Published:Updated:

அனுமதியின்றி டெபாசிட்... மோசடி நிதி நிறுவனங்களுக்குக் கிடுக்கிப்பிடி வந்தாச்சு!

சட்டமசோதா

பிரீமியம் ஸ்டோரி

நேற்று வரை பி.ஏ.சி.எல், சாரதா சிட் ஃபண்ட், மதுரை எம்.ஆர்.டி.டி... இன்று, கோவை யு.டி.எஸ், திருச்சி செந்தூர் ஃபின்கார்ப், நெல்லை சி.டி.எஸ் என அப்பாவி மக்களை ஏமாற்றும் அனைத்து மோசடி நிறுவனங்களுக்கும் கிடுக்கிப்பிடி போடும் சட்டம் கூடிய விரைவில் நடைமுறைக்கு வரப்போகிறது.

அரசு அமைப்புகளிடமிருந்து எந்தவிதத்திலும் முறையான அனுமதி பெறாமல், மக்களிடமிருந்து டெபாசிட் வாங்கும் நிதி நிறுவனங்களைத் தடைசெய்யும் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இதைச் சட்டமாக மாற்றும் பொருட்டு, தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதா சட்டமாகிவிட்டால், இனி அரசின் அனுமதி பெறாமல் எந்த நிறுவனமும் மக்களிடமிருந்து கைநீட்டி பணம் வாங்க முடியாது.

அனுமதியின்றி டெபாசிட்... மோசடி நிதி நிறுவனங்களுக்குக் கிடுக்கிப்பிடி வந்தாச்சு!

மோசடி நிதி நிறுவனங்களை முடக்கும் அவசர ஆணை கடந்த ஆட்சியிலேயே பிறப்பிக்கப்பட்டாலும், ஆட்சி முடியும் தறுவாயில் அது வந்ததால் மசோதாவாக மாறி, சட்டவடிவம் பெறாமலேயே இருந்தது. இப்போது அந்த அரசாணை சட்ட வடிவம் பெறப் போகிறது என்பது மோசடி நிறுவனங்களுக்கு அடிக்கப்படும் முதல் சாவு மணி!

மோசடி நிறுவனங்களுக்கு செக்...

நம் நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக ஆங்காங்கே பல நூறு நிதி நிறுவனங்கள் வைப்பு நிதியங்கள்மூலம் முதலீட்டாளர்களிடம் முறைகேடாகப் பணம் பெற்றுவந்தன. அதுபோன்ற நிறுவனங்கள், மக்களிடம் அதிக வட்டி என்ற ஆசை வார்த்தைகளைச் சொல்லி, பணம் பெற்றுவந்தன. இந்த மோசடி நிறுவனங்கள் முதலீட்டாளர் களிடமிருந்து பெற்ற பணத்தைக் குறித்த காலத்தில் திருப்பிக் கொடுக்காமல் இருந்ததுடன், அதற்கான வட்டியைக் கொடுக்காமல் ஏமாற்றி வந்தன. மக்களிடமிருந்து பெறப்பட்ட பணத்தைக் கொண்டு நிதி நிறுவன முதலாளிகள் தங்களின் வளத்தை பெருக்கிக் கொண்டதுடன், தங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினர் பெயர்களில் சொத்துகளை வாங்கிக் குவிக்கவும் அந்தப் பணத்தைப் பயன்படுத்தி யுள்ளனர் என்பது ரோஸ்வேலி உள்பட பல நிறுவனங்களின் முறைகேடுகளில் வெட்டவெளிச்சமாகி இருக்கிறது.

சமீபத்தில் பெங்களூருவைத் தலைமையிடமாகக்கொண்ட ஒரு நிதி நிறுவனம், பல்லாயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு, சரிவர அவர்களுக்கு வருமானத்தை வழங்காமல் ஏமாற்றிவந்தது. ஒருகட்டத்தில் நெருக்கடி முற்றவே, வாங்கிய பணத்தைத் திரும்பக் கொடுக்க முடியாமல் அந்த நிதி நிறுவன அதிபர் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுவிட்டார். அதன் காரணமாக, முதலீடு செய்தவர்கள் செய்வதறியாது முழித்துக் கொண்டிருக்கின்றனர். இதுசார்ந்த சட்டங்கள் வலுவாக இல்லாத காரணத்தால் மக்கள் தங்கள் பணத்தை எப்படிப் பெறுவது என்று தெரியாமல் தவிக்கின்றனர்.

வி.கோபாலகிருஷ்ணன், www.askgopal.com
வி.கோபாலகிருஷ்ணன், www.askgopal.com

உள்ளூர் அரசியல்வாதிகள் துணையுடன்...

மோசடி நிதி நிறுவனங்கள் பெரும்பாலும் அந்தந்த ஊர்களில் உள்ள முக்கிய அரசியல்வாதிகளின் துணைகொண்டுதான் மோசடிகளைச் செய்துவருகின்றன. இந்த மோசடி நிதி நிறுவனங்களின் வைப்பு நிதியங்களுக்கு எந்தவிதமான பாதுகாப்போ, நெறிமுறைகளோ, கட்டுப்பாடுகளோ இல்லாதது முதலீட்டாளர் களுக்கு மிகப் பெரிய பின்னடைவாகும். அந்த ஓட்டைகளை வைத்துத்தான் நிதி நிறுவன மோசடிப் பேர்வழிகள் சட்டத்தின் பிடியில் சிக்காமலேயே தப்பிக்கின்றனர். மேலும், இதுபோன்ற மோசடி நிறுவனங்கள்மீது போடப்படும் வழக்குகள் வருடக் கணக்கில் நடக்கும் சூழல் இருப்பதால், பணம் முதலீடு செய்த மக்களுக்கு எந்தவிதமான நியாயமும் கிடைக்க வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. இந்த நிறுவனங்களில் போட்ட பணத்தைத் திரும்ப வாங்குவதற்குத் தலைமுறைகளைத் தாண்டி சட்டப் போராட்டம் செய்ய வேண்டியிருக்கிறது.

பல பத்தாண்டுகளாகத் தொடரும் மோசடி...

நிதி நிறுவனங்கள் மோசடி செய்வது தமிழகத்துக்குப் புதிதல்ல. 1990-களில் பல பெனிஃபிட் நிறுவனங்கள் மோசடி செய்ததை யாரும் மறக்க முடியாது. அப்போது பல்வேறு பெனிஃபிட் ஃபண்டுகள் மற்றும் கணக்கிலடங்கா நிதி நிறுவனங்கள், நகைக் கடைகள் ஒவ்வொரு ஊரிலும் தொடங்கப்பட்டு, பல லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து கோடிக்கணக்கான பணத்தை முதலீடு களாகப் பெற்று வந்தன. இறுதியில் முதலீட்டாளர்களை ஏமாற்றிவிட்டு நிறுவனங்களை நடத்தியவர்கள் தப்பிவிட்டனர். இந்த மோசடி நிறுவனங்களில் பணம் போட்டு ஏமார்ந்தவர்கள் பெரும்பாலும் மூத்த குடிமக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர்தான்.

அதிக வட்டி ஆசை...

இந்த மோசடி நிதி நிறுவனங்களின் முக்கியமான தந்திரமே, மிக அதிக வட்டியைத் தருகிறோம் என்று மக்களை ஏமாற்றுவதுதான். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பலரும் தங்களின் பல ஆண்டு உழைப்பில் சம்பாதித்த பணத்தை இந்த மோசடி நிறுவனங்களிடம் தந்து இழந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த மோசடி நிதி நிறுவனங்கள் செயல்படுவதைத் தடுக்கவும், அப்படியே மோசடிகள் நடந்துவிட்டால் மோசடிப் பேர்வழி களைத் தண்டிக்கவும் சரியான சட்டங்கள் இல்லாத காரணத்தால் இந்த மோசடிகளைச் செய்தவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து எளிதாகத் தப்பித்து விடுகின்றனர். மோசடிப் பேர்வழிகள் இப்படி எளிதில் தப்பிப்பதைப் பார்க்கும் பலரும் இதுமாதிரியான நிறுவனங் களைத் தொடங்கி நடத்த ஆரம்பித்துவிடுகிறார்கள்.

அனுமதியின்றி டெபாசிட்... மோசடி நிதி நிறுவனங்களுக்குக் கிடுக்கிப்பிடி வந்தாச்சு!

மக்களும் இழந்த பணத்தை மீட்க பல்வேறு இடங்களில் முட்டி மோதி, நிதியும் நீதியும் கிடைக்காமல் விரக்தியடைந்து விடுகின்றனர். சிங்கத்தின் வாயில் சிக்கிய மானைத் திரும்பப் பெறமுடியாது என்கிறமாதிரி, இந்த மோசடி நிறுவனங்களில் போட்ட பணம் திரும்பக் கிடைக்காது என்பதுதான் யதார்த்தம்.

ஆர்.பி.ஐ, செபியின் எச்சரிக்கையை மீறி...

கடந்த காலங்களில் இந்தியாவிலுள்ள வங்கி மற்றும் நிதிச் சந்தைகளைக் கட்டுப்படுத்தும் இந்திய ரிசர்வ் வங்கி, செபி போன்ற அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு இதுபோன்ற மோசடி நிறுவனங்கள் மற்றும் மோசடி வைப்பு நிதியங்களைக் குறித்தும் பல்வேறு முன்னெச்சரிக்கை ஆலோசனைகளைத் தொடர்ந்து வழங்கிவந்தாலும் அவ்வப்போது இதுபோன்ற நிதி மோசடிகள் நாட்டில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

இப்போதுள்ள அதிவேக தகவல் சூழலில் இது போன்ற நிதி நிறுவனங்கள் மற்றும் வைப்பு நிதியங்களைக் குறித்தப் பல்வேறு ஆலோசனைகள் மற்றும் விழிப்பு உணர்வுகள் அதிக அளவில் இருந்தும், மக்கள் இதுபோன்ற மோசடிகளில் தொடர்ந்து மாட்டிக் கொள்வது துரதிருஷ்டவசமானதுதான். இப்படிப்பட்ட சூழலில் இதுபோன்ற மோசடிகள் நடக்காமல் தடுக்க தகுந்த, பாதுகாப்பான ஒரு சட்டத்திற்கு அவசியம் ஏற்பட்டுள்ளது.

அனுமதியின்றி டெபாசிட்... மோசடி நிதி நிறுவனங்களுக்குக் கிடுக்கிப்பிடி வந்தாச்சு!

சட்டம் என்ன சொல்கிறது?

* எந்தவொரு நிறுவனமோ அல்லது தனிநபரோ, நெறிப்படுத்தப்படாத வகையில் மக்களிடமிருந்தோ, முதலீட்டாளர்களிடமிருந்தோ வைப்பு நிதியங்கள் வாயிலாகப் பணம் திரட்டக்கூடாது.

* கட்டுப்படுத்தும் அமைப்புகளிலிருந்து அனுமதி பெறாமல், எந்தவிதமான வைப்பு நிதியங்களும் திரட்ட முடியாது.

* அப்படி அனுமதி பெற்று, பிறகு எதிர்காலத்தில் மோசடியில் ஈடுபட்டால், அவர்களைத் தண்டிக்கவும், அவர்களின் சொத்துகளை முடக்கி முதலீட்டாளர் களுக்குத் தகுந்த நியாயம் வேகமாகவும் விரைவாகவும் வழங்கப்படவும் வேண்டும்.

* இதுபோன்ற மோசடிகளைக் கையாள சிறப்பு அதிகாரிகள் மற்றும் நீதிபதிகளைக் கொண்ட பிரத்தியேக அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.

* முதலீட்டாளர் நலன் கருதும் பல விதமான அம்சங்களும் இந்தச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் மட்டுமே நிதி மற்றும் வைப்பு நிதியங்கள் சார்ந்த மோசடிகளைக் கட்டுப்படுத்த முடியும். இந்தச் சட்டத்தைக் கொண்டுவருவதுடன் நின்றுவிடாமல், அதைச் சரியாகச் செயல்படுத்துவதும் அரசின் கைகளில்தான் இருக்கிறது.

மத்திய, மாநில அரசாங்கங்கள் உரிய நடவடிக்கை எடுத்து, மக்கள் பணம் பறிபோகாமல் இருப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்தால் நல்லதுதான்!

மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

மோசடி நிதி நிறுவனங்கள் அதிக வட்டி அல்லது லாபம் தருவதாக ஆசை காட்டினாலும் அது சாத்தியமில்லாத விஷயம் என்பதைப் புரிந்துகொண்டு, மக்கள்தான் இந்த நிறுவனங்களில் பணம் போடாமல் இருக்க வேண்டும். தினமும் 5% லாபம், மாதத்துக்கு 20% லாபம், ஆறு மாதங்களில் பணம் இரட்டிப்பாகும் என்றெல்லாம் சொல்லும் நிறுவனங்களை நம்பி பணம் போட்டால், அவர்களின் பணம் பறிபோவது நிச்சயம். இதுமாதிரி நிறுவனங்களில் பணம் போடுகிற மக்களில் சிலர், தாங்கள் கட்டும் பணம் திரும்பக் கிடைக்காமல் போக வாய்ப்புண்டு என்பதைத் தெரிந்துகொண்டே போடுகின்றனர். இவர்களுடைய நோக்கம், குறைந்த காலத்தில் அதிக வருமானம் சம்பாதிப்பதுதான். இதற்காக அவர்கள் தங்களுடைய முதலீட்டைக்கூட இழக்கத் தயாராக இருக்கிறார்கள்.

இந்த மோசடி நிறுவனங்களில் முதலீடு செய்கிறவர்களில் சிலர் வேறுமாதிரி கணக்குப் போட்டு, பணத்தைப் போடுகின்றனர். அதாவது, இந்த மோசடி நிறுவனங்கள் செயல்படத் தொடங்கியவுடன் பணத்தைப் போட்டுவிடுவது. இந்த நிறுவனங்கள் பலரும் பணத்தைப் போட்டபிறகுதான் மோசடி செய்யத் தொடங்கும். அதற்குள் தங்களுடைய பணம் லாபத்துடன் திரும்ப வந்துவிடும் என்பது இவர்கள் கணக்கு. இந்தக் கணக்கு எப்போதும் சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது. கொஞ்சம் பணம் ஒருமுறை லாபமாகக் கிடைத்தாலும், அதிகமான பணத்தை அடுத்தமுறை இழக்க வேண்டியிருக்கும். எனவே, இதுமாதிரியான நிறுவனங்களிலிருந்து நீண்ட தூரம் விலகியிருப்பதே நல்லது.

மோசடி நிதி நிறுவனங்களைக் கட்டுப்படுத்த அரசாங்கம் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும் அதேவேளையில் மக்களும் விழிப்பு உணர்வுடன் இருப்பது அவசியம். இதுபோன்ற மோசடி நிறுவனங்களில் பணம் போட்டு இழப்பதைவிட, அரசினால் அங்கீகரிக்கப்பட்ட, நீண்ட காலத்தில் பணவீக்கத்தைத் தாண்டி நல்ல லாபம் தரக்கூடிய திட்டங்களில் முதலீடு செய்வதே சரி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு