Published:Updated:

கைதிகள் கைகளில் மாவுக்கட்டு... காவல்துறையின் சப்பைக்கட்டு!

சமீபகாலமாக போலீஸாரிடம் சிக்கிய குற்றவாளிகள் கையில் கட்டுடன் இருக்கும் புகைப்படங்களை அதிகம் பார்க்க முடிகிறது.

போலீஸ் ட்ரீட்மென்ட்
போலீஸ் ட்ரீட்மென்ட் ( ஷபீர் அகமது )

போலீஸாரிடம் சிக்கிய குற்றவாளிகள் கையில் கட்டுடன் இருக்கும் புகைப்படங்களை சமீபகாலமாக அதிகம் பார்க்க முடிகிறது. தவறு இழைத்தவர்கள் தண்டனைக்கு உரியவர்கள்தான், அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவர்களின் கைகளை உடைத்து அதைப்புகைப்படமாக எடுத்து யார், எதற்காக வெளியிடுகிறார்கள் என்கிற கேள்விகள் எழுகின்றன. அதுகுறித்து தெரிந்துகொள்வதற்காக சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே விஸ்வநாதனைத் தொடர்புகொண்டு பேசினேன்.

அவர் அது தொடர்பாக ஒரு போலீஸ் அதிகாரியிடம் பேசச்சொன்னார். அவர் நம்மிடம், ``இந்தப் படங்களை நாங்கள் யாரும் அதிகாரபூர்வமாக வெளியிடுவதில்லை. வெளியிடவும் கூடாது. இந்தப்படங்கள் எப்படியோ வெளியே வருகின்றன. இது மிகப்பெரிய தவறு. அது குறித்து விசாரித்து வருகிறோம். அடிப்படையில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய இன்னொரு விஷயம், குற்றவாளிகள் எனக்கருதி எங்களால் கைது செய்யப்பட்டவர்களின் கை, கால்களை நாங்கள் வேண்டுமென்றே உடைப்பது போன்ற ஒரு தோற்றம் வெளியே இருக்கிறது. நிச்சயம் அதில் கடுகளவும் உண்மையில்லை.

நாங்கள் யாருடைய கை, கால்களையும் உடைப்பதில்லை. எங்கள் காவலர்கள் குற்றவாளிகளைப் பிடிக்கப்போகும்போது, அவர்கள் தப்பித்து ஓடுவார்கள். பாலத்திலிருந்து குதிப்பார்கள். அப்போது அவர்களுக்கு ஏற்படுகிற காயங்கள்தான் இவை.

சென்னை போலிஸ்
சென்னை போலிஸ்
விகடன்

முதல் தகவல் அறிக்கையை நீங்கள் பார்த்தாலே எதனால் இவர்களின் கைகால் உடைந்தது என்று தெரியும். ஒரு விஷயம் உங்களுக்குத் தெளிவாகச் சொல்லிக்கொள்கிறேன். ஒருவேளை நாங்கள் வேண்டுமென்றே இவர்கள் கைகளை உடைத்தால் ரிமாண்ட் பண்ணும்போது மாஜிஸ்திரேட்டிடம் அந்த உண்மையை அவர்கள் சொல்லி விடுவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால், அப்படி யாரும் இதுவரை புகார் சொன்னதில்லை. எனவே, காவல்துறையின்மீது தவறான நோக்கத்தில் பரப்பப்படும் செய்திகள்தான் இவை" என்றார்கள்.

இது குறித்து கைதிகள் உரிமை சார்ந்து தொடர்ந்து இயங்கிவரும் வழக்கறிஞர் கேசவனிடம் பேசினேன். ``இதன் பெயர் தேர்டு கிரேட் ட்ரீட்மென்ட் எனச்சொல்லுவார்கள். ஆனால், இதை எல்லா நேரத்திலும் பயன்படுத்த முடியாது. குற்றவாளியைப் பிடிக்க நேரும்போது அவர் திமிறுகிறபோது அவரைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு மினிமம் போர்ஸ் பயன்படுத்தலாம் என சட்டத்தில் இருக்கிறது. ஆனால், அதுவும்கூட தவிர்க்க முடியாத சூழலில்தான்.

வழக்கறிஞர் கேசவன்
வழக்கறிஞர் கேசவன்
விகடன்

நம்முடைய காவல்துறை இந்த விஷயத்தில் முறையாகத்தான் இயங்குகிறதா என்பதில் சந்தேகம் இருக்கிறது. கை, கால்களை உடைத்துத்தான் குற்றங்களைக் கட்டுப்படுத்த முடியுமெனில் நீதிமன்றங்களும் சிறைச்சாலைகளும் எதற்கு என்கிற அடிப்படையான கேள்வி எழுகிறது. தவறு செய்தவனிடம் பணத்தை வாங்கிவிட்டு அவனைத் தப்பிக்கச்செய்யும் போலீஸ்காரரின் கையை அப்போது என்ன செய்வது, அதை உடைக்க வேண்டாமா? " என்றார்.

முன்னாள் காவல்துறை ஆய்வாளர் வரதராஜனிடம் இதுகுறித்துப் பேசியபோது ``தேர்டு டிகிரி ட்ரீட்மென்ட் என ஒன்று உண்டு. குறிப்பிட்ட ஒரு தொகையை வாங்கிக்கொண்டு பணத்துக்காகக் கொலை செய்கிற கூலிப்படை நபர்களுக்கு இந்த முறை அளிக்கப்படும். காரணம், இவர்கள் தாங்கள் கூலியாகப் பெற்ற தொகையில் ஒரு பகுதியை வழக்கறிஞருக்குச் செலவழித்து எளிதில் ஜாமீனில் வந்துவிடுவார்கள்

வரதராஜன்
வரதராஜன்
unknown

மீண்டும் அதே குற்றத்தைச் செய்வார்கள். ஆகவே, இவர்களை முடக்கும்பொருட்டு கை, கால்களை உடைத்து அனுப்பி விடுவார்கள். இதுதவிர கொடூரமான குற்றவாளிகளுக்கும் இந்த ட்ரீட்மென்ட் உண்டு. ஒரு கட்டத்தில் அது கை கால்களை உடைப்பதிலிருந்து என்கவுன்டர் அளவுக்குக்கூட போய்விடும்.

ஆனால், சமீபமாக மீண்டும் இப்படி கை, கால்களை உடைக்கத் துவங்கியிருக்கிறார்கள் எனில் மோசமாகப் போய்க் கொண்டிருக்கும் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகத்தான் இருக்கும். மற்றபடி சொல்வதற்கு ஒன்றுமில்லை" என்றார்.

கைதிகள் கைகளில் மாவுக்கட்டு...
காவல்துறையின் சப்பைக்கட்டு!

திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது பட்டுக்கோட்டையார் பாட்டு. திருடர்களின் கை, கால்களை உடைப்பதால் மட்டும் அவர்கள் திருந்திவிடுவார்கள் என்று நினைப்பது தவறான, அபத்தமான முயற்சி என்று வாதிடுகிறார்கள் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள். சமூகத்தில் அடிப்படையான மாற்றங்களை ஏற்படுத்தி, சட்டத்தைத் தீவிரமாக நடைமுறைப்படுத்துவதிலும்தான் இதற்கு நிரந்தரத்தீர்வு கிடைக்கும் என்பதே அவர்களின் வாதம். அதில் நியாயம் நிறையவே இருக்கிறது.