Published:Updated:

டிஜிட்டல் தலையங்கம்: எல்லை தாண்டும் போலீஸ் விளையாட்டு!

டிஜிட்டல் தலையங்கம்: போலீஸ் விளையாட்டு!

தங்கள் அரசியல் எஜமானர்களுக்காக இலைமறை காய்மறையாக பல விஷயங்களைச் செய்துவந்த போலீஸார், இப்போது வெளிப்படையாகவே அப்படி மாறியிருக்கிறார்கள். இது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்திவிடும்.

டிஜிட்டல் தலையங்கம்: எல்லை தாண்டும் போலீஸ் விளையாட்டு!

தங்கள் அரசியல் எஜமானர்களுக்காக இலைமறை காய்மறையாக பல விஷயங்களைச் செய்துவந்த போலீஸார், இப்போது வெளிப்படையாகவே அப்படி மாறியிருக்கிறார்கள். இது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்திவிடும்.

Published:Updated:
டிஜிட்டல் தலையங்கம்: போலீஸ் விளையாட்டு!
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை வெவ்வேறு கட்சிகள் ஆட்சி செய்யலாம். அந்தந்த மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் காவல் துறை இருக்கலாம். ஆனால், அங்குள்ள போலீஸார் எல்லோருமே இந்தியாவுக்கே பொதுவான குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டங்களின்படியே கடமையாற்ற வேண்டும். இந்த நடைமுறையை மறந்து ஒவ்வொரு மாநில போலீஸாரும் அந்தந்த மாநில ஆளுங்கட்சியின் விருப்பத்துக்கு ஏற்றபடி எல்லை மீறுகின்றனவோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளன சமீப கால நிகழ்வுகள்.

கேரளாவின் வயநாட்டில் இருக்கும் ராகுல் காந்தியின் அலுவலகம் சமீபத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் அணியைச் சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டது. அதன்பின் இப்போது கேரளா சென்ற ராகுல் காந்தியிடம் அந்தச் சம்பவம் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டனர். 'அவர்கள் பாவம், குழந்தைகள். அவர்கள் மீது எனக்குக் கோபம் இல்லை' என்று ராகுல் பதில் சொன்னார்.

வயநாட்டில் ராகுல் காந்தி
வயநாட்டில் ராகுல் காந்தி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், உதய்பூரில் டெய்லர் கன்னையா லாலைக் கொடூரமாகக் கொன்ற கொலையாளிகள் குறித்து ராகுல் இப்படிக் கருத்து சொன்னதாக ஒரு தனியார் தொலைக்காட்சி இதைத் திரித்து வெளியிட்டது. அதை பா.ஜ.க பிரமுகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்கள். முன்னாள் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரதோர் உட்பட முக்கியப் பிரமுகர்கள் பலரும் இதைச் செய்தார்கள். தவறான வீடியோ என்று தெரிந்தபிறகும் அவர்கள் அதை நீக்கவில்லை; வருத்தம் தெரிவிக்கவும் இல்லை. காங்கிரஸ் கட்சி இதைக் கண்டித்து பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கடிதம் எழுதியது. அவரிடமிருந்து பதில் இல்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
தனியார் தொலைக்காட்சியில் இப்படி ராகுல் வீடியோவைத் திரித்து நிகழ்ச்சி நடத்திய செய்தியாளர் ரோகித் ரஞ்சன், "இது human error. எங்கள் குழு இதற்காக மன்னிப்பு கேட்கிறது" என்று அறிவிப்பு வெளியிட்டார்.

சம்பந்தப்பட்ட ரோகித் ரஞ்சன், உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத் நகரில் வசிக்கிறார். சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களை காங்கிரஸ் கட்சி ஆள்கிறது. அந்த இரு மாநில போலீஸாரும் இந்த விவகாரத்தில் ரோகித் ரஞ்சன் மீது வழக்கு போட்டனர். இதைத் தொடர்ந்து சத்தீஸ்கரின் ராய்ப்பூர் நகர போலீஸார் உத்தரப் பிரதேசத்துக்கு வந்து ரஞ்சனைக் கைது செய்ய முயன்றார்கள். ரஞ்சன் உடனே, "உள்ளூர்ப் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்காமல் வந்து என்னைக் கைது செய்யப் பார்க்கிறார்கள்" என்று முறையிட்டார்.

ரோகித் ரஞ்சன்
ரோகித் ரஞ்சன்

இதைத் தொடர்ந்து காஸியாபாத் போலீஸார் அவசரமாக ரஞ்சன் வீட்டுக்கு வந்தார்கள். "நாங்கள் ஏற்கெனவே ரஞ்சன் மீது வழக்கு போட்டிருக்கிறோம். அவரிடம் நாங்கள் முதலில் விசாரிக்க வேண்டும்" என்று சொல்லி, சத்தீஸ்கர் போலீஸார் கண்ணெதிரிலேயே ரஞ்சனை அழைத்துச் சென்றுவிட்டனர். அதன்பின் சத்தீஸ்கர் போலீஸ், காஸியாபாத் போலீஸ் நிலையத்துக்கும் சென்று காத்திருந்தது. கடைசிவரை அவர்களிடம் உ.பி போலீஸ் ரஞ்சனை ஒப்படைக்கவில்லை. அவர்கள் வெறுங்கையுடன் சத்தீஸ்கர் திரும்பினர்.

இதேபோல முன்பும் ஒரு சம்பவம் நடந்தது. பா.ஜ.க செய்தித் தொடர்பாளராக இருக்கிறார் தாஜிந்தர் பால் சிங் பாக்கா. டெல்லியில் இருக்கும் இவர், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கிண்டல் செய்து சில பதிவுகள் வெளியிட்டார். உடனே, ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் பாக்கா மீது வழக்கு போடப்பட்டது. மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு கலவரத்தை ஏற்படுத்த முயன்றதாக பஞ்சாப் மாநிலத்தின் மொகாலி போலீஸ் டெல்லிக்கு வந்து பாக்காவைக் கைது செய்தது.

தாஜிந்தர் பால் சிங் பாக்கா
தாஜிந்தர் பால் சிங் பாக்கா
ட்விட்டர்

உடனே, பஞ்சாப் போலீஸ் தன் மகனைக் கடத்திச் செல்வதாக பாக்காவின் அப்பா டெல்லி போலீஸில் புகார் கொடுத்தார். டெல்லி போலீஸ் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பக்கத்தில் உள்ள ஹரியானா மாநிலத்தை பா.ஜ.க ஆள்கிறது. அந்த வழியாகத்தான் பஞ்சாப் போலீஸார் திரும்பிச் செல்ல வேண்டும். டெல்லி போலீஸ் கேட்டுக்கொண்டதால், ஹரியானா போலீஸ் குறுக்கே புகுந்து பஞ்சாப் போலீஸாரை மடக்கி வைத்தது. அதன்பின் டெல்லி போலீஸார் சென்று அவர்களிடமிருந்து பாக்காவை வலுக்கட்டாயமாக மீட்டு வந்தார்கள். அதைத் தாண்டி, பஞ்சாப் போலீஸார் மீது கடத்தல் வழக்கும் டெல்லியில் போடப்பட்டது. இன்னும் அந்த வழக்கு நடந்துவருகிறது.

தங்கள் அரசியல் எஜமானர்களுக்காக இலைமறை காய்மறையாக பல விஷயங்களைச் செய்துவந்த போலீஸார், இப்போது வெளிப்படையாகவே அப்படி மாறியிருக்கிறார்கள். இது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்திவிடும். சட்ட நடைமுறைகளின் எல்லை தாண்டி போலீஸ் இப்படி நடத்தும் விளையாட்டுக்கு நீதிமன்றங்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.