Published:Updated:

சட்டம்: வனத்துறைத் திட்டங்களை பயன்படுத்திக் கொள்வது எப்படி?

வனத்துறை
பிரீமியம் ஸ்டோரி
News
வனத்துறை

சட்டப்பஞ்சாயத்து வழிகாட்டும் தொடர்... - 15

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கியப் பங்காற்றுபவை வனங்கள். வனத்துறை, விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கிவரும் சேவைகள்குறித்து இந்த இதழில் பார்ப்போம்.

1857-ம் ஆண்டு தமிழ்நாட்டு வனத்துறை ஏற்படுத்தப்பட்டது. வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் வாழும் மக்கள், உணவு, நீர் மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பிற்கு வனங்களையே சார்ந்துள்ளனர். பழங்கள், பூக்கள், சிறுபழங்கள். கிழங்குகள், மரப்பிசின், தேன், இலைகள் மற்றும் கொடிகள் போன்ற சந்தையில் விற்பனை செய்யப்படும் தடிமரம் சாரா வனப்பொருள்களை வனங்களில் சேகரிக்கிறார்கள். பழங்குடியினர் மற்றும் விவசாயிகளோடு தொடர்புகொள்ளும் துறையாக வனத்துறை செயல்பட்டு வருகிறது.

சட்டம்: வனத்துறைத் திட்டங்களை பயன்படுத்திக் கொள்வது எப்படி?

இந்திய நில அளவை நிறுவனத்தால் 2017-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி தமிழக வனப்பரப்பு 26,281 சதுர கிலோமீட்டர். இது தமிழக நிலப்பரப்பில் 20.21 சதவிகிதம் ஆகும். இதில் 3,672 சதுர கிலோமீட்டர் மிக அடர் வனமாக உள்ளது. 10,979 சதுர கிலோமீட்டர் மிதமான அடர்த்தி கொண்டதாகவும், 11,630 சதுர கிலோமீட்டர் திறந்த வனமாகவும் உள்ளது. எட்டு மாவட்டங்களில் 49 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சதுப்பு நிலக் காடுகள் உள்ளன. 3,350 கிலோமீட்டர் வனச் சாலைகளை வனத்துறை பராமரித்துவருகிறது. 1982-ம் ஆண்டின் தேசிய வனக்கொள்கை நாட்டின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கினை வனம் மற்றும் மரப் பரப்பின் கீழ் கொண்டு வருவதைத் தனது குறிக்கோளாகக் கொண்டுள்ளது. வனம் மற்றும் மரப் பரப்பினை 33 சதவிகிதமாக அதிகரிக்கும் குறிக்கோளை அடைவதற்கு ஆண்டுக்கு 1,500 கோடி ரூபாய் முதலீட்டில் 2030-ம் ஆண்டுக்குள் இலக்கை எட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டு, செயல்படுத்திவருகிறது வனத்துறை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
பொதுமக்கள் ஆடு மாடுகளை மேய்க்க இலவசமாக வனப்பகுதியில் அனுமதிக்கப்படுகிறார்கள். மாவட்ட வன அலுவலகத்தில் மாதம் ஒருமுறை குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படுகிறது.

33 சதவிகிதம் வனமாக்கும் நோக்கத்தில், தமிழ்நாட்டு உயிர்ப்பன்மைப் பாதுகாப்பு மற்றும் பசுமை ஆக்குதல் திட்டத்தின் கீழ் தனியார் காடுகளில் மரம் வளர்க்கும் திட்டம் 2012-13-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 50 மரக்கன்றுகள் அல்லது குழுவாக (சுய உதவிக் குழு) 200 மரக்கன்றுகள் நடுவதற்கு முன்வருவோர் முதன்மைப் பயனாளிகளாகத் தேர்வு செய்யப்படுவார்கள். அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு ஹெக்டேருக்கு 500 மரக்கன்றுகள் வீதம் 5 ஹெக்டேருக்கு 2,500 மரக்கன்றுகள் வனத்துறையால் வழங்கப்படுகின்றன. தகுதியான சிறு-குறு விவசாயிகள் விண்ணப்பிக்காத நிலையில், பெரு விவசாயிகள் இத்திட்டத்தில் பயனடைவர். இத்திட்டத்தில் சவுக்கு, தேக்கு, குமிழ், மலைவேம்பு, பீநாரி, பலாமரம் போன்ற மர வகைகள் நடப்பட்டுவருகின்றன. திட்ட ஒதுக்கீட்டிலிருந்து மொத்தச் செலவினமும் மேற்கொள்ளப்படுவதால் மரம் நடுவதில் விவசாயிகள் எவ்விதச் செலவும் செய்யவேண்டியதில்லை. இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் நில உரிமைப் பத்திரம், பட்டா, சிட்டா-அடங்களுடன் சம்பந்தப்பட்ட வனச்சரகர் மற்றும் மாவட்ட வன அலுவலரை அணுகவும்.

சட்டம்: வனத்துறைத் திட்டங்களை பயன்படுத்திக் கொள்வது எப்படி?

சந்தன மரங்களைப் பட்டா நிலத்தில் சொந்தக்காரராக, வாடகையாளராக, ஒப்பந்ததாரராக எவரொருவர் சந்தன மரங்களை வளர்க்கிறார்களோ அவர்களே அம்மரங்களுக்கு உரிமையாளராவார். பட்டா நிலங்களில் வளர்க்கப்படும் சந்தன மரங்களை அரசிடம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். தனியார் தமது சொந்த நிலங்களில் சந்தன மரங்களை அதிக அளவில் வளர்ப்பதை ஊக்குவிக்கும்பொருட்டு 2008-ம் ஆண்டு தமிழ்நாட்டு பட்டா நிலங்களில் சந்தன மரங்கள் விதியினை அரசு தனியே அறிவிப்பு செய்துள்ளது. (அரசாணை எண் 140 சுற்றுச்சூழல் வனத்துறை நாள் 27/11/2018) கல்வி நிறுவனங்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் திட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன.

சட்டம்: வனத்துறைத் திட்டங்களை பயன்படுத்திக் கொள்வது எப்படி?

கால்நடைகள் மேய்ச்சல் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் தங்களுடைய செம்மறி ஆடுகள், காளைகள், எருமைகளை மேய்க்க இலவசமாக வனப்பகுதியில் அனுமதிக்கப்படுகிறார்கள். குதிரை மற்றும் கழுதை ஒன்றுக்கு 10 ரூபாயும் யானை ஒன்றுக்கு 100 ரூபாயும் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட வனச்சரகர் மற்றும் மாவட்ட வன அலுவலரை அணுக வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘தமிழ்நாட்டு உயிர்ப்பன்மைப் பாதுகாப்பு மற்றும் பசுமை ஆக்குதல் திட்டத்தின் கீழ் தனியார் காடுகளில் மரம் வளர்க்கும் திட்டம் 2012-13-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.’’

வன உயிரினங்களால் ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. மனித உயிரிழப்பு அல்லது நிரந்தர ஊனம் ஏற்படும் நிலையில் 4,00,000 ரூபாய். பலத்த காயங்களுக்கு 59,100 ரூபாய், பயிர்ச் சேதங்களுக்கு ஏக்கருக்கு 25,000 ரூபாய், தென்னை மரங்கள் சேதம் ஏற்படும் நிலையில் மரம் ஒன்றுக்கு 500 ரூபாய் வழங்கப்படுகிறது. ஓடு, கான்கிரீட், கூரை வேய்ந்த வீடுகள் முழுமையான, கடுமையான குடியிருப்புச் சேதம் அடைந்தால் 95,100 ரூபாய், உறுதியற்ற கட்டடம் சேதமடைந்தால் குடியிருப்பு ஒன்றுக்கு 10,000 ரூபாய், பாதி அளவிலான குடியிருப்புச் சேதம் அடைந்தால் குடியிருப்பு ஒன்றுக்கு 5,200 ரூபாய் வழங்கப்படுகிறது.

சட்டம்: வனத்துறைத் திட்டங்களை பயன்படுத்திக் கொள்வது எப்படி?

மாடு மற்றும் இதர கால்நடை இழப்புகளுக்கு

கறவை மாடு ஒன்றுக்கு 30,000 ரூபாய், எருது ஒன்றுக்கு 25,000 ரூபாய், ஆடு மற்றும் பன்றி இழப்புக்குத் தலா 3,000 ரூபாய், வீட்டுப் பறவைகள் ஒன்றுக்கு 100 ரூபாய் வழங்கப்படுகிறது. துணி மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் சேதமடைந்தால் 2,000 ரூபாய், கடைகள் சேதமடைந்தால் 4,000 ரூபாய், பாசன மற்றும் குடிநீர்க் கிணறு மின்மோட்டார் சேதமடைந்தால் 2,000 ரூபாய், வாகனம் சேதமடைந்தால் 2,000 ரூபாய் இழப்பீடாக வழங்கப்படுகிறது. இந்த இழப்பீட்டைப் பெற முதல் தகவல் அறிக்கை, வாரிசு சான்றிதழ் மற்றும் தொடர்புடைய இதர ஆவணங்களுடன், சம்பந்தப்பட்ட வனச்சரக அலுவலர் மற்றும் மண்டல வனப்பாதுகாவலரை அணுக வேண்டும். பொதுமக்களின் குறைகளைத் தீர்க்க வனச்சரக அலுவலகத்தில் 15 நாள்களுக்கு ஒருமுறையும், மாவட்ட வன அலுவலகத்தில் மாதம் ஒருமுறையும் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படுகிறது. தலைமை அலுவலகத்தில் இணை இயக்குநரைப் பிரதி மாதம் முதல் வெள்ளிக்கிழமை சந்திக்கலாம்.

மேலும் விபரங்களுக்குச் சட்டப்பஞ்சாயத்து உதவி மையத்தை 7667-100-100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

-வழிகாட்டல் தொடரும்