Published:Updated:

செங்கோட்டையனைக் காப்பாற்றிய `ரெட் டேபிசம்' - 2 கோடி ரூபாய் பரிசுப் பொருள் வழக்கு தள்ளுபடி

ஜெனிஃபர்.ம.ஆ

ஜெயலலிதா மீதான பரிசுப் பொருள் வழக்கில் உயர் நீதிமன்றத் தீர்ப்பில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்திருக்கிறது.

Sengottaiyan
Sengottaiyan ( Vikatan )

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் தற்போதைய கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மீது தொடரப்பட்ட இரண்டு கோடி ரூபாய் பரிசுப்பொருள் வழக்கு இன்று முடிவை எட்டியிருக்கிறது.

Jayalalithaa
Jayalalithaa
Vikatan

1992-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அவருக்கு பிறந்தநாள் பரிசாக சுமார் மூன்று லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டன. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு, சுமார் இரண்டு கோடி ரூபாய்.

ஜெயலலிதாவுடன் சேர்த்து இந்த சட்டவிரோதமான செயலுக்கு துணை நின்றதாக செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

முதல்வராக இருப்பவர் தமக்கு வரும் பரிசுப்பொருள்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது சட்டம்.

முதல்வர் ஜெயலலிதா தனக்குப் பரிசாக வந்த சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள டாலர்களை தமது வங்கிக்கணக்கில் சேர்த்துக்கொண்டதாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் பல வருடங்கள் எடுத்துக்கொண்டதாகவும், இந்த முறையற்ற சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கை காரணமாக இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படவேண்டும் என்றும் ஜெயலலிதா தரப்பில் வாதிடப்பட்டது.

Dollars
Dollars
Vikatan

இதற்குப் பதிலளித்த சிபிஐ, 1992-ம் ஆண்டு வரைவோலையாக வழங்கப்பட்ட இந்தப் பணம் பற்றி வருமான வரித் துறையினருக்கு 1996-ம் ஆண்டுதான் தெரியவந்தது எனவும், உடனடியாக இதற்கு முதல் தகவல் அறிக்கை (FIR) தாக்கல் செய்யப்பட்டது எனவும் பதிலளிக்கப்பட்டது.

முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்த பிறகும், குற்றப்பத்திரிகை (Chargesheet) தாக்கல் செய்ய பல வருடங்கள் எடுத்துக்கொண்டதை சுட்டிக்காட்டிய உயர் நீதிமன்றம், இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது. அதைத் தொடர்ந்து சிபிஐ இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

Supreme Court
Supreme Court
Vikatan

அதைத் தொடர்ந்து இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். விசாரணையை சிபிஐ காலதாமதமாக கையாண்டதால் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆகையினால், 23 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கை தொடர்ந்து நடத்தத் தேவையில்லை என்று கூறி, இந்த வழக்கிலிருந்து அமைச்சர் செங்கோட்டையனையும் விடுவிடுத்தது.

ஜெயலலிதா மற்றும் அழகு திருநாவுக்கரசு காலமானதால் அவர்கள் மீதான வழக்கு கைவிடப்பட்டது. ஆனால், அமைச்சர் செங்கோட்டையன் மீதான வழக்கு, இன்று அலுவல் நடைமுறையில் ஏற்பட்ட தாமதத்தால் கைவிடப்பட்டிருக்கிறது. தேக்கத்தில் இருக்கும் அரசாங்க அலுவல்கள் நடைபெறுவதில் இருக்கும் சிக்கல், கடுமையான அலுவல் நடைமுறை, அதனால் ஏற்படும் நடைமுறை தாமதம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் ரெட் டேபிசம் (Red Tapism) என்பார்கள்.

வழக்கு
வழக்கு

பழைய அலுவலகக் கோப்புகளில் கட்டப்பட்டிருக்கும், அவிழ்க்கப்படாத சிவப்பு நாடாக்களை குறியீடாக கொண்டது இந்தச் சொல். இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்த ரெட் டேபிசம் (Red Tapism) பெரும் தடையாக இருக்கிறது என்பது அறிஞர்கள் கருத்து. இன்றைய நிலையில், முக்கியமான வழக்குகளும், குற்றச்சாட்டுகளும் விசாரிக்கப்படாமல் முடிந்து போவதற்கு ரெட் டேபிசம் காரணமாக இருப்பது வருத்தத்துக்குரிய விஷயமே.