Published:Updated:

``சிலை உடைத்தவரை சிறையில் அடைக்காமல், சிலைகளைச் சிறையில் அடைத்தது ஏன்?" - செ.கு.தமிழரசன் கேள்வி

த.கதிரவன்

அம்பேத்கர் சிலை உடைப்பு விவகாரம் பரபரப்பு கிளப்பிவரும் இவ்வேளையில், 'அம்பேத்கர் சிலைகளை அடைத்திருக்கும் கூண்டுகளை அகற்ற வேண்டும்' என்று போர்க்கொடி தூக்கியிருக்கிறார் இந்தியக் குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன்.

அம்பேத்கர் சிலை அமைக்கும் பணி
அம்பேத்கர் சிலை அமைக்கும் பணி

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே தலைகுனிய வைத்திருக்கிறது. நாடு முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தை அடுத்து, உடனடியாக அதே இடத்தில், புதிய சிலை ஒன்றை நிறுவி அமைதியை நிலைநாட்டியுள்ளது தமிழக அரசு.

செ.கு.தமிழரசன்
செ.கு.தமிழரசன்

இந்நிலையில், ''வருகிற டிசம்பர் 6, அம்பேத்கர் மறைந்த நாளுக்குள் தமிழகத்திலுள்ள அம்பேத்கர் சிலைகளை அடைத்திருக்கும் கூண்டிலிருந்து விடுதலை செய்ய வேண்டும். இல்லையெனில், நாங்களே கூண்டுகளை அகற்றுவோம்'' என்று எதிர்ப்புக் குரல் கொடுக்கிறார் இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன்.

இதுகுறித்து அவரிடம் விரிவாகப் பேசினோம்...

''தமிழகத்தைப் பொறுத்தவரையில், இந்தச் சிலை உடைப்பு விவகாரங்கள் எல்லாம் 1996-லிருந்துதான் ஆரம்பித்தன. தலைவர் 'வீரன் சுந்தரலிங்கம்' பெயரில் போக்குவரத்துக் கழகத்துக்குப் பெயர் சூட்டியபோதுதான் சாதி ரீதியிலான எதிர்ப்புகள் வலுத்தன.

சிலை உடைப்பு கலவரம்
சிலை உடைப்பு கலவரம்

இதைத்தொடர்ந்து அன்றைய முதல்வர் கருணாநிதியும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தினார். இதில், மாவட்டம் மற்றும் போக்குவரத்துக் கழகங்களுக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ள அனைத்து தலைவர்களின் பெயர்களையும் ஒட்டுமொத்தமாக நீக்குவது என்ற முடிவு எடுக்கப்பட்டது.

இதையடுத்து தொடர்ச்சியாக அம்பேத்கர் சிலைகளும் ஆங்காங்கே உடைக்கப்பட்டன. குறிப்பாக, தென் தமிழகத்தில் தொடர்ச்சியாகக் கலவரங்களும் அரங்கேறின.

புதிய அம்பேத்கர் சிலை
புதிய அம்பேத்கர் சிலை

இதையடுத்து 'சாதாரண களி மண்ணில் சிலைகள் அமைக்கப்படக் கூடாது. வெண்கலத்தால் ஆன சிலைகளை மட்டுமே அமைக்க வேண்டும்.

மேலும், அந்த வெண்கல சிலை அமைப்புக்கும் மாவட்ட அளவிலான உயர் அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும், சிலை உருவாக்கத்துக்கு செலவான அதேயளவு தொகையை பாதுகாப்பு வைப்பு நிதியாக அரசுக்கு அளிக்க வேண்டும்' என்றெல்லாம் கடுமையான விதிகளைக் கொண்ட புதிய சட்டத்தை அன்றைய அரசு கொண்டுவந்தது.

உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை
உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை

மேலும், தலைவர்களின் சிலைகளை யாரும் உடைக்க முடியாத வண்ணம் பாதுகாக்கிறோம் என்று சொல்லி, சிலைகளைச் சுற்றி கம்பி வலையிடப்பட்டக் கூண்டுகளும் அமைக்கப்பட்டன.

இது விஷயமாக அப்போது நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எங்கள் கட்சி சார்பாகக் கலந்துகொண்டு பேசிய நான், 'சமூகத்தில் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்கள்தான் தங்களால் முடிந்த அளவு பணம் திரட்டி எளிய அளவில் சிலைகளை அமைத்து வருகிறார்கள்.

Ambedkar
Ambedkar

வெண்கல சிலை மட்டுமே அமைக்க வேண்டும் என்று சட்டம் இயற்றினால், அது அண்ணல் அம்பேத்கர் சிலைகள் உருவாவதைத் தடுக்கும் மறைமுக முயற்சியாகத்தான் இருக்கும்' என்று எதிர்த்துப் பேசினேன்.

மேலும், 'தலைவர்களது சிலைகளை உடைப்பவர்களைக் கைது செய்து சிறையில் தள்ளுவதுதான் அரசின் வேலை. அதை விடுத்து, சிலையை உடைத்தவர்களை வெளியே விட்டுவிட்டு சிலைகளை சிறையில் அடைப்பது என்ன நியாயம்?' என்றும் கேள்வி கேட்டேன்.

செ.கு.தமிழரசன்
செ.கு.தமிழரசன்

ஆனாலும் இன்றுவரையில் தமிழகம் முழுக்க தலைவர்களது சிலைகள் கூண்டுக்குள்தான் அடைபட்டுக் கிடக்கின்றன. சிலையை உடைப்பவர்களோ சுதந்திரமாக வெளியே சுற்றித் திரிந்துகொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் அம்பேத்கர் சிலைகளைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் கம்பிக் கூண்டுகளை அகற்ற வேண்டும். சிலை உடைப்பில் ஈடுபடும் சமூக விரோத சக்திகளைக் கைது செய்து சிறையில் தள்ள வேண்டும்.

Ambedkar
Ambedkar

டிசம்பர் 6-ம் தேதி அம்பேத்கர் நினைவு நாள் வருகிறது. அதற்குள் அம்பேத்கர் சிலைகளைக் கூண்டிலிருந்து விடுவிக்க வேண்டும். இல்லையெனில், எங்கள் கட்சி சார்பாக நாங்களே கூண்டுகளை அகற்றும் போராட்டத்தில் ஈடுபடுவோம்'' என்று எச்சரித்து முடித்தார் செ.கு.தமிழரசன்.