Published:Updated:

பிரச்னையைத் தீர்க்குமா மாதிரி வாடகை ஒப்பந்தச் சட்டம்..? சாதகங்களும் சாதகங்களும்..!

M O D E L T E N A N C Y A C T

பிரீமியம் ஸ்டோரி

நம் நாட்டில் வீட்டு வாடகைதாரர்கள் அனுபவிக்கும் கஷ்டம் அலாதியானது. அதுவும் கோவிட் ஊரடங்கு வந்த பிறகு, மாத வாடகைதாரர்களுக்கும் வீட்டு உரிமையாளர் களுக்கும் கடும் மோதல் உருவாகியுள்ளது. இந்த நிலையில், கடந்த ஜூன் 2-ம் தேதி, இந்திய பிரதமர் மோடியின் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வாடகைச் சட்டங்களில் திருத்தம் கொண்டு வரும் வகையில் `மாதிரி வாடகை ஒப்பந்தச் சட்டத்துக்கு’ ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மாதிரி வாடகை ஒப்பந்தச் சட்டம் என்றால் என்ன, இதனால் யாருக்கு என்ன பயன், இதிலுள்ள சாதக, பாதகங்கள் என்ன என்பது குறித்து வழக்கறிஞர் சுரேஷ் பாபுவிடம் பேசினோம்.

சுரேஷ் பாபு
சுரேஷ் பாபு

அதிகரித்துவரும் வாடகைப் பிரச்னைகள்...

“இந்தியாவில் கடந்த மூன்று மாத காலத்துக்கும் மேலாக கொரோனா நோய்ப்பரவல் இரண்டாம் அலையாக உருவெடுத்து நாட்டு மக்களைக் கடுமையாகப் பாதித்து வருகிறது. இதன் காரணமாகப் பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், வீட்டு வாடகை உயர்வு, வாடகை ஒப்பந்தம் போன்ற பிரச்னைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது இதைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்தச் சட்டத்தின்படி, வாடகைதாரர்களிடம் இரண்டு மாத வாடகைக்கு மேல் பாதுகாப்பு வைப்புத்தொகை (அட்வான்ஸ்) வாங்க முடியாது என்பது உள்ளிட்ட அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

முன்பெல்லாம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் வாடகை ஒப்பந்த நகல் பதிவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத் தைப் பதிவு செய்யாவிட்டாலும் இருதரப்பும் நீதிமன்றம் செல்ல முடியும். ஆனால், புதிய சட்டத்தின்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பகுதிவாரியாக அமைக்கப்பட்டுள்ள வாடகை ஆணையத்திடம் வாடகை ஒப்பந்த நகலைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். ஆன்லைன் அல்லது நேரடியாக வாடகை ஒப்பந்தத்தைப் பதிவு செய்யலாம்.

பதிவுக் கட்டணம் இல்லை!

வாடகை தொடர்பான புகார்களை விசாரிக்க தனி வாடகை ஆணையம் அல்லது வாடகைத் தீர்ப்பாயம் அமைக்க புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், வாடகை வீடுகளை, வணிக நிலையங்களாக நடத்துவதில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை இந்தச் சட்டம் ஊக்குவிக்கும் எனச் சொல்லப் பட்டிருக்கிறது. பதிவுக் கட்டணம் என்றதும் தற்போது நடைமுறையில் இருக்கும் நிலம், கிரயம் உள்ளிட்ட பதிவுக் கட்டணங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் குழம்ப வேண்டாம். இதற்கு நீங்கள் சார்பதிவாளர் அலுவலகத்துக்குச் செல்ல வேண்டாம். இணையத்திலேயே பதிவு செய்துகொள்ளலாம். இதற்கென்று கட்டணம் எதுவும் கிடையாது” என்றார்.

மேலும், “தற்போதைய நிலையில் வாடகைதாரரும் உரிமையாளரும் தங்களது விருப்பத்தின் பேரில் தங்களுக் குள் ஓர் ஒப்பந்தம் செய்துகொள் கிறார்கள். அதில் யாரும் தலையிடுவ தில்லை. அப்படிச் செய்துகொண்ட ஒப்பந்தத்தையும் பதிவு செய்வதில்லை. இதனால், வாடகைக்கு இருக்கும் வீடுகள் மற்றும் காலியாக இருக்கும் வீடுகளின் விவரங்களை அரசாங்கத்தால் தெரிந்து கொள்ள முடிவதில்லை.

பிரச்னையைத் தீர்க்குமா
மாதிரி வாடகை ஒப்பந்தச் சட்டம்..? சாதகங்களும் சாதகங்களும்..!

ஆங்கிலேயர் காலத்திலிருந்தே...

வாடகைச் சட்டம் என்பது ஆங்கிலேயர் காலத்திலிருந்தே நடைமுறையில் இருக்கிறது. அந்தச் சட்டதிட்டங்களை மாற்றி, 1960-ம் ஆண்டு புதிதாக ஒரு வாடகைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த வாடகைச் சட்டம்தான் பல வருடங்களாக, நடைமுறையில் இருந்துவந்தது.

பா.ஜ.க ஆட்சியில் 2016-2017-ம் ஆண்டுகளில் 1960-களில் உருவாக்கப்பட்ட வாடகைச் சட்டத்தில், பல திருத்தங்களைக் கொண்டுவந்து புதிய வாடகைச் சட்டம் உருவாக்கப்பட்டது. 1960-ம் ஆண்டின் சட்டத்தில் இருந்த பயனுள்ள விதிமுறைகள் கூட, திருத்தப்பட்ட வாடகைச் சட்டத்தில் இல்லை. அதனால் தான், இன்றும் பத்து மாத அட்வான்ஸ், வீட்டு வாடகையை இருதரப்பு உடன் படிக்கையில் மட்டுமே வைத்துக் கொள்வது போன்ற விஷயங்கள் நடைமுறையில் இருக்கின்றன.

ஆனால், பா.ஜ.க அரசால் ஏற்கெனவே திருத்தம் செய்யப் பட்டு நடைமுறையில் இருக்கும் வாடகைச் சட்டத்துக்கும், தற்போது அமலாகவிருக்கும் புதிய வாடகைச் சட்டத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

மூன்று மாத அட்வான்ஸ்...

1960 சட்டத்தில், ஒரு மாத வாடகையை அட்வான்ஸாக வாங்கினால் போதும் எனச் சொல்லப்பட்டிருந்தது. அது அந்தக் காலம். ஆனால், தற்போது குறைந்தபட்சம் மூன்று மாதங் களுக்கான வாடகையை அட்வான்ஸாகப் பெறலாம். ஏனெனில் மூன்று மாதங்களாக, வாடகைதாரர் வீட்டு உரிமை யாளருக்கு வாடகையை கொடுக்காமல் போனால்தான் புகார் எடுத்துக் கொள்ளப்படும். அதன் அடிப்படையில் மூன்று மாத வாடகையை அட்வான்ஸாக பெற்றுக்கொள்ளலாம் என சட்டத்தில் கொண்டு வந்திருக்கலாம். ஆனால், இரண்டு மாதங் கள் எனப் புதிய சட்டத்தில் இருக்கிறது.

வீடு காலியாக இருப்பதையும் வீட்டு உரிமையாளரும், வாடகைக்கு விடப்பட்டிருந்தால் அந்த வாடகை ஒப்பந்தத்தை வாடகைதாரரும் அந்தந்த ஏரியாவில் உள்ள வாடகை ஆணையத்திடம் முறையாக பதிவு செய்யும்போது, அது வாடகைக்கு வீடு தேடுபவர் களுக்கு வசதியாக இருக்கும். இந்த விவரங்களை அரசின் வலைதளங்களில், அனைவரும் பார்க்கிற மாதிரி வெளிப் படையாக வைத்திருந்தால், அதைத் தெரிந்துகொள்வதில் மக்களுக்கு சிரமம் இருக்காது. புரோக்கர்களின் தேவை இவ்விடத்தில் இல்லாமல் போகும். ‘கமிஷன்’ என்கிற பெயரில் மக்களின் பணமும் விரையம் ஆகாது.

அரசே நிர்வகிக்க வேண்டும்!

வெளிநாடுகளில், வீடு காலியாக இருந்தால், வாடகைக்கு விட்டிருந்தாலோ அந்த விவரங்களை அரசாங்கத்திடம் உடனே தெரியப்படுத்துவதால், வாடகைக்கு வீடு தேடுபவர்கள், வீடு கேட்டு நேரடியாக அரசை அணுக முடியும். மாத வாடகை, அட்வான்ஸ் மற்றும் இதர விதிமுறைகள் அரசே முறையாகப் பேசி, ஆவணப்படுத்து கின்றன. வாடகைதாரர் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு இடையே பிரச்னைகள் வருவதில்லை. இது போன்ற நிலைமை இந்தியாவுக்குள் உருவாக வேண்டும். அப்போதுதான் அதிக வாடகை, அதிக அட்வான்ஸ் என்கிற பிரச்னைகள் இல்லாமல் இருக்கும்” என்றார் தெளிவாக. வீட்டு வாடகை தாரர்களின் பிரச்னை என்று தீருமோ..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு