Published:Updated:

திமுக-வின் ஓராண்டுகால ஆட்சி: கேள்விக்குள்ளான சட்ட ஒழுங்கு சம்பவங்களும் அரசின் நடவடிக்கைகளும்!

டி.ஜி.பி சைலேந்திர பாபு - முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் மீண்டும் தி.மு.க ஆட்சி ஏற்பட்டு, முழுமையாக ஓராண்டு முடிவடைந்திருக்கிறது. முதல்வராக ஸ்டாலின் தனது ஓராண்டுகால ஆட்சியை நிறைவு செய்திருக்கிறார்.

திமுக-வின் ஓராண்டுகால ஆட்சி: கேள்விக்குள்ளான சட்ட ஒழுங்கு சம்பவங்களும் அரசின் நடவடிக்கைகளும்!

தமிழகத்தில் மீண்டும் தி.மு.க ஆட்சி ஏற்பட்டு, முழுமையாக ஓராண்டு முடிவடைந்திருக்கிறது. முதல்வராக ஸ்டாலின் தனது ஓராண்டுகால ஆட்சியை நிறைவு செய்திருக்கிறார்.

Published:Updated:
டி.ஜி.பி சைலேந்திர பாபு - முதல்வர் ஸ்டாலின்
திமுக-வின் ஓராண்டுகால ஆட்சி
திமுக-வின் ஓராண்டுகால ஆட்சி

தமிழகத்தில் மீண்டும் தி.மு.க ஆட்சி ஏற்பட்டு, முழுமையாக ஓராண்டு முடிவடைந்திருக்கிறது. முதல்வராக ஸ்டாலின் தனது ஓராண்டுகால ஆட்சியை நிறைவு செய்திருக்கிறார். இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஓராண்டுகால ஆட்சியில் சட்ட ஒழுங்கு எப்படி இருந்தது, குற்ற செயல்களை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன என்பதைப் பற்றி முழுமையாகக் காண்போம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தி.மு.க பிரமுகர்களின் அட்ராசிட்டியும், கட்சி மேற்கொண்ட நடவடிக்கைகளும்:

2021 தமிழக சட்ட மன்றத்தேர்தலில் தி.மு.க வெற்றி அமோக வெற்றிபெற்றது. வெற்றி கொண்டாட்டங்கள் ஒருபுறமிருக்க, அறிவிப்பு வெளியான மே 2-ம் தேதி மறுநாளே, சென்னை ஜே.ஜே நகரில் உள்ள அம்மா உணவகத்தின் பெயர்ப்பலகை, ஜெயலலிதா புகைப்படம் அடங்கிய பேனர்கள் தி.மு.க தொண்டர்கள் சிலரால் கிழித்து அகற்றப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்த, சம்மந்தப்பட இரு தி.மு.க-வினரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கியதோடு, கைது செய்யவும் உத்தரவிட்டார் முதல்வர் ஸ்டாலின்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திருச்சி, மணப்பாறை கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளரான ஆரோக்கியசாமி, மணல் திருட்டில் ஈடுபட்டதோடு, அதை பறிமுதல் செய்த காவல்துறை அதிகாரிகளை மிரட்டிய சம்பவம், டி.ஜி.பி வரைக்கும் சென்றது. தி.மு.க-வுக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்திய இந்த சம்பவத்தையடுத்து, ஆரோக்கியசாமி கட்சியை விட்டே நீக்கப்பட்டார்.

வேலூர் வேப்பங்குப்பம் காவல்நிலைய எஸ்.ஐ. சீனிவாசன், `ஏலச் சீட்டு மோசடி, மணல் கடத்தல் புகார்களில் வழக்குப்பதிவு செய்யக்கூடாது என தி.மு.க பிரமுகர்கள் என்னை மிரட்டுகிறார்கள். எனக்கு மன உலைச்சலாக இருக்கிறது. நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்' என்று பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

சூறையாடப்பட்ட அம்மா உணவகம்
சூறையாடப்பட்ட அம்மா உணவகம்

அதேபோல, இந்த ஆண்டு ஜனவரி இறுதி வாரத்தில், சென்னை திருவொற்றியூரில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி பொறியாளரை தி.மு.க எம்.எல்.ஏ. கே.பி. சங்கர் தாக்கியதாக, சென்னை மாநகராட்சி சார்பில் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து, கட்சித் தலைமை உடனடியாக கே.பி.சங்கரை, அவர் வகித்துவந்த பகுதிச் செயலாளர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கியது.

கே.பி. சங்கர் - ஸ்டாலின்
கே.பி. சங்கர் - ஸ்டாலின்

அதன்பின்னரும் கூட, கடந்த ஏப்ரல் 2-ம் தேதி திருவொற்றியூரைச் சேர்ந்த பார் உரிமையாளர் ஜோஷ்வா, `கே.பி. சங்கர் அடியாட்களுடன் வந்து மாதம் 1 லட்சம் ரூபாய் மாமூல் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் பார் உரிமத்தையும், இடத்தைம், எழுதி கொடுக்கும்படி கொலை மிரட்டல் விடுக்கிறார்' என சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலும், விதிமுறைகள் மீறலும்:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், வேட்பாளர்கள் கடத்தல், ஓட்டுக்குப் பணம் பரிசுப்பொருள் வழங்கல், வாக்குப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கையின்போது தமிழகத்தின் பல்வேறு வாக்குச்சாவடிகளில் கள்ள ஓட்டு பதிந்தது, குழப்பம் விளைவித்தது என அடுக்கடுக்காக தி.மு.க நிர்வாகிகள்மீது பல்வேறு புகார்களை எதிர்க்கட்சியினர் முன்வைத்தனர்.

குறிப்பாக, எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் சொந்தத் தொகுதியான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் ஒரு தி.மு.க பிரமுகர், காவல்துறை அதிகாரியை மிரட்டியதோடு, `ஆட்களை இறக்கி, சட்ட ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துவேன்' என சர்ச்சைக்குரிய வகையில் பேசியது, பெண் காவலரின் மொபைலைப் பறித்தது போன்ற வீடியோக்கள் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

இதுமட்டுமல்லாமல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு, தி.மு.க கவுன்சிலர்கள் மற்றும், தி.மு.க பெண் கவுன்சிலர்களின் கணவர்களின் அட்டகாசமும் எல்லைதாண்டி சென்றது. குறிப்பாக, சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் புதிதாக வீடுகட்டிக்கொண்டிருந்த உரிமையாளரிடம் 10 லட்சம் மாமூல் கேட்ட தி.மு.க பெண் கவுன்சிலரின் கணவர், பல்லாவரத்தில் பிரியாணி கடையில் பெண் கவுன்சிலரின் மைத்துனர் மாமூல் கேட்டு அடிதடியில் ஈடுபட்ட சம்பவம், சென்னை ராயபுரத்தில் பெண் கவுன்சிலரின் கணவர் `நான் தான் கவுன்சிலர்' என்றுகூறி ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை தகாத வார்த்தைகளில் திட்டி கொலைமிரட்டல் விட்டது என தி.மு.க கவுன்சிலர்கள் அட்ராசிட்டி அதிகரிக்க, அவர்களை கட்டுப்படுத்தும் விதமாக கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கி நடவடிக்கை எடுத்தது தி.மு.க தலைமை.

தி.மு.க பெண் கவுன்சிலர் கணவர் அட்ராசிட்டி
தி.மு.க பெண் கவுன்சிலர் கணவர் அட்ராசிட்டி

தடையற்ற போதைப்பொருள் விற்பனையும், தடுப்பு முயற்சியும்:

கடந்த ஜூலை மாதத்தில், தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் தடைசெய்யப்பட்ட குட்கா, பான் மசாலாப் பொருட்கள் தங்குதடையின்றி சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் விவகாரம் புயலைக் கிளப்பியது. ஜூனியர் விகடன் இதழும் 'குட்கா இன்னும் ஜோராக விற்கிறது முதல்வரே!' என அட்டைப்படக் கட்டுரையும் வெளியிட்டு சுட்டிக்காட்டியது. அதைத்தொடர்ந்து தமிழக அரசும் அதிரடியாக சோதனை நடத்தி, போதைப்பொருட்கள் பறிமுதல், விற்பனைசெய்த கடைக்கு சீல் என தீவிர நடவடிக்கை மேற்கொண்டது.

சென்னை விமான நிலையத்தில், கோடிக்கணக்கில் மதிப்புடைய ஹெராயின் கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் தொடர் சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறியது. அதேபோல, வட மாநிலங்களிலிருந்து ரயில்கள் மூலம் கஞ்சா கடத்தி வரப்பட்டு, தமிழகத்தில் விற்பனை செய்யும்போக்கும் அதிகரித்தது. இதைத்தொடர்ந்து, `ஆபரேஷன் கஞ்சா வேட்டை' என்ற பெயரில் தமிழக காவல்துறை கஞ்சா பயன்பாட்டை ஒழிப்பதற்கான அதிரடியான நடவடிக்கைகளை எடுத்தது. குறிப்பாக, கஞ்சா வேட்டை 2.0 மூலம் தமிழகத்தில் 2,423 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

தமிழக டிஜிபி ஆனார் சைலேந்திர பாபு
தமிழக டிஜிபி ஆனார் சைலேந்திர பாபு

வடமாநிலத்தவர்களின் குற்றச்செயல்களும், தேடிப்பிடித்த தமிழக காவல்துறையும்:

கடந்த ஆண்டு, ஜூன் மாதத்தில் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம் மையங்களை குறிவைத்து சுமார் ரூ. 1 கோடிக்கும் மேல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. தமிழகத்தையே பரபரப்புக்குள்ளாகிய இந்தச் சம்பவத்தில் அரியானாவைச் சேர்ந்த 10 வடமாநிலக் கொள்ளையர்கள் பிடிபட்டனர்.

அதேபோல, திருப்பூர் யூனியன் மில் ரோடு பகுதி நகைக்கடையின் இரும்புக் கதவுகளை உடைத்து, 375 பவுன் நகை, 9 கிலோ வெள்ளி, 25 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை போன சம்பவத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நான்குபேர் கைதுசெய்யப்பட்டனர்.

எஸ்.பி.ஐ ஏடிஎம்
எஸ்.பி.ஐ ஏடிஎம்

கடந்த மாதம் ஏப்ரல் 7-ம் தேதி, ஈரோடு மொடக்குறிச்சியிலுள்ள தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்தில், வட மாநில இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இதையொட்டி, போராட்டம் நடத்திய வட மாநில இளைஞர்கள் அந்நிறுவனத்தின் அலுவலகங்களை அடித்து நொறுக்கினர். மேலும், பேச்சுவார்த்தைக்கு வந்த பெண் காவலர்கள் உட்பட ஏழுக்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளைக் கடுமையாகத் தாக்கியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது! இந்த சம்பவம் தொடர்பாக, போலீஸார் 40 வட மாநில இளைஞர்களை கைதுசெய்தனர்.

மேலும், சென்னை, கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாநகரங்களில் கஞ்சா விற்பனை தொடர்பாக, பீகார், உ.பி., ராஜஸ்தான், ம.பி. ஜார்கண்ட், ஒடிசா என பல்வேறு வட மாநிலங்களைச் சேர்ந்த நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். இதுமட்டுமல்லாமல், பெண் குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கி `போக்சோ' வழக்கிலும் கைதாகினர்.

ரெளடிகள் அட்டகாசம், அரசின் ஸ்ட்ரிக்ட் ஆக்‌ஷன்:

சென்னை, சேலம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் ரெளடி கும்பல்கள் தங்களுக்குள் மோதிக்கொள்ளும் கலாசாரம் தலைதூக்கியது. இதையடுத்து, டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவின் பேரில், மூன்றே நாள்களில் தமிழகம் முழுவதும் 3,325 ரெளடிகள் அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டனர். குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம் பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த படப்பை குணாவை குண்டர் சட்டத்தில் கைதுசெய்தது தமிழக காவல்துறை.

ரவுடி படப்பை குணாவை குண்டர் சட்டத்தில் கைதுசெய்த தமிழக காவல்துறை
ரவுடி படப்பை குணாவை குண்டர் சட்டத்தில் கைதுசெய்த தமிழக காவல்துறை

காவல்துறையினருக்கு எதிரான தாக்குதல்களும், புதிய காவல் ஆணையமும்:

கடந்த நவம்பர் மாதம், திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல்நிலைய எஸ்.ஐ பூமிநாதன், ஆடு திருடிய நபர்களைப் பிடிக்கச் சென்றபோது, கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தவழக்கில், 10, 17 வயதே நிரம்பிய இருசிறுவர்கள் உட்பட நான்குபேர் கைது செய்யப்பட்டது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தி.மு.க ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லை என விமர்சனங்கள் எழுந்தன.

எஸ்.ஐ பூமிநாதன் கொலை
எஸ்.ஐ பூமிநாதன் கொலை

அதைத்தொடர்ந்து, 2022 ஜனவரி 19-ம் தேதி முதல்வர் ஸ்டாலின், `காவலர் - பொதுமக்களுக்கிடையேயான உறவை மேம்படுத்தவும், காவல்துறை பணியாளர்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்திடவும் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில், புதிய காவல் ஆணையம் அமைத்து' உத்தரவிட்டார். இருப்பினும், திருநெல்வேலியில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி, பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் கழுத்தை, குடி போதையில் இருந்த நபர் அறுத்த சம்பவமும் நடந்தேறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரசியல் படுகொலைகளும், தாக்குதல்களும்:

கன்னியாகுமரி செம்பன்விளை தி.மு.க பிரமுகர் குமாரசங்கர், திருநெல்வேலி பாளையங்கோட்டை தி.மு.க வட்டச்செயலாளர் பொன்னுதாஸைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரியில் மட்டும் சென்னை மடிப்பாக்கம் தி.மு.க வட்டச் செயலாளர் செல்வம், சென்னை பல்லவன் இல்லம் மதன், தூத்துக்குடி தாளமுத்து நகர் திமுக வட்டச் செயலாளர் கண்ணன், காஞ்சிபுரம் கோனேரிக்குப்பம் தி.மு.க மாவட்ட பிரதிநிதி சேகர் என ஒரே மாதத்தில் தொடர்ந்து 4 ஆளும்கட்சி பிரமுகர்கள் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.

கொலை
கொலை

கடந்த பிப்ரவரி 12-ம் தேதி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில், தமிழர் நீதிக் கட்சித் தலைவர் சுப. இளவரசன் சென்ற கார்மீது மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி, வெடிகுண்டு வீசி கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்டதும் நடந்தேறியிருக்கிறது. சமீபத்தில் கூட, கடந்த ஏப்ரல் 28-ம் தேதி, ஶ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த தி.மு.க கவுன்சிலரை 6 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்திய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது.

முதுகுளத்தூர் காவல் நிலையம்
முதுகுளத்தூர் காவல் நிலையம்

தொடரும் காவல்துறை விசாரணைக் கைதிகள் மரணம்:

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ல் தஞ்சாவூர் சத்தியவான், செப்டம்பர் 17-ல் சேலம் கார்த்திக், டிசம்பர் 4-ல் முதுகுளத்தூர் மணிகண்டன், டிசம்பர் 9-ல் சென்னை சீனிவாசன், இந்த ஆண்டு ஜனவரி 11-ல் நாமக்கல் மாற்றுத்திறனாளி பிரபாகரன், பிப்ரவரி 4-ல் திருநெல்வேலி சுலைமான் என காவல்துறையால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவங்கள் நிகழ்ந்தன. சமீபத்தில், கடந்த ஏப்ரல் மாதம் 18-ம் தேதி, சென்னையில் கஞ்சா கடத்தல் தொடர்பாக விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட விக்னேஷ் என்ற இளைஞர் மரணமடைந்தார்; அதைத்தொடர்ந்து ஏப்ரல் 26-ம் தேதி திருவண்ணாமலையில் சாராய விற்பனை தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட, பழங்குடியினத்தைச் சேர்ந்த தங்கமணியும் உயிரிழந்தார்.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கெதிரான குற்றங்களும், முதல்வரின் உத்தரவும்:

கடந்த நவம்பர் மாதம், கோவையில் பள்ளி ஆசிரியரின் பாலியல் தொந்தரவால் +2 மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போக்சோ வழக்கில் பள்ளி ஆசிரியரும், அலட்சியமாக இருந்த பள்ளி முதல்வரும் கைது செய்யப்பட்டனர். அதேபோல, கரூரைச் சேர்ந்த +2 மாணவி ஒருவரும் ஆசிரியரின் பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்துகொண்டார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
சித்தரிப்புப் படம்

டிசம்பர் மாதத்தில், கோவையில் காணாமல்போன 10-ம் வகுப்பு மாணவி, 5 நாட்கள் கழித்து சாக்கு மூட்டையில் கை, கால், வாய் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கூடுதல் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் அடுத்தடுத்து மூன்று கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்தன. குறிப்பாக, விருதுநகரில் 22 வயதான இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் தி.மு.க பிரமுகர்கள், பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல, வேலூரில் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் இளம்பெண் ஒருவர் நள்ளிரவில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். மேலும், கடலூரில் தனது ஆண் நண்பருடன் சென்ற இளம் பெண் ஒருவரை 3 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அடுத்தடுத்து அதிர்ச்சி அதிர்வலைகளை தமிழகமெங்கும் ஏற்படுத்தியது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ``பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் குற்றவாளிகளைக் கைதுசெய்து, அவர்களுக்கு அதிகபட்ச தண்டனைகள் வழங்க வேண்டும்" என காவல்துறை அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தார். ஏற்கெனவே, கடந்த ஆண்டு சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் ஆகியோர் பள்ளி மாணவிகள் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பள்ளி மாணவர்களின் குற்றங்களும், பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கையும்:

தேனி தேவதானப்பட்டியில், புத்தகம் கொண்டுவராமல் பள்ளிக்கு வந்த மாணவனைக் கண்டித்த ஆசிரியரை வகுப்பறையிலேயே தாக்கி, கத்தியைக் காட்டி மிரட்டிய மாணவர், திருப்பத்தூர் மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், ரெக்கார்ட் சமர்ப்பிக்கும்படி கேட்ட ஆசிரியரை தாகாத வார்த்தையால் திட்டிய மாணவர், சேலம் மஞ்சினி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமுடியை ஒழுங்காக சீர்செய்துவர அறிவுறுத்திய தலைமை ஆசிரியரை பீர் பாட்டிலால் குத்த முயன்ற மாணவர், வேலூர் அரசுப் பள்ளியில் பள்ளி மேசைகளை சேதப்படுத்தும் மாணவர்கள்,

பாதை மாறுகிறார்களா பள்ளி மாணவர்கள்?
பாதை மாறுகிறார்களா பள்ளி மாணவர்கள்?

செங்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சக மாணவர்களை ராகிங் செய்த மாணவர்கள், செங்கல்பட்டில் ஓடும் அரசுப் பேருந்தில் மது அருந்தும் பள்ளி மாணவ, மாணவிகள், சென்னை, கும்பகோணம் என தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த மாணவர்களை உள்ளே வரும்படி அழைத்த ஓட்டுநர், நடத்துநர்களை தாக்கிய மாணவர்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறி பைக் சாகசங்களில் ஈடுபட்டு மாணவர்கள் என பள்ளி மாணவர்கள் குற்றச்செயல்கள் புரியும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து சம்மந்தப்பட்ட மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

அன்பில் மகேஷ் - பள்ளிக் கல்வித்துறை
அன்பில் மகேஷ் - பள்ளிக் கல்வித்துறை

மேலும், மாணவர்களின் இந்த பாதைமாற்றத்தை தடுத்து, நல்வழிப்படுத்துவதற்காக, பள்ளிக் கல்வித்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. குறிப்பாக, மாதந்தோறும் பெற்றோர் - ஆசிரியர் - மாணவர் சந்திப்பு, மருத்துவர்கள் மூலம் மனநல ஆலோசனை வகுப்புகள், வழிகாட்டு நெறிமுறைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், விளையாட்டு, தனித்திறமைகளை ஊக்குவிக்கும் பயற்சிகள் என முக்கிய திட்டங்களை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism