Published:Updated:

பெரும் மாற்றம் காணவிருக்கும் மோட்டார் வாகனச் சட்டம் - வாகன ஓட்டிகள் கவனத்துக்கு!

வாகனங்கள் ( Vikatan )

மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா 2019

பெரும் மாற்றம் காணவிருக்கும் மோட்டார் வாகனச் சட்டம் - வாகன ஓட்டிகள் கவனத்துக்கு!

மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா 2019

Published:Updated:
வாகனங்கள் ( Vikatan )

2019-ம் ஆண்டுக்கான மோட்டார் வாகனச் சட்டத்திருத்தம் லோக்சபாவில் நீண்டநேர விவாதங்களுக்குப் பிறகு, ஓட்டெடுப்பின் மூலம் நிறைவேறியிருக்கிறது. கடந்த 2017-ம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சட்டம், லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டாலும், ராஜ்யசபாவில் நிராகரிக்கப்பட்டு, 16-வது லோக்சபா நிறைவுபெற்றபோது தகுதி இழந்தது. இந்நிலையில், இந்த மசோதா மீண்டும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு, வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த மசோதா ராஜ்யசபாவில் இந்த முறை நிறைவேறும்பட்சத்தில், மோட்டார் வாகனச் சட்டத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்படவிருக்கிறது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்
Vikatan

மோட்டார் வாகனச் சட்டத்திருத்த மசோதா 2019 அமல்படுத்தப்பட்டால், கீழ்க்கண்ட மாற்றங்கள் ஏற்படும். லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்திருத்த மசோதா 2019-ன் அம்சங்கள் பின்வருமாறு:

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

* போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டால் வசூலிக்கப்படும் அபராத தொகை, ஏறக்குறைய பத்து மடங்கு அதிகரிக்கப்படும். உதாரணத்துக்கு, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டினால் வசூலிக்கப்படும் அபராத தொகை 5௦௦ ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாக உயர்த்தப்படும்.

* ஓட்டுநர் உரிமம் ரத்தான பிறகு அதைப் புதுப்பிக்க, ஓட்டுநர் புத்தாக்க பயிற்சி எடுப்பது கட்டாயமாக்கப்படும்.

* போக்குவரத்து விதிமீறல்கள் அனைத்தும் சட்டப்பிரிவு 200-ன் கீழ் கொண்டுவரப்படும்.

* சட்டப்பிரிவு 200-ன் கீழ் வரும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்குத் தண்டனையாக, சமூகச் சேவைப் பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

* ஓட்டுநர் உரிமம் காலாவதியாவதற்கான கால அளவும், ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பதில் உள்ள கால அளவும் மாற்றி அமைக்கப்படும்.

* ஓலா, உபேர் போன்ற டாக்ஸி சேவை செய்யும் நிறுவனங்களுக்கான உரிமம் வழங்கும் சட்டம் முறைப்படுத்தப்படும்.

* விபத்துக் காலத்தில், அடிபட்டவர்களுக்கு உதவி மருத்துவமனையில் அனுமதிக்கும் 'நல்ல சமாரிடங்கள்' (GOOD SAMARITANS), சட்ட நடவடிக்கைகளிலிருந்து முற்றிலும் பாதுகாக்கப்படுவர்.

* ஒரு வாகனத்திலோ, வாகன உதிரி பாகத்திலோ குறை இருப்பதாகக் குறிப்பட்ட எண்ணிக்கைக்கு மேலான மக்களோ, சோதனை நிறுவனங்களோ புகார் தெரிவிக்கும்பட்சத்தில், விற்பனையான அந்த வாகனத்தை அல்லது உதிரிபாகத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு குறிப்பிட்ட நிறுவனத்ததுக்கு அரசு ஆணையிட முடியும்.

போக்குவரத்து காவலர்கள்
போக்குவரத்து காவலர்கள்
Vikatan

* ஒரு விபத்தால் அடிபடுவது, மரணம் ஏற்படுவது ஆகியவை, விதியை மீறிப் போடப்பட்ட சாலைகளால் ஏற்பட்டால், அந்தச் சாலையை அமைத்த ஒப்பந்ததாரர் அல்லது அதற்குப் பொறுப்பான அதிகாரி அந்த விபத்துக்குப் பொறுப்புடையவராக நடத்தப்படுவார்.

* 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களால் விபத்து ஏற்பட்டால், அந்த வாகனத்துக்கு உரிமையாளர் அல்லது அந்தச் சிறுவன்/ சிறுமியின் சட்டபூர்வ பாதுகாவலர்மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

* காப்பீட்டுப் பிரீமியம் கட்டப்படாத நிலையில், காப்பீட்டு நிறுவனம் அதற்குப் பொறுப்பேற்கத் தேவையில்லை.

* விபத்தில் ஒருவர், தன்மீது எந்தப் பிழையும் இல்லை என்று நிரூபணம் செய்யும்பட்சத்தில், அந்த விபத்தால் மரணம் ஏற்பட்டிருந்தால் ஐந்து லட்சம் ரூபாயும், அந்த விபத்தால் கை, கால் இழப்பது உள்ளிட்ட தீவிர காயங்களுக்கு இரண்டரை லட்சம் ரூபாயும் மட்டுமே அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை பெற முடியும்.

* ஒரு விபத்து நடந்த ஆறு மாதத்துக்குள், இழப்பீடு கேட்டு வழக்கு பதிய வேண்டும். ஆறு மாதம் கடந்தால் இழப்பீடு கோர முடியாது.

* விபத்துக் காப்பீட்டுத் தொகை பெற்ற ஒரு நபர், வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது இறந்துவிட்டால், அவரது வாரிசுகள் அந்த வழக்கைத் தொடர்ந்து நடத்தி காப்பீடு பெறலாம். (தற்போதைய சட்டப்படி, விபத்தால் ஏற்பட்ட காயங்களால் ஒருவர் இறந்தால் மட்டுமே, வாரிசுகளுக்கு இந்த உரிமை வழங்கப்பட்டு வருகிறது)

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

* விபத்து ஏற்படுத்திவிட்டு, ஒருவர் நிற்காமல் சென்றுவிட்டால், பாதிக்கப்பட்டவருக்கு அரசு விபத்து திட்ட நிதியிலிருந்து கொடுக்கும் இழப்பீட்டுத் தொகை அதிகமாக்கப்பட்டிருக்கிறது. இதன்படி, விபத்தில் ஒருவர் மரணித்தால் இரண்டு லட்ச ரூபாயும், விபத்தில் காயம் ஏற்பட்டால், அதன் அளவைப் பொறுத்து, 12,500 முதல் 50,000 ரூபாய் வரையிலும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

* மோட்டார் வாகன விபத்து நிதி, உருவாக்கப்படும். இதன்மூலம், ஒருவருக்கு விபத்து நேரும்போது உடனடித் தேவைகளுக்காக இந்த நிதியிலிருந்து பணம் வழங்கப்படும். வழக்கு முடிவில், ஒருவருக்கு வழங்கப்படும் தொகையிலிருந்து இந்தத் தொகை கழிக்கப்படும்.

* வாகன உரிமங்கள் வழங்குவதற்கான தேசியப் போக்குவரத்துக் கொள்கை உருவாக்கப்பட்டு, இதன்மூலம் உரிமம் வழங்கும் அதிகாரத்தை மத்திய அரசு பெறும். கொள்கை வரையறுப்பதற்கு முன்னர், மத்திய அரசு மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்கும்.

* இரு மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து வசதிக்கான திட்டங்கள் வகுக்கும் அதிகாரம் மாநிலங்கள் வசமிடமிருந்து மத்திய அரசின் வசமாக மாற்றப்படும்.

* போக்குவரத்து திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்க சிறப்புக் குழு அமைக்கப்படும்.

போக்குவரத்து காவலர்கள்
போக்குவரத்து காவலர்கள்
Vikatan

இத்தனை அம்சங்களைக் கொண்ட ஒரு சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டாலும், மாநிலங்களவையில் எதிர்க்கட்சி அமைச்சர்களால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படும். 2017-ம் ஆண்டு நடந்ததும் அதுவே. போக்குவரத்து விதிகள், திட்டங்கள் குறித்து மாநிலங்களின் உரிமையை முற்றிலும் பறிக்கும் விதமாக இந்த மசோதா உள்ளது என்பதே எதிர்க்கட்சிகள் வைக்கும் முக்கியமான குற்றச்சாட்டு. இதுதவிர, அதிக அபராத தொகை வசூலிப்பதும் சாமானிய மனிதனின்மீது பெரும் சுமையாக விழும் என்பதும் எதிர்க்கட்சியினரின் கருத்து.

சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால், தவறுகள் குறையும் என்பது நிஜம்தான். ஆனால், தனி மனிதனின் ஒழுக்கத்துக்குச் சட்டங்களிடும் அரசு, அதே சாலை பராமரிப்புக்கும் முறையான விதிகளுக்கும் வழிவகுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதே பொதுமக்கள் குரல்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism