Published:Updated:

பணத்தைக் கொடுக்கலேன்னா... சாத்தான்குளம் சம்பவம் மாதிரி ஆகிடும்!

அமுதா
பிரீமியம் ஸ்டோரி
அமுதா

- கட்டப் பஞ்சாயத்து செய்தாரா வளசரவாக்கம் இன்ஸ்பெக்டர்?

பணத்தைக் கொடுக்கலேன்னா... சாத்தான்குளம் சம்பவம் மாதிரி ஆகிடும்!

- கட்டப் பஞ்சாயத்து செய்தாரா வளசரவாக்கம் இன்ஸ்பெக்டர்?

Published:Updated:
அமுதா
பிரீமியம் ஸ்டோரி
அமுதா

தம்பி வாங்கிய கடனுக்கு அண்ணனைக் கடத்தி, மிரட்டி, பணம் பறிப்பதற்கு சென்னை வளசரவாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அமுதா உடந்தையாகச் செயல்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. சட்டவிரோதமான இந்தச் செயலைச் செய்ததாகக் கூறி, அமுதா தலைமையிலான போலீஸார்மீது வழக்கு பதிவுசெய்ய உத்தரவிட்டிருக்கிறது சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றம்.

பணத்தைக் கொடுக்கலேன்னா... சாத்தான்குளம் சம்பவம் மாதிரி ஆகிடும்!

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகேயுள்ள குப்பாபுரத்தைச் சேர்ந்தவர் சாலமோன். இவர், அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்துவருகிறார். சினிமாத்துறையில் ஒளிப்பதி வாளராகப் பணிபுரிந்துவரும் இவரின் தம்பி தேவராஜுக்கும், திரைப்பட இயக்குநர் சிவக்குமார் நாயருக்கும் தொழில்ரீதியாகப் பணப் பிரச்னை இருந்திருக்கிறது. வாங்கியதாகக் கூறப்படும் ரூ.21 லட்சத்தை தேவராஜால் திருப்பிக் கொடுக்க முடியாமல் போயிருக்கிறது. இந்தநிலையில் சிவக்குமார் நாயர் மூன்று மாதங்களுக்கு முன்னர் இன்ஸ்பெக்டர் அமுதா, எஸ்.ஐ ரமேஷ் கண்ணன் மற்றும் நான்கு காவலர்களுடன் தூத்துக்குடிக்கு வந்து சாலமோனைக் கடத்தி, தாக்கி, கடுமையாக மிரட்டி ரூ.4,50,000 ரொக்கத்தைப் பறித்ததாகச் சொல்லப்படுகிறது. இது குறித்து சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் சாலமோன் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, ‘‘காவல்துறை உயரதிகாரிகளிடம் முன் அனுமதி பெற்று, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர்மீது வழக்கு பதிவு செய்யலாம்” என்று சமீபத்தில் நீதிபதி சரவணன் தீர்ப்பளித்துள்ளார்.

`என்ன நடந்தது...’ என சாலமோனிடம் பேசினோம். ‘‘ஏதாவது திருவிழா, விசேஷம்னா மட்டும்தான் என் தம்பி தேவராஜ் ஊர்ப் பக்கம் வருவான். அவனோட கொடுக்கல் வாங்கல் எதுவுமே எனக்குத் தெரியாது. சொந்தக்காரங்க கல்யாணத்துக்காகக் குடும்பத்தோட சோலைக்குடியிருப்பு கிராமத்துக்குப் போயிருந்தப்ப, அக்டோபர் 23-ம் தேதி சாயங்காலம், டெம்போ வண்டியில போலீஸ்காரங்க என்னைத் தேடி வந்தாங்க. சிவக்குமார் நாயர் என்னைப் பார்த்து, ‘நீதான் சாலமோனா? உன் தம்பி எங்கிட்ட கடனை வாங்கிட்டு ஓடிட்டான்’னு சொன்னார். இன்ஸ்பெக்டர் அமுதா, ‘உங்கிட்ட விசாரிக்கணும். வா, திருச்செந்தூர் ஸ்டேஷனுக்குப் போலாம்’னு சொல்லி வண்டியில ஏத்திக்கிட்டாங்க. ஆனா திருச்செந்தூர் ஸ்டேஷன் போகாம, திருநெல்வேலி ரூட்டுல ரோட்டோரமா வண்டியை நிறுத்திட்டாங்க.

ரமேஷ் கண்ணன் - சிவக்குமார் நாயர்
ரமேஷ் கண்ணன் - சிவக்குமார் நாயர்

என் பேன்ட், பெல்ட்டை எஸ்.ஐ ரமேஷ் கண்ணன் கழட்டி, அமுதா மேடத்துக்கிட்ட கொடுத்தார். கூட இருந்த மத்த போலீஸ்காரங்க. என் கையைப் பிடிச்சு, வாயையும் பொத்திட்டாங்க. அந்தம்மா பெல்ட்டால கண்மூடித்தனமா அடிச்சாங்க. வலி பொறுக்க முடியாம அழுதேன். ‘இவர்கிட்ட (சிவக்குமார் நாயர்) உன் தம்பி தொழிலுக்காக 21 லட்சம் பணம் வாங்கியிருக்கான். அந்த ரூவாய நீதான் தரணும். ஒழுங்கு மரியாதையா ரூவாயை ரெடி பண்ணு. இல்லேன்னா. உங்கவூரு சாத்தான்குளத்துல தகப்பன், மவனை அடிச்சுக் கொன்னது மாதிரி உன்னையும் கொன்னு தூக்கி வீசிட்டுப் போயிருவேன்’னு சொன்னாங்க. ‘அவன் பணம் வாங்கினதுக்கு நான் எப்படித் தர முடியும்’னு அழுதுக்கிட்டே கேட்டேன். அதுக்குக் கழுத்தை நெரிச்சாங்க... ரெண்டு காதுலயும் கையால ஓங்கி அடிச்சாங்க.

மறுநாள் காலையில சென்னைக்குக் கூட்டிட்டு வந்துட்டாங்க. போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போகாம, வேறொரு இடத்துல வெச்சிருந்தாங்க. என் தங்கச்சி மாப்பிள்ளைகிட்ட அவசரப் பணத் தேவைனு கேக்கவும், நாலரை லட்சம் ரூபாயைக் கொண்டுவந்து கொடுத்தார். அதுல ஒன்றரை லட்சத்தை அமுதா மேடம் எடுத்துக்கிட்டு, மிச்சம் மூணு லட்சத்தை சிவக்குமார் நாயரிடம் கொடுத்துட்டாங்க. ‘நடந்ததை வெளியே சொன்னா உன்னையும், உன் பிள்ளைகளையும் கொன்னுடுவோம்’னு மிரட்டி அனுப்பிட்டாங்க’’ என்றார் கண்ணீருடன்.

இது குறித்து சாலமோனின் வழக்கறிஞரான ராஜீவ் ரூபஸிடம் பேசினோம். ‘‘போலீஸாரின் வாகனத்தில் வராமல், யூனிஃபார்ம் அணியாமல், சிவக்குமார் நாயருக்கு ஆதரவாகக் கட்டப் பஞ்சாயத்து செய்து பணம் பெற்றுக் கொடுக்கச் செயல்பட்டிருக்கிறார் இன்ஸ்பெக்டர் அமுதா. அடியாட்களைப்போல போலீஸார் செயல்பட்டதையே இது காட்டுகிறது’’ என்றார் காட்டமாக.

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி-யான ஜெயக்குமாரிடம் பேசினோம். ‘‘சாத்தான்குளம் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, வளசரவாக்கம் காவல் நிலைய போலீஸார்மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்வதற்கு நேரடியாக எனக்கு அதிகாரம் இல்லை. சென்னை போலீஸ் கமிஷனருக்கே முழு அதிகாரம் உள்ளது. இது சம்பந்தமாக அவருக்குக் கடிதம் அனுப்பியுள்ளேன். கமிஷனரின் அனுமதி கிடைத்த பிறகு இன்ஸ்பெக்டர் அமுதா உள்ளிட் டோர்மீது வழக்கு பதிவுசெய்யப்படும்’’ என்றார்.

சாலமோன் - ராஜீவ் ரூபஸ்
சாலமோன் - ராஜீவ் ரூபஸ்

இன்ஸ்பெக்டர் அமுதாவிடம் பேசினோம். ‘`தான் இயக்கிய திரைப்படத்தின் ஹார்டு டிஸ்க்கைத் தராமல் கேமராமேன் தேவராஜ் ஏமாற்றுவதாக சிவக்குமார் நாயர் புகாரளித்தார். தேவராஜிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. தூத்துக்குடியிலிருக்கும் சாலமோனிடம் அவர் போனில் பேசியது தெரியவரவும், அவரைத் தொடர்புகொண்டோம். தம்பியைக் காவல் நிலையத்துக்கு அழைத்து வருவதாகக் கூறியவர், என் செல்போன் நம்பரை பிளாக் செய்துவிட்டு அமைதியாகிவிட்டார். இதற்கிடையில் சிவக்குமார் நாயரும், சாலமோன் தரப்பும் ஒரு அக்ரிமென்ட் போட்டிருக்கிறார்கள். அதனால், ‘மூன்று மாதங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டாம்’ என்று சிவக்குமார் நாயர் எழுதிக் கொடுத்தார். அதன் பிறகுதான் சாலமோனிடம் சட்டப்படி விசாரணை நடத்தினோம். அவர் சொல்வதுபோல் எந்தத் தாக்குதலிலும் நாங்கள் ஈடுபடவில்லை. எதற்காக இப்படிப் புகார் கொடுத்தார் என்று தெரியவில்லை. வழக்கைச் சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்’’ என்றார்.

காவல்துறைமீது இப்படியான புகார்கள் எழுவது, சட்டத்துறை மீதான மக்களின் நம்பிக்கையைக் குலைத்துவிடும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism