Published:Updated:

``லத்தி எடுக்கிறது நம்ம நோக்கமில்லை!” - போலீஸாருக்கு அறிவுரை அளிக்கும் துணை ஆணையரின் அசத்தல் பேச்சு

ஊரடங்கை ஒட்டி சாலையில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகள்
ஊரடங்கை ஒட்டி சாலையில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகள் ( இடம்: கும்பகோணம் )

அத்தியாவசிய பொருள்களை வாங்கச் செல்லும் பொதுமக்களைக்கூட போலீஸார் லத்தியால் தாக்குவது மக்களிடம் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் துணை ஆணையர் ஒருவர் 144 தடை காலத்தில் போலீஸார் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று பேசியிருக்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில், ஏப்ரல் 14-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இக்காலகட்டத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அப்படி வெளியே வருபவர்களை போலீஸார் லத்தியைக் கொண்டு தாக்குகின்றனர். மக்களிடையே இதனால் தேவையற்ற பதற்றநிலை உருவாகி தங்களுடைய தேவைக்கும் அதிகமாக பொருள்களை சேமிக்கும் அவசரம் ஏற்பட்டுவிடுகிறது.

போலீஸாரின் இந்த லத்தி தாக்குதலுக்கு, சமூக வலைதளங்களில் கண்டனங்களும் கிண்டல்களும் குவிகின்றன. பலரும் தங்கள் வேதனையை மீம்ஸ், வீடியோக்கள் வாயிலாகத் தெரியப்படுத்துகிறார்கள். 144 தடை உத்தரவு என்பது அப்பாவி பொதுமக்களை அடிக்கப் பயன்படுத்துவது அல்ல என்று போலீஸாருக்குத் தெரியுமா என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.

144 தடை உத்தரவின்படி, ஐந்து பேருக்கு மேல் பொதுவெளியில் ஒன்றுகூடக் கூடாது. ஆனால், பிரதமர் மோடியின் அறிவிப்புக்குப் பிறகு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரலாம். இவர்களை வழிமறித்து போலீஸ் விசாரித்தாலும்கூட, அவர்களின் தேவையறிந்து அனுமதிக்க வேண்டும். பொதுமக்களை அடிப்பதற்கு எந்த சட்டமும் அனுமதிக்கவில்லை. போலீஸார் நிதானமின்றி செயல்படுவது பொதுமக்களிடம் பதற்றத்தைத்தான் அதிகரிக்கும்.

போலீஸாரிடம் நிதானத்தை ஏற்படுத்தும் விதமாக, சென்னை பூக்கடை சரகத்திற்கு உட்பட்ட காவலர்களுடன் பூக்கடை துணை ஆணையர் ராஜேந்திரன் உரையாடும் ஆடியோ சமூக வலைதளங்களில் உலா வருகிறது. இந்த ஆடியோவில், பொதுமக்களுக்கு எதிராகப் போலீஸார் லத்தியை உயர்த்தக் கூடாது என்று ராஜேந்திரன் அறிவுரை வழங்கியுள்ளார்.

ஆடியோவில் பேசும் துணை ஆணையர் ராஜேந்திரன், ``பூக்கடை சரகத்திற்கு உட்பட்ட போலீஸார் யாரும், வாகன சோதனையில் ஈடுபடும்போது கையில் லத்தி வைத்திருக்கக் கூடாது. நம்முடைய நோக்கம் 144 சி.ஆர்.பி.சி கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதுதானே தவிர, பொதுமக்களை இம்சிப்பதும் அடிப்பதும் நமது நோக்கமல்ல. இது சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எந்தக் காலத்திலும் நமது சமநிலையை நாம் இழந்துவிடக் கூடாது. 144 தடை உத்தரவு எதற்காக விதிக்கப்பட்டுள்ளது என்று பொதுமக்களிடம் பேசிப் புரிய வையுங்கள். பொதுமக்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை உருவாக்க வேண்டாம்.

போலீஸ் லத்தி தாக்குதல்
போலீஸ் லத்தி தாக்குதல்

அத்தியாவசிய பொருள்கள் எது, அத்தியாவசியம் இல்லாத பொருள்கள் எது என்பதில் தெளிவாக இருங்கள். மளிகைப் பொருள்கள், காய்கறிகள், பால், மீன், இறைச்சி ஆகிய உணவுப் பொருள்கள்தான் அத்தியாவசிய பொருள்கள் என்று நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது. கால்நடைக்கு தீவனம் எடுத்துச் சென்றாலும் அது அத்தியாவசிய பொருள்தான். மருத்துவம் மட்டுமல்ல, ஏ.டி.எம், வங்கி, இன்ஷூரன்ஸ் அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் எல்லாருமே அத்தியாவசியம்தான். சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்து செயல்படுங்கள்.

உணவுப் பொருள்கள் விற்கும் கடைகள் திறந்திருக்கலாம். ஒவ்வொரு கடை வாசலில் நாம் போலீஸைப் போட முடியாது. அதற்கேற்ப, கடைக்காரர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். பொருள் வாங்க வருபவர்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று வரிசையாகப் பொருளை வாங்குமாறு அறிவுறுத்துங்கள். நாம் சொல்லிக் கேட்காத கடைக்காரர்கள் மீது தேவைப்படும் நடவடிக்கையை எடுக்கலாம். அதேநேரத்தில் பொருள்களை வாங்க வருபவர்களை நாம் தவறான வார்த்தைகளால் பேச வேண்டாம். அவர்களுக்கு என்ன அத்தியாவசியம் என்பது நமக்குத் தெரியாது.

கொரோனாவால் தி.நகர் பகுதியில் பூட்டப்பட்ட கடைகள்
கொரோனாவால் தி.நகர் பகுதியில் பூட்டப்பட்ட கடைகள்

துணிக்கடை, நகைக்கடை போன்ற அத்தியாவசியம் இல்லாத கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டாம். சரக்கு வாகனங்கள் பயணிக்க எந்தத் தடையும் இல்லை. இதில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், வாகனத்தைப் பிடித்து வைத்துக்கொண்டு வாக்குவாதம் செய்துகொண்டிருக்காமல், அந்த வாகனம் எங்கே செல்கிறது, என்ன கொண்டு செல்கிறது என்று விசாரியுங்கள். உங்கள் அளவில் முடிவெடுக்க முடியவில்லை என்றால் உங்கள் மேலதிகாரியிடம் கேளுங்கள். இதையே ஒரு பிரச்னையாக உருவாக்க வேண்டாம். இதை யாராவது வீடியோ எடுத்து வாட்ஸ் அப் மூலமாகப் பரப்பும்போது தேவையற்ற பதற்றம் ஏற்படுகிறது. நம் மீதும் தவறான அபிப்ராயம் எழக் காரணமாகிறது. பொது சிந்தனையோடு செயல்பட்டால் இதைத் தவிர்க்கலாம்.

மக்கள் சந்திக்கும் இடங்கள், சிக்னல்களில் பொது அறிவிப்பு ஒலிப்பெருக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். பொறுப்பை உணர்ந்து செயல்படுங்கள்” என்கிறார்.

சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த ஆடியோ, பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. துணை ஆணையரின் அறிவுறுத்தலை தமிழகத்தில் உள்ள மற்ற காவலர்களும் நடைமுறைப்படுத்தினால், தேவையற்ற பதற்றத்தையும் சங்டங்களையும் தவிர்க்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு