Published:Updated:

வங்கி திவால் சட்டம்... எல்லாம் சரியாகத்தான் நடக்கிறதா?

சிக்கல்...

பிரீமியம் ஸ்டோரி

வாராக் கடனில் சிக்கித் தவிக்கும் தொழில் நிறுவனங்கள் கடன் பிரச்னையிலிருந்து மீண்டுவருவதற்காக உருவாக்கப்பட்டதுதான் வங்கி திவால் சட்டம் (Insolvency and bankruptcy code). இந்தச் சட்டம் செயல்படத் தொடங்கிவிட்டாலும் பலவிதமான பிரச்னைகளைச் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறது. அந்தப் பிரச்னைகளைப் பற்றி விளக்கமாகப் பேசினார் மணிலைஃப் பவுண்டேஷனின் நிறுவனர் சுசேதா தலால்.

நானி பல்கிவாலா ஆர்பிட்ரேஷன் சென்டர் மற்றும் தி சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் ஸ்டடி சர்க்கிள் என்கிற இரு அமைப்புகளும் இணைந்து நடத்திய கூட்டத்தில் பேசிய சுசேதா தலால், பத்மஸ்ரீ விருதுபெற்ற பொருளாதாரப் பத்திரிகையாளர். தொழில் நிறுவனங்களில் நேர்மையான நிர்வாகம் தொடர்பாக தொடர்ந்து பேசியும் எழுதியும் வருபவர். வங்கி திவால் சட்டம் குறித்து அவர் இந்தக் கூட்டத்தில் சொன்னதாவது...

வங்கி திவால் சட்டம்... எல்லாம் சரியாகத்தான் நடக்கிறதா?

‘‘வங்கி திவால் சட்டம் என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமான ஒன்று. ஆனால், இந்தச் சட்டத்தைச் சரியாக நடைமுறைப்படுத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. வழக்குக்குமேல் வழக்குப்போட்டு எந்த நிறுவனத்துக்கும் உரிய தீர்வும் கிடைக்கவிடாமல், பிரச்னையை இழுத்துக்கொண்டு போகிறார்கள். இதனால் இந்தச் சட்டம் பல சவால்களைச் சந்திக்கவேண்டிய நிலையில் இருக்கிறது.

சில புள்ளிவிவரங்கள்...

வாராக் கடன் பிரச்னையில் சிக்கியுள்ள 12 நிறுவனங்கள், கடந்த ஜூன் 2017-ம் ஆண்டில் வங்கி திவால் சட்டத்தின்கீழ் தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாணையத்தில் தீர்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இவற்றில் ஏழு நிறுவனங்கள் கடந்த 470 நாள்களுக்கும் மேலாக விசாரணையில் இருக்கின்றன. எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனம் 530 நாள்களுக்கும்மேலாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சட்டத்தின் விதிமுறைகளின்படி, ஒரு நிறுவனமானது 270 நாள்களுக்குள் விசாரிக்கப்பட்டு, அதன் கடன் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். ஆனால், சராசரியாக 324 நாள் ஆகியிருக்கிறது. இதுபோதாது என்று 1,860 நிறுவனங்கள் கம்பெனி சட்டத் தீர்ப்பாணையத்தால் வாராக் கடன் பிரச்னை காரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக் கிறது. இதைவிடக் கொடுமை, இன்னும் 12,000 நிறுவனங்கள் இந்தச் சட்டத் தீர்ப்பாணையத்தின் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று அனுமதி கேட்டுக் காத்திருக்கின்றன.

பாசிட்டிவ் விஷயங்கள்...

வங்கி திவால் சட்டத்தினால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த சாதகமான விஷயம் என்றால், ரூ.80,000 கோடி வங்கிக்குத் திரும்பக் கிடைத்திருக்கிறது. இந்த ஆண்டுக்குள் இன்னுமொரு ரூ.70,000 கோடி திரும்பக் கிடைக்கும். இதில் எஸ்ஸார் நிறுவனத்திடமிருந்து மட்டுமே ரூ.42,000 கோடி வரவேண்டியிருக்கிறது.

வங்கி திவால் சட்டத்தை முனைப்புடன் செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசாங்கம் நினைப்பது பாசிட்டிவ்வான விஷயம். தொழில் செய்வதற்கு இணக்கமான சூழல் குறித்த குறியீட்டில் இந்தியா முன்னேற்றம் காணவேண்டு மெனில், மத்திய அரசாங்கம் இந்தச் சட்டத்தை நன்கு செயல்படுத்தித்தான் ஆகவேண்டும். அது மட்டுமல்ல, இந்தச் சட்டத்தில் உள்ள ஓட்டை களை அடைத்து, திருத்தப்பட்ட மசோதாக்களை உடனுக்குடன் நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும்.

நடப்பது என்ன?

ஆனால், இன்றைக்கு நடப்பது என்ன? எஸ்ஸார் நிறுவனத்துக்கு எந்த கேரன்டியும் இல்லாமல் ரூ.15,000 கோடி கடன் தந்திருக்கிறார்கள். இந்தப் பணம் திரும்ப வருமா என்பதையெல்லாம் வங்கிகள் கேட்கவில்லை. இந்தப் பணம் யாருடையது என்பது தெரிந்துதான் வங்கிகள் இப்படிக் கடன் தருகின்றனவா? இப்படிக் கடன் வாங்கும் நிறுவனங்கள் கடன் பணத்தைத் தொழிலை விருத்தி செய்வதற்குப் பயன்படுத்திக் கொண்டால் பாராட்டலாம். ஆனால், இவர்களோ தங்கள் குழந்தைகளின் திருமணத்தைப் பகட்டாக நடத்துகிறார்கள். அவர்கள் தரும் விருந்துகள் ஆச்சர்யப்படும் விதத்தில்தான் இருக்கின்றன.

சுசேதா தலால்
சுசேதா தலால்

வீடியோகான் நிறுவனத்தைப் பொறுத்தவரை, வங்கிகளுக்கு ஏற்படவிருக்கும் நஷ்டம் மட்டுமே ரூ.90,000 கோடி. வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ.59,451 கோடியும், வீடியோகான் டெலிகம்யூனிகேஷன் நிறுவனம் ரூ.26,673 கோடியும் வங்கிக்குத் தரவேண்டியுள்ளது. இந்தக் கடனில் பெரும்பங்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுக்குச் சேரும்.

வீடியோகான் நிறுவனத்தின் போக்கு சரியில்லை என்பதை 1996-ம் ஆண்டிலேயே நான் பத்திரிகையில் எழுதி எச்சரித்தேன். பல ஆண்டு களுக்குமுன்பே வீடியோ கான் நிறுவனத்துக்கு ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ரூ.1,526 கோடி கடனாகத் தந்தது. இதில் வெறும் ரூ.322 கோடி மட்டுமே மூலதனச் செலவு செய்யப்பட்டது. மீதமுள்ள பணமெல்லாம் வேறு எதற்கோ செலவு செய்யப் பட்டது. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் சாந்தா கோச்சரின் கணவர் தீபக் கோச்சரும் வீடியோகான் நிறுவனத்திடம் தொடர்பு கொண்டிருந்ததால், வீடியோ கான் நிறுவனத்துக்கு அந்த வங்கியானது கடனை அள்ளித் தந்தது. வீடியோகான் நிறுவனத்தில் இப்படியெல்லாம் நடப்பதை இருபது ஆண்டு களுக்குமுன்பு நான் எழுதியிருந்தாலும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்தான் அது எல்லோருக்கும் தெரியும்படி வெட்டவெளிச்சமானது.

கற்றுக்கொண்ட பாடம் என்ன?

இன்றைக்கு பிர்லா சூர்யா லிமிடெட்டின் யாஷ் பிர்லா, கடன் பணத்தை வேண்டுமென்றே திரும்பத் தராதவராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர் ரூ.67.65 கோடியை வங்கிக்குத் திரும்பத் தரவேண்டும். இவருக்கு எந்த அடிப்படையில் வங்கிகள் கடன் தந்தன? இவர் செய்துவரும் தொழிலைப் பார்த்துக் கடன் தந்திருந்தால், இவருக்கு வங்கிகள் கடனே தந்திருக்கவே முடியாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாராக் கடன் சிக்கல்களிலிருந்து வங்கிகள் ஏதாவது பாடம் கற்றுக்கொண்டனவா என்றால், அதுதான் இல்லை. கிங்ஃபிஷர் விமான நிறுவனத்துக்குத் தந்த கடன் திரும்ப வரவில்லை. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிலைமையும் தள்ளாட்டத்தில் இருக்கிறது. ஏர் இந்தியாவும் தொடர் சிக்கலில்தான் இருக்கிறது. இந்த நிறுவனங்களிலிருந்து வங்கிகள் கற்றுக்கொண்ட பாடங்கள் என்ன என்று தெரியவில்லை. ஆனால், எஸ்.பி.ஐ வங்கியின் தலைவரோ, ‘கொஞ்சம் பணம் வராமல் போனாலும் பரவாயில்லை; ஆனால், முழுப் பணத்தை வராமல் போவதை நாங்கள் விரும்பவில்லை’ என்று சொல்கிறார்.

வங்கி திவால் சட்டம்... எல்லாம் சரியாகத்தான் நடக்கிறதா?

எஸ்ஸார் நிறுவனத்தை ரூ.54,389 கோடி தந்து வாங்க ஆர்சிலர் மிட்டல் நிறுவனம் ஒப்புக் கொண்டபின்னும், சில சட்டச் சிக்கல்களால் வங்கிக்குக் கிடைக்கவேண்டிய பணம் திரும்பக் கிடைக்கவில்லை. எஸ்ஸார் நிறுவனத்தின் சில சொத்துகளை விற்று, ரூ.15,431 கோடி பெற எஸ்.பி.ஐ வங்கி முயற்சி செய்தது. அதுவும் நடக்கவில்லை.

கடன் பணம் திரும்ப வருமா?

சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நடத்தி வந்த ஸ்டெர்லிங் & ஸ்டெர்லிங் நிறுவனத்தின் நிறுவனர்கள் எல்லோருமே வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார்கள். இந்த நிறுவனம் வாங்கிய ரூ.14,000 கோடியில் ஏறக்குறைய 45% பணம் திரும்பத் தந்தால் போதும் என்கிற அளவுக்கு வங்கிகள் இறங்கின.

கடன் தந்தவர்கள்மீது கிரிமினல் வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், என்ன பிரயோஜனம், கடனாகத் தந்த பணம் திரும்ப வருமா?

இந்த நிறுவனம் மட்டுமல்ல, ஏ.பி.சி சிப்யார்டு நிறுவனம் ரூ.15,245 கோடி கடன் வாங்கியிருக்கிறது. இந்த நிறுவனத்தின் சொத்துகள் விற்கப்பட்டால், ரூ.2,000 கோடி கிடைக்கும். ஆம்டெக் ஆட்டோ, ஏ.பி.ஜி ஷிப்யார்ட், அதுநிக் மெட்டாலிக்ஸ் எனப் பல நிறுவனங்கள் கடனாக வாங்கிய பணத்திலிருந்து எவ்வளவு திரும்பக் கிடைக்கும் என்று சொல்ல முடியாத நிலையே இன்றும் இருக்கிறது. வங்கி திவால் சட்டத்தில் இருக்கும் இத்தனை பிரச்னைகளுக்கும் எப்போது என்ன தீர்வு கிடைக்குமோ?’’ என்று பேசி முடித்தார் அவர்.

தொழில் நிறுவனங்களின் தவறான நிர்வாகத்தால் வங்கிகள் எந்த அளவுக்குப் பாதிப்பைச் சந்திக்கப்போகிறது என்கிற சுசேதா தலாலின் பேச்சு நமக்குத் தெளிவாக எடுத்துச் சொல்வதாக இருந்தது!

வங்கி திவால் சட்டத்தில் புதிய மாற்றங்கள்!

சமீபத்திய நிகழ்வுகளுக்குப்பிறகு, வங்கி திவால் சட்டத்தில் ஏழு முக்கியமான மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது மத்திய அரசாங்கம். இந்த மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்திருக்கிறது. வாராக் கடன் பிரச்னையில் சிக்கியிருக்கும் ஒரு நிறுவனம் குறித்து 270 நாள்களுக்குள் விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தது. இதற்குள் வழக்குகளை விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படாததால், இனி 330 நாள்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்கத் தேவையான மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறது. ‘‘வங்கி திவால் சட்டத்தில் ஒரு நிறுவனம் தொடர்பான விசாரணை 330 நாள்களுக்குள் விசாரித்து முடிக்கப்படவில்லை எனில், அந்த நிறுவனத்துக்குக் கடன் தந்த நிறுவனங்கள் கடனுக்கு ஈடாகக் கொடுக்கப்பட்ட சொத்தினை விற்று, அந்தப் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்’’ என வர்த்தக விவகாரத் துறையின் செயலாளர் இன்ஜெடி ஸ்ரீநிவாஸ் தெரிவித்திருக்கிறார்.

வங்கி திவால் சட்டத்தில் சிக்கியுள்ள நிறுவனத்தின் சொத்தினை விற்கும்போது, அந்த நிறுவனத்துக்குக் கடன் தந்த வங்கிகளுக்கு முதலில் பணம் தரவேண்டும் என்றும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. வங்கி திவால் சட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து சில அரசு நிறுவனங்கள் கேள்விக்குள்ளாக்கி வருகின்றன. இனி எந்த அரசு அமைப்பும் வங்கி திவால் சட்டத்தில் எடுக்கப்படும் முடிவினைக் கேள்விக்குள்ளாக்க முடியாது என்கிற மாற்றத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்திருக்கிறது. இந்த மசோதாக்கள் சட்டமான பிறகாவது, வங்கி திவால் சட்டத்தில் பிரச்னைகள் குறையும் என்று எதிர்பார்ப்போம்.

- ஆகாஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு