Published:Updated:

``அயோத்தி வழக்கு குறித்து வதந்திகளைப் பரப்பினால்..!''- எச்சரிக்கும் டி.ஜி.பி திரிபாதி

அயோத்தி வழக்கை விசாரித்து முடித்துள்ள உச்சநீதிமன்றம் அடுத்த 10 நாள்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் தீர்ப்பு வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச்சூழலில் தீர்ப்பு தொடர்பாக வதந்தி பரப்பினால் தண்டிக்கப்படுவார்கள் என டி.ஜி.பி திரிபாதி எச்சரித்துள்ளார்.

அயோத்தி வழக்கு
அயோத்தி வழக்கு

அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. வழக்கின் விசாரணையெல்லாம் முடிந்துவிட்டது. தீர்ப்பு சொல்லப்படும் நாள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு தமிழக ஆளுநரை முதல்வர், தலைமைச் செயலாளர், டி.ஜி.பி ஆகியோர் திடீரென நேரில் சந்தித்துப் பேசினர்.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

நவம்பர் 10-ம் தேதி முதல் மறுஉத்தரவு வரும் வரையில் போலீஸார் விடுமுறை எடுக்கக் கூடாது என்கிற அறிவிப்பு வெளியாகியது. அதன் தொடர்ச்சியாக அயோத்தி தீர்ப்பை மையமாக வைத்து வதந்திகள் றெக்கை கட்டிப்பறக்கின்றன. அந்தவகையில், வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் லேட்டஸ்டாக பரவி வரும் விஷயம் இதுதான்...

நவம்பர் 10-13 வெளியூர் பயணத்தை தவிர்க்கப்பாருங்கள். வீட்டில் இருக்கும் அனைவரிடமும் சொல்லுங்கள். 13-ம் தேதி அயோத்தி தீர்ப்பு வெளியாகிறது. 10-ம் தேதியில் இருந்து போலீஸ் அலர்ட் பண்ணி அரசு ஆணை வெளியாகியிருக்கிறது.

``புதிய விதிகள் நாளை முதல் பொருந்தும் "

* அனைத்து போன் அழைப்புகளும் பதிவு செய்யப்படும்.

* வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் அனைத்து சமூக ஊடகங்களும் கண்காணிக்கப்படும்.

* தவறான செய்தியை யாருக்கும் அனுப்ப வேண்டாம். ஆட்சேபிக்கத்தக்க பதிவுகள் அல்லது வீடியோக்களை அனுப்ப வேண்டாம்.

* எந்தவொரு அரசியல் அல்லது மத பிரச்னை தொடர்பான அவதூறு செய்தியை எழுதுவது அல்லது அனுப்புவது குற்றமாகும். அவ்வாறு செய்பவர்கள் மீது வாரன்ட் இல்லாமல் கைது செய்யப்படலாம்.

டி.ஜி.பி திரிபாதி
டி.ஜி.பி திரிபாதி

இவ்வாறு அந்த மெசேஜில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போலீஸ் தரப்பில் தயாரித்திருப்பதைப் போலவே இந்த மெசேஜ் இருப்பதால் மக்களும் இதை நம்ப வேண்டியிருக்கிறது.

இந்தத் தகவலை வாட்ஸ்அப் மூலம் தமிழக - சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியான திரிபாதிக்கு அனுப்பி, `இதெல்லாம் நிஜமா? வதந்தியா?’ என்று கேட்டோம். அதற்கு டி.ஜி.பி பதிலளித்து நம்மிடம் கூறுகையில், ``காவல்துறைக்கும் இந்த மெசேஜுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது யாரோ தயாரித்துப் பரப்பி வரும் செய்தி. இதுபோல நிறைய வதந்திகள் பரப்பப்படுகின்றன. மக்கள் யாரும் அதையெல்லாம் நம்பவேண்டாம்'' என்றார்.

சமூக ஊடகங்களில் வலம் வரும் இந்தச் செய்தி, காவல்துறை தரப்பில் உருவாக்கப்பட்டதில்லை என்பது தெளிவாகியுள்ளது. இதனால் யாரும் எந்த விமர்சனத்தையும் எழுப்பக் கூடாது என்ற நோக்கத்தில் குறிப்பிட்ட ஒரு தரப்பினரால் இந்த மெசேஜ் உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், இந்தத் தீர்ப்பையொட்டி எந்த விதமான அசம்பாவிதமும் வன்முறையும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக காவல்துறை மிகவும் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளது. அதனால் வதந்தி பரப்புவோர் யாராக இருந்தாலும் அவர்களின் மீது அதிரடி நடவடிக்கைகள் பாயும் என்பது நிச்சயம்.