Published:Updated:

சட்டம்: கால்நடைப் பராமரிப்புத்துறை ஒரு பார்வை!

சட்டப்பஞ்சாயத்து வழிகாட்டும் தொடர்... - 13

பிரீமியம் ஸ்டோரி

கால்நடை வளர்ப்பு, வேளாண்மையில் ஓர் அங்கம். விவசாயிகளுக்கும், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கும் வருவாய் கொடுக்கும் ஒரு தொழிலாக இருந்து வருகிறது கால்நடை வளர்ப்பு. இந்த இதழில், கால்நடைப் பராமரிப்புத் துறையின் செயல்பாடுகள்குறித்துப் பார்ப்போம்.

சிவ.இளங்கோ
சிவ.இளங்கோ

‘கால்நடை மற்றும் கோழி இனங்களின் உற்பத்தித் திறனைப் பெருக்கி அதன் மூலம் பால், முட்டை மற்றும் இறைச்சி உற்பத்தியை அதிகரிப்பது’, ‘கால்நடைகளுக்கும் கோழிகளுக்கும் நவீன மருத்துவச் சேவையை அளிப்பது’, ‘தடுப்பூசிகள் வாயிலாக நோய்களைத் தடுத்து அனைத்து கால்நடைகளின் உடல்நலனை உறுதிப்படுத்துவது’, ‘அயலின மற்றும் கலப்பின உறைவிந்தைப் பயன்படுத்திச் செயற்கை முறை கருவூட்டல் செய்து உள்ளூர் பசுக்களின் தரத்தை உயர்த்துவது’, ‘முர்ரா இன உறைவிந்தைப் பயன்படுத்தி எருமைகளின் தரத்தை உயர்த்துவது’, ‘உள்நாட்டின கால்நடைகளை அவற்றின் வாழ்விடங்களிலேயே பாதுகாப்பது மற்றும் அவற்றின் எண்ணிக்கையைப் பெருக்குவது’, ‘கிராமப்புற ஏழைகளின் பொருளாதார நிலையை உயர்த்தும் நோக்குடன் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவது’, ‘கால்நடைகள்மூலம் மனிதர்களுக்குப் பரவும் நோய்களைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவது’, ‘நவீன கால்நடைப் பராமரிப்பு முறைகள் பற்றிப் பொதுமக்களிடையே விழிப்புஉணர்வை ஏற்படுத்துவது’, ஆகியவற்றை முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு கால்நடைப் பராமரிப்புத்துறை செயல்பட்டு வருகிறது.

சட்டம்: கால்நடைப் பராமரிப்புத்துறை ஒரு பார்வை!

கால்நடைப் பராமரிப்புத் துறையின் 19-ம் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 88.14 லட்சம் பசுக்கள், 7.81 லட்சம் எருமைகள், 47.87 லட்சம் செம்மறியாடுகள், 81.43 லட்சம் வெள்ளாடுகள், 1.84 லட்சம் பன்றிகள் என்று உள்ளன. இவையல்லாமல் குதிரைகள், மட்டக்குதிரைகள், கழுதைகள் போன்றவை 14,000 எண்ணிக்கையில் உள்ளன. மொத்தக் கால்நடைகளின் எண்ணிக்கை 2 கோடியே 27 லட்சத்து 23 ஆயிரம். 18-ம் கால்நடை கணக்கெடுப்பின்போது, 3 கோடியே 7 லட்சத்து 58 ஆயிரம் கால்நடைகள்தான் இருந்தன.

கால்நடைகள் மற்றும் கோழி இனங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கால்நடைகள் வாங்குவதற்கான வங்கிக்கடனுக்கும் ஆலோசனைகள் வழங்கி வருகின்றன.

19-ம் கணக்கெடுப்பின்படி மொத்த கோழி இனங்கள் 11 கோடியே 73 லட்சத்து 49 ஆயிரம். 18-ம் கணக்கெடுப்பின் படி கோழிகளின் எண்ணிக்கை 13 கோடியே 12 லட்சத்து 54 ஆயிரம். இந்தக் கணக்கெடுப்புகளை ஒப்பிடும்போது கால்நடைகள் மற்றும் கோழி இனங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கைக் குறைந்து வருவது நன்றாகவே தெரிகிறது. இது கால்நடைத் துறையின் மீது அரசு மிக அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணி.

தமிழ்நாட்டில் 144 கால்நடை மருத்துவமனைகள், 875 கால்நடை கிளை நிலையங்கள், 22 கால்நடை பெருமருத்துவமனைகள், 6 கால்நடை பன்முக மருத்துவமனைகள், 56 நடமாடும் கால்நடை மருத்துவப் பிரிவுகள், 2061 கால்நடை மருந்தகங்கள் உள்ளன. கால்நடை மருத்துவமனைகளில், இளங்கலை கால்நடை மருத்துவம் (B.V.Sc) படித்தவர்கள், ‘கால்நடை உதவி மருத்துவர்’ பணி நிலையில் இருப்பர். இவர்களுக்கு உதவி புரிய, கால்நடை ஆய்வாளர் மற்றும் கால்நடை உதவியாளர் ஆகியோர் இருப்பர். இந்த மருத்துவமனை காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்படும். காலையில், உறைவிந்தைப் பயன்படுத்திச் செயற்கைக் கருவூட்டல் செய்தல், கால்நடைகளுக்குக் குடற்புழு நீக்கம் செய்தல், வியாதிகளுக்கான சிகிச்சை அளித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். மதியம், கால்நடைகளுக்கான அறுவை சிகிச்சைகள் மற்றும் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

சட்டம்: கால்நடைப் பராமரிப்புத்துறை ஒரு பார்வை!

கால்நடை மருத்துவ முகாம்களில், கால்நடை மருத்துவமனைகளில் கண்டறியப்படும் பெரிய நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை போன்றவை மாவட்ட தலைநகரில் உள்ள பெருமருத்துவமனைகள் மற்றும் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய 6 மாநகரங்களில் உள்ள பன்முக மருத்துவமனைகளிலும் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் சென்னை, நாமக்கல், ஒரத்தநாடு, நெல்லை ஆகிய நகரங்களில் உள்ள தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளிலும் சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கிராமப்பகுதியில் குறிப்பாகக் கால்நடைகள் அதிகம் உள்ள பகுதிகளில் வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை ஆகியவற்றின் ஒத்துழைப்போடு கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த முகாம்களில் ஆண்டுக்கு இருமுறை ஆடு மாடு களுக்குக் கோமாரி நோய்க்கான தடுப்பூசி போடப்படுகிறது. அதோடு, மாட்டுக்குச் சப்பை நோய், தொண்டை அடைப்பான் ஆகிய நோய்களுக்கான தடுப்பூசிகளும், செம்மறி ஆடுகளுக்கு ஆட்டம்மை, துள்ளுமாரி, நீலநாக்கு போன்ற நோய்களுக்கான தடுப்பூசிகளும், வெள்ளாடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய்க்கான தடுப்பு ஊசியும், கோழிகளுக்குக் கோழிக்கழிச்சல், கோழி அம்மை போன்ற நோய்களுக்கான தடுப்பு ஊசிகளும், செல்லப்பிராணிகளுக்கு வெறி நோய்க்கான தடுப்பு ஊசியும் போடப்படுகின்றன. மேலும் குதிரை, பன்றி, காடை உள்ளிட்டவற்றுக்கும் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

‘‘தமிழ்நாட்டில் கால்நடைகள் மற்றும் கோழி இனங்களின் எண்ணிக்கைக் குறைந்து வருகிறது. அரசு மிக அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணி இது.’’

தமிழ்நாட்டில் உள்ள 875 கிளை கால்நடை மருத்துவமனைகளிலும் செயற்கைக் கருவூட்டல் செய்தல், குடற்புழு நீக்கம் செய்தல், காய்ச்சலுக்கான மருந்துகள் கொடுத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இங்கு கால்நடை ஆய்வாளர், கால்நடை உதவியாளர் ஆகியோர் இருப்பர். தேவைப்படும்போது, அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் உள்ள கால்நடை உதவி மருத்துவரை வரவழைத்துக் கால்நடைகளுக்கு மருத்துவம் பார்க்கப்படும்.

சட்டம்: கால்நடைப் பராமரிப்புத்துறை ஒரு பார்வை!

கால்நடைகள் வளர்க்கும் விவசாயி களுக்குப் பசுந்தீவன விதைகள் முகாம்களில் இலவசமாக வழங்கப்படுகின்றன. தமிழக அரசின் இலவச ஆடு மாடு வழங்கும் திட்டத்தில் கால்நடைகளுக்கு மருத்துவச் சான்றிதழ் கொடுக்கும் பணியையும் கால்நடைப் பராமரிப்புத்துறைதான் மேற்கொள்கிறது. மேலும், கால்நடை மருத்துவக் காப்பீடு செய்வதற்கான ஆலோசனைகளை வழங்கி வருகிறது. கால்நடைகள் வாங்குவதற்கான வங்கிக்கடனுக்கும் ஆலோசனைகள் வழங்கி வருகிறது.

உங்கள் பகுதியில் கால்நடை முகாம் நடத்தவேண்டுமென்றால் கால்நடை மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், பன்முக மருத்துவ மனைகள், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளலாம். கிளை கால்நடை மருத்துவமனைக்கு, மாவட்ட மருத்துவமனைக்குக் கால்நடை மருத்துவர் உரிய நேரத்தில் வரவில்லை எனில் மாவட்ட கால்நடைப் பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மற்றும் கூடுதல் இயக்குநர் ஆகியோரிடம் புகார் செய்யலாம்

மேலும் விவரங்களுக்குச் சட்ட பஞ்சாயத்து இயக்க உதவி மையத்தை 76671 00100 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.

-வழிகாட்டல் தொடரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு