கள். 33 சதவிகிதம் பேர் சுகருடன் இருக்கிறார்கள். 6 சதவிகிதம் பேர் இதய நோயாளிகளாக இருக்கிறார்கள் என ஒரு மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது. இதனையடுத்து, அவர்கள் அனைவரையும் அழைத்து, 'உடலைச் சரியாகப் பராமரிக்க வேண்டும். அடுத்தமுறை சோதனை செய்யும்போது யார்யார் உடலைக் குறைத்து, ஆரோக்கியமாக இருக்கிறீர்களோ அவர்களுக்கு ரிவார்டு கொடுக்கப்படும்' என்றேன். ரிவார்டு என்றதும், 1,000 மற்றும் 2,000 ரூபாய் பரிசு கொடுப்பேன் என்று நினைத்துக்கொண்டு யாருமே அதில் ஆர்வம் செலுத்தவில்லை. 'அதற்கு என்ன காரணம்' என்று அவர்களிடம் கேட்டபோது, 'உடலைக் குறைத்தால் நாங்கள் விருப்பப்பட்ட இடத்துக்கு டிரான்ஸ்ஃபர் தருவீர்களா' என்று கேட்டனர். அதனால், நானும் 'சரி தருகிறேன்... குறைத்துக் காட்டுங்கள்` என்றேன். இப்படிச் சொன்னபிறகு, 16 பேர் உடலைக் குறைத்துக்கொண்டு என்னிடம் வந்தனர். அதில், ஒருவர் 14 கிலோ அளவுக்கு உடலைக் குறைத்துக்கொண்டு வந்தார். அவர்கள் விருப்பப்பட்ட இடத்துக்கு டிரான்ஸ்ஃபர் கொடுத்து அனுப்பினேன். இதைப் பார்த்து அடுத்ததாக 30 பேர் உடலைக் குறைக்க களத்தில் இறங்கியிருக்கிறார்கள்''.

''அது என்ன `மார்டன் போலீஸ் ஸ்டேஷன்'?''

''போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று பிரச்னையைச் சொன்னால், ஏழு நிமிடத்தில் அதை முடித்துக்கொடுப்போம். உதாரணத்துக்கு, 'ஒரு சின்ன கிரைம் நடந்துவிட்டது' என்று ஒருவர், போலீஸ் ஸ்டேஷனுக்குள் வந்துவிட்டால், அடுத்த ஏழாவது நிமிடம் சம்பவ இடத்துக்கு... அந்தப் பகுதியில் இருக்கும் ஒரு போலீஸ் சென்று நிலைமையைக் கட்டுக்குள்வைக்க வேண்டும். அப்படியென்றால், 24 மணி நேரமும் நாங்கள் விழித்துக்கொண்டிருக்க வேண்டும். இப்படி அந்தச் சிஸ்டம் இன்றுவரை  வெற்றிகரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை. இதனைச் சொன்னபோது யாரும் நம்பவில்லை. ஆனால், செய்துகாட்டினோம். அடுத்ததாக, காவல் துறையில் ஓர் ஆண்ட்ராய்டு செயலியை அறிமுகப்படுத்தினோம். அதில், இரண்டு வசதிகள் இருக்கும். ஒன்று, காவல் துறையின் அப்டேட்கள். அதாவது மாவட்டத்தில் எங்கே, என்ன குற்றங்கள் நடந்தன, அவை எப்படித் தீர்க்கப்பட்டன, போக்குவரத்து அப்டேட்கள் போன்றவை. இரண்டாவது, மக்கள் எங்களோடு தொடர்பில் இருப்பதற்கான வசதி. அதனைப் பயன்படுத்தி ரோட்டில் ஏதாவது ஒரு குற்றம் நடந்தால், அந்தச் செயலியில் பதிவிட்டால் போதும்.... உடனே சம்பவ இடத்துக்கு நாங்கள் வந்துவிடுவோம். யார் தகவல் கொடுத்தார்கள் என்று யாருக்கும் தெரியாது. புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேஷன் வரவேண்டிய அவசியம் இல்லை. அந்தச் செயலியே போதுமானதுதான். மேலும், தனிப்பட்ட முறையில் எனக்கு அந்தச் செயலி மூலம் தகவல்கள், புகார்கள் கொடுக்க முடியும். அறிமுகம் செய்த மூன்று மாதங்களில் 15 ஆயிரம் பேர் டவுன்லோடு செய்திருக்கிறார்கள்''.

''உங்கள் நடவடிக்கைகளில் அதிகப் பாராட்டுகளைப் பெற்றது எது?''

''பாராட்டை எதிர்பார்த்து நான் எதையும் செய்யவில்லை. பன்னஞ்சே ராஜாவை கைதுசெய்ததுதான் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு நிகழ்வு. நிழல் உலக தாதாவான அவனை, மொரோக்கோ நாட்டு போலீஸார் உதவியுடன் பிடித்தோம். அவனுடைய கைதுமூலம், கடற்கரைக் கர்நாடகாவில் மிகப்பெரிய மாற்றம் நடந்திருக்கிறது... குற்றங்கள் குறைந்திருக்கின்றன''.

'' 'அடிச்சு கைகாலை உடைத்துவிடுவேன்` என்று நீங்கள் பேசுவது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறதே?''

''அந்தச் சம்பவம், நேர்மையான ஒரு போலீஸ் அதிகாரி துப்பறியும்போது நடந்தது. இக்கட்டான சூழ்நிலையில் அவர் மாட்டிக்கொண்டபோது... அவரை எதிரிகளிடமிருந்து காப்பாற்ற நானே களத்தில் இறங்க வேண்டியிருந்தது. அப்போது நடந்த சம்பவம்தான் தற்போது வீடியோவில் வெளிவருகிறது. அந்தப் பிரச்னையைச் சுமுகமாக முடித்ததால்தான், 'சிங்கம் போலீஸ்' என்றனர்''.

''சிக்மங்கலூரில் எந்தத் தியேட்டர் வாசல்களிலும் பட்டாசு வெடிப்பதில்லையாமே?''

''ஆமாம். ஒருநாள் தியேட்டர் ஒன்றில் புதுப்படம் வெளியானதால்... ரசிகர்கள், போக்குவரத்துக்கு இடையூறாகப் பேனர்களை வைத்தது மட்டுமல்லாமல், பட்டாசுகளையும் கொளுத்திக்கொண்டிருந்தனர். இதனால் போக்குவரத்து தடைப்பட்டது. அந்த இடத்துக்குச் சென்ற நான்... ரசிகர்களிடம், 'இன்னும் பத்து நிமிடத்தில் ரோட்டில் எந்தக் குப்பையும் இருக்கக்கூடாது. உடனே கூட்டிச் சுத்தம் செய்ய வேண்டும். அப்படியே இந்த பேனர்களையும் அகற்ற வேண்டும்' என்றேன். `முடியாது` என்று மறுத்தனர். `நீங்கள் சுத்தம் செய்தால்தான் படம் பார்க்கவிடுவேன்` என்றேன். பிறகு, அந்தக் குப்பையைக் கூட்டிச் சுத்தம் செய்தார்கள். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, சிக்மங்கலூரில் உள்ள தியேட்டர் வாசல்களில் யாரும் பட்டாசு வெடிப்பதில்லை''.

''உங்களுக்குப் பிடித்த போலீஸ் அதிகாரி யார்?''

''ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியான விஜயகுமாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்தான் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். ஒரு போலீஸ்காரராக அவர் செய்த சாதனைகள் அதிகம்''. 

''போலீஸ் அதிகாரியாக விரும்பும் இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?''

''ஆர்வமும் நேர்மையும் மிக முக்கியம். உங்கள் கையில் அதிகாரம் இருக்கும். அதனை நேர்மையாகப் பயன்படுத்தி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். சர்வீஸுக்கு வரும் முன்னர் எவ்வளவு ஆர்வம் இருந்ததோ, அதே ஆர்வம் உள்ளே வந்த பின்னரும் இருக்க வேண்டும். பெரும்பாலானோருக்கு ஒரு வருடத்திலேயே ஆர்வம் குறைந்துவிடுகிறது. கேட்டால், இந்தச் சிஸ்டம் என்னை வேலை செய்யவிடாமல் தடுக்கிறது என்பார்கள். அது தவறு. சிஸ்டமே நாம்தான். நாம் நேர்மையாக இருந்தால் அதுவும் சாத்தியமே''.

அடுத்த கட்டுரைக்கு