Published:Updated:

அந்த 4 இளைஞர்கள்தான் குற்றவாளிகளா? - ஹைதராபாத் காவல்துறையின் 'குறுக்குவழி'!

ஹைதராபாத்
ஹைதராபாத்

ஒருவேளை கொல்லப்பட்ட இளைஞர்களின் உடலை மறுபிரேதப்பரிசோதனை செய்து, அந்த உடலில் உள்ள காயங்கள் மற்றும் குண்டு துளைத்தப் பகுதிகளை ஆராய்வதன்மூலம், அவர்கள் தப்பி ஓடியபோது சுடப்பட்டார்களா அல்லது கொல்லப்பட்ட பிறகு இறந்த உடல்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா என்பதை அறிந்துகொள்ளலாம்.

ஹைதராபாத்தில் போலீஸார் நடத்திய என்கவுன்ட்டருக்குப் பிறகு சமூக வலைதளத்தில் வந்த பதிவுகளைப் பார்க்கும்போது சிரிப்பதா, அழுவதா எனத் தெரியவில்லை. ஒரு வழக்கறிஞர் நண்பர், 'இனி எவனாவது மனித உரிமை என்று வாங்கடா பார்க்கலாம்!' எனப் பதிந்திருந்தார். அதைப் படித்தவுடன் அவரைத் தொடர்புகொண்டு, ''சட்டம் படித்து வக்கீல் தொழில் செய்யும் நீங்களா இவ்வாறு பதிவிட்டீர்?'' என்று கேட்டேன். நீண்ட உரையாடலுக்குப் பிறகு அவர் வருத்தம் தெரிவித்தார். படித்தவர்களின் பதிவுகளே இப்படியெனில், அரைகுறையாகப் படித்தவர்களுடைய பதிவுகள் எப்படி இருக்கும் என யூகித்துக் கொள்ளலாம். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2E8UjdM

நீதிமன்றங்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்ட அதிகாரத்தை 'என்கவுன்ட்டர்' என்ற பெயரில் காவல்துறை சர்வசாதாரணமாகக் கடைப்பிடிக்கிறது. சேஷாசலம் வனப்பகுதியில் 20 தமிழகத் தொழிலாளர்கள் ஆந்திர போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதைப் பார்த்து தமிழக மக்கள் ஆத்திரமடைந்தனர். ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடிய மக்களில் 14 பேரை காவல்துறையினர் சுட்டு வீழ்த்திய கொடுமை, மனதைவிட்டு அகலவில்லை.

எப்படி இருப்பினும், இறந்துபோன நான்கு இளைஞர்கள்தான் குற்றவாளிகள் என்று, எந்த சாட்சியங்களின் அடிப்படையில் காவல் துறையினர் முடிவுக்கு வந்தார்கள் என்பது இன்னும் தெளிவாக்கப்படவில்லை

ஆனாலும், மக்கள் உணர்வுகளை மூலதனமாக்கி, விசாரணை தொடங்கும் முன்பே 'இவர்கள்தான் குற்றவாளிகள்' என்ற பிம்பத்தைக் கட்டமைத்து தங்கள் துப்பாக்கிகளின் பசியைத் தீர்த்துவைத்ததுடன், மக்களிடையே வீரப் புருஷர்களாக வலம்வருகிறார்கள் காவல்துறையினர். ஹைதராபாத் என்கவுன்ட்டர் காவல் அதிகாரியை மக்கள் தோளில் சுமந்து, பட்டாசுகள் வெடித்து ஊர்வலமாகச் சென்றதுடன், வழியில் உள்ளவர்கள் வாயில் லட்டுகளைத் திணித்துச் சென்றனர். அதைப் பார்க்கும்போது இன்னும் நம் அரசமைப்புச் சட்டத்தையே அவர்கள் புரிந்துகொள்ளவில்லை; நமது குற்றவியல் சட்டத்தின் அடிப்படையான, 'நூறு குற்றவாளிகளைத் தப்பவிட்டாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது' என்ற கூற்றையும் புரிந்துகொள்ளவில்லை என்ற வருத்தம் ஏற்படுகிறது.

ஹைதராபாத்தில் நான்கு இளைஞர்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வுகளைப் பார்ப்போம். குற்றவியல் நடைமுறைப்படி நான்கு பேரை கைதுசெய்த காவல்துறையினர், குற்றவியல் நடுவரிடம் மனுசெய்து ஒரு வாரத்துக்கு காவல்துறையின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உத்தரவு பெற்றனர். பிறகு, வழக்கமான நடைமுறைப்படி சம்பவம் நடந்த இடத்துக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கே அவர்களில் இருவர் காவல்துறையினரிடமிருந்து துப்பாக்கியைப் பறிக்க எண்ணி, தப்பித்து ஓட முயன்றதால் காவல்துறை அவர்களைச் சுட்டு வீழ்த்த நேர்ந்தது என்று கூறப்படுகிறது. இந்தக் கதையை எவரும் நம்பவில்லையென்றாலும் என்கவுன்ட்டரை மக்கள் வரவேற்கின்றனர்.

தற்போது இந்த என்கவுன்ட்டரை ஆராய்வதற்கு, தேசிய மனித உரிமை கமிஷன் முன்வந்துள்ளது. இதற்கிடையில், 'சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞர்களை அடக்கம் செய்யக் கூடாது; பிரேதங்களைப் பாதுகாத்து வைக்க வேண்டும்' என்று தெலங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒருவேளை கொல்லப்பட்ட இளைஞர்களின் உடலை மறுபிரேதப்பரிசோதனை செய்து, அந்த உடலில் உள்ள காயங்கள் மற்றும் குண்டு துளைத்தப் பகுதிகளை ஆராய்வதன்மூலம், அவர்கள் தப்பி ஓடியபோது சுடப்பட்டார்களா அல்லது கொல்லப்பட்ட பிறகு இறந்த உடல்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா என்பதை அறிந்துகொள்ளலாம்.

எப்படி இருப்பினும், இறந்துபோன நான்கு இளைஞர்கள்தான் குற்றவாளிகள் என்று, எந்த சாட்சியங்களின் அடிப்படையில் காவல் துறையினர் முடிவுக்கு வந்தார்கள் என்பது இன்னும் தெளிவாக்கப்படவில்லை. இதற்கு பதில் அளிக்கும்விதமாக இளைஞர் ஒருவர் பெட்ரோல் பங்க் ஒன்றில் பாட்டிலில் பெட்ரோல் வாங்கும் சி.சி.டி.வி கேமராக் காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். இந்த வன்புணர்ச்சி மற்றும் கொலைக்குற்றத்தில் நான்கு இளைஞர்களுக்கும் தனித்தனி பங்கு என்ன என்பதையும், இதற்குப் பின்னணியில் யாரெல்லாம் செயல்பட்டார்கள் என்பதையும் விளக்கக் கடமைப்பட்டுள்ள காவல்துறை, என்கவுன்ட்டர் என்ற குறுக்குவழியைப் பின்பற்றியுள்ளது.

அந்த 4 இளைஞர்கள்தான் குற்றவாளிகளா? - ஹைதராபாத் காவல்துறையின் 'குறுக்குவழி'!

ஒரு நபரின் சுதந்திரத்தைப் பறிப்பதற்கு, சட்டத்தின் நடைமுறைச் செயல்பாடு மட்டுமே வழிவகுக்க வேண்டும் என்ற ஆதார உரிமையை மக்கள் மறந்துவிட்டால், அந்த நாடு பேயாட்சி செய்யும் நாடாக மாறிவிடும்.

நான்கு பேர்தான் குற்றவாளி என எடுத்துக்கொண்டாலும், அதில் ஒருவர் நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்து குற்றத்தை நிரூபிப்பதில் உதவி செய்தால், அவருக்கு நீதிமன்றம் குறைந்த தண்டனை வழங்கும் வாய்ப்பும் இருந்திருக்கும். அதேபோல் நான்கு பேரும் தாங்கள் குற்றமற்றவர்கள் என நிரூபிப்பதற்கான வாய்ப்புகளும் நீதிமன்ற விசாரணையில் கிடைத்திருக்கலாம். மேலும், அவர்கள் செய்த குற்றத்துக்கு மரண தண்டனை தவிர வேறு தண்டனை எதுவும் அளிக்க முடியாது என்ற முடிவுக்கான காரணத்தை செஷன்ஸ் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட வேண்டும். மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் மேல்முறையீடு செய்யவில்லை என்றாலும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி கட்டாயமாக அவர்களின் வழக்குகள் உயர் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டாலொழிய, அரசு அவர்களைத் தூக்கிலிட முடியாது.

நிர்பயா வழக்கில் இந்த நடைமுறைகளெல்லாம் முடிந்த பிறகும், அந்தக் குற்றவாளியைத் தூக்கிலிடுவதற்கான உரிய நபரும் தூக்குக்கயிறும் தயாராக இல்லை என்பதால், அவர் இன்னும் மரணக்கொட்டடியில் காத்திருக்கிறார். இதற்கெல்லாம் காத்திருக்காமல் புலனாய்வு, குற்ற விசாரணை மற்றும் நீதிமன்றம் ஆகிய மூன்றும் ஒன்றிணைந்த நிறுவனமாக, ஹைதராபாத் காவல்துறை தன்னை மாற்றிக்கொண்டுள்ளது.

ஒரு நபரின் சுதந்திரத்தைப் பறிப்பதற்கு, சட்டத்தின் நடைமுறைச் செயல்பாடு மட்டுமே வழிவகுக்க வேண்டும் என்ற ஆதார உரிமையை மக்கள் மறந்துவிட்டால், அந்த நாடு பேயாட்சி செய்யும் நாடாக மாறிவிடும். அப்படிப்பட்ட நாட்டில் பிணங்களைத் தின்னும் சாத்திரங்கள்தான் மிஞ்சும் என்ற கூற்று சொல்லித் தெரியத் தேவையில்லை. நீதித்துறை நடைமுறைகளால் நீதி கிடைக்க காலதாமதமாகிறது என்ற ஆதங்கம் புரிகிறது. அதை முடுக்குவதற்கான சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்தியத் தலைமை நீதிபதி பாப்டே, 'திடீர் நீதி என்பது சட்ட நடைமுறையன்று' என எச்சரித்துள்ளதை நாம் புரிந்துகொள்ள முயல்வோம்.

- இத்துடன் 'மக்கள் கோபத்துக்கு அடிபணியும் அரசு', 'சமநிலை தவறும் நீதிமன்றங்கள்' உள்ளிட்டவற்றைச் சுட்டிக்காட்டி, சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.சந்துரு ஜூனியர் விகடன் இதழில் எழுதிய சிறப்புப் பார்வையை முழுமையாக வாசிக்க > என்கவுன்ட்டர் என்னும் திடீர் பாயசம்! https://www.vikatan.com/news/general-news/justice-k-chandru-discussion-about-encounter

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

அடுத்த கட்டுரைக்கு