முத்தலாக் விவாகரத்து முறையைத் தொடர்ந்து, தலாக் இ ஹசனையும் சட்டப்படி தடைசெய்து உத்தரவிடவேண்டும் என்று, காசியாபாத்தைச் சேர்ந்த பெனாசீர் ஹீனா என்ற பெண் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், காசியாபாத்தை சேர்ந்த பெனாசீர் ஹீனா, இஸ்லாமியர்கள் பின்பற்றும் தலாக் இ ஹசன் விவாகரத்து முறையால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த தலாக் இ ஹசன் முறையால் பல பெண்களும் குழந்தைகளும் பாதிக்கப்படுவதாகவும் கூறி, முத்தலாக் விவாகரத்து முறையை சட்டப்படி தடை செய்ததுபோல அதையும் தடை செய்ய வேண்டும் என்றும் கூறி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தலாக் இ ஹசன் என்பது, முத்தலாக் போன்ற மற்றுமொரு விவாகரத்து முறை. முத்தலாக் முறையில், ஒரே நேரத்தில் மூன்று முறை `தலாக்' என்று கூறி கணவன் - மனைவிக்கு இடையே விவாகரத்து நடைமுறையை மேற்கொள்ள முடியும். அதுவே தலாக் இ ஹசன் முறையில், மூன்று மாத காலத்தில், ஒவ்வொரு மாதமும் `தலாக்' என்று கூறுவதன் மூலம் விவாகரத்து நடைமுறையை மேற்கொள்ளலாம். ஒருவேளை மூன்றாவது மாதம் `தலாக்' சொல்வதற்குள் கணவன், மனைவி சமாதானம் ஆகிக்கொண்டால், முன்னர் சொன்ன இரண்டு `தலாக்'குகளும் செயலிழந்துவிடும்.
இதுபோன்ற நடைமுறையைக் கொண்டுள்ள தலாக் இ ஹசன் விவாகரத்து முறை மூலம், தன் கணவர் தனக்கு விவாகரத்து கொடுத்ததற்கு எதிராக, காவல் நிலையம் சென்றார் பெனாசீர். ஷரியா சட்டப்படி (இஸ்லாமியர்களுக்கான சட்டம்), அந்த முறை விவாகரத்து செல்லும் என்று காவல் நிலையத்தில் கூறப்பட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில்தான், தலாக் இ ஹசன் நடைமுறையை தடை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் பெனாசீர். நாட்டில் அனைத்து குடிமக்களுக்கும் நடுநிலையாகவும், சரியான காரணங்களுக்காகவும் விவாகரத்து செய்யும் உரிமை வழங்கும் நடைமுறைகளை அரசு பின்பற்றிட வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கில் வழக்கறிஞர் அஷ்வனி குமார் துபே தாக்கல் செய்த மனுவில், `முஸ்லிம் தனிநபர் சட்டம் (ஷரியத்) 1937, தலாக் போன்ற ஒருதலைபட்சமான, நீதிக்கு புறம்பான விஷயத்தை ஆதரிக்கிறது. இது திருமணமான முஸ்லிம் பெண்களின் அடிப்படை உரிமைகளுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கிறது . இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 14, 15, 21 மற்றும் 25 பிரிவுகள், மற்றும் சர்வதேச சிவில் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான மரபுகளைப் புண்படுத்துகிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.