Published:Updated:

மதுரை அருகே அம்பேத்கார், இமானுவேல்சேகரன் சிலைகள் உடைப்பு!

மதுரை: மதுரை அவனியாபுரம் பகுதியில் அம்பேத்கார், இமானுவேல் சேகரன் சிலைகள் விஷமிகளால் உடைக்கப்பட்டதால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்ட நிலையில், சிலை உடைப்பை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

மதுரை அவனியாபுரத்தை அடுத்த பெருங்குடி மெயின் ரோட்டில் சட்டமேதை அம்பேத்காருக்கு முழு உருவச்சிலை வைக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் பெருங்குடி அருகே உள்ள சின்னஉடப்பில் அம்பேத்கார், இமானுவேல் சேகரனுக்கு சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த சிலைகளை விஷமிகள் சிலர் சேதப்படுத்திவிட்டனர்.நேற்று காலை அந்த பகுதிக்கு சென்றவர்கள் தலை துண்டிக்கப்பட்டு சிலைகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியதால் நேற்று அதிகாலை 5 மணிக்கு பொதுமக்கள் சிலைகளின் அருகே திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.

மறியல்

அந்த பகுதியில் உள்ள விளம்பர போர்டுகளை சிலர் உடைத்து முட்கள், கற்களை ரோட்டில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

மாட்டுத்தாவணியிலிருந்து ரிங் ரோடு வழியாக தூத்துக்குடி, நெல்லை செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டு மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

இதே போல் பெரியார் பஸ் நிலையத்திலிருந்து அவனியாபுரம், காரியாபட்டி செல்லும் பஸ்களும் நிறுத்தப்பட்டன. அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டது.

கலெக்டர் பேச்சுவார்த்தை

மறியலில் ஈடுபட்டவர்கள் சிலைகளை உடைத்த விஷமிகளை கைது செய்யக்கோரி கோஷமிட்டனர். இதையடுத்து போலீஸ் உயரதிகாரிகளும்,கலெக்டர் அன்சுல்மிஸ்ராவும் மறியல் நடந்த இடத்துக்கு விரைந்து வந்தனர்.அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் ஏற்படுத்த முயன்றனர்.


ஆனால் மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பாண்டியம்மாள், இன்குலாப், பஞ்சமி நில மீட்புக்குழு தலைவர் அய்யங்காளை, ஆதித்தமிழர் மக்கள் கட்சி நிறுவனர் கல்யாணசுந்தரம், பொறியாளர் தங்கபாண்டி ஆகியோர், "சிலைகளை உடைத்த குற்றவாளிகளை கைது செய்தால்தான் மறியலை கைவிடுவோம். அதுவரை மறியல் தொடரும்'' என்று கூறினார். இதனால் நேற்று மதியத்திற்கு பின்னரும் மறியல் நீடித்தது.

இந்த மறியலால் மதுரை விமான நிலையத்துக்கு செல்ல வேண்டியவர்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.

இதே போல் மேலூர் பஸ் நிலையம் முன்பும், கொட்டாம்பட்டி,திருமங்கலம், கள்ளிக்குடி உள்பட வேறு சில பகுதிகளிலும் மறியல் நடந்தது.அங்கு போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.பின்னர் அவர்களை விடுவித்தனர்.

இந்நிலையில் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.