Published:Updated:

`கந்துவட்டி கேட்டு மிரட்டினால் குண்டர் சட்டம் பாயும்!' - எச்சரிக்கும் தூத்துக்குடி எஸ்.பி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஜெயக்குமார் - தூத்துக்குடி எஸ்.பி
ஜெயக்குமார் - தூத்துக்குடி எஸ்.பி

`தூத்துக்குடியில் சட்டவிரோதமாகக் கந்துவட்டிக்குக் கடன் கொடுத்து, பொதுமக்களை அவதூறாகப் பேசி மிரட்டுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள்’ என எஸ்.பி ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலின் தாக்கத்தால் பொதுமக்கள் பலர் வேலையில்லாமல் பொருளாதாரரீதியாக மிகுந்த சிரமப்பட்டுவருகின்றனர். இந்தநிலையில், கடன் கொடுத்த நபர்கள், கடனைத் திரும்பப் பெறுவதற்காக, கடன் பெற்றவர்களை அவதூறாகப் பேசுவதாலும், வீட்டுக்கே வந்து மிரட்டிச் செல்வதாலும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இதனால், அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொள்வதும், குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ளும் விபரீத நிகழ்வும் நடந்துவருகின்றன.

தூத்துக்குடி எஸ்.பி அலுவலகம்
தூத்துக்குடி எஸ்.பி அலுவலகம்

கந்துவட்டிக்குப் பணம் கொடுத்த தனிநபர்கள் மட்டுமன்றி, பல தனியார் நிதி நிறுவனங்களும் கொடுத்த பணத்தை வசூல் செய்வதற்க்காகக் கடன் பெற்றவர்களை வீட்டுக்கே சென்று மிரட்டிவருகின்றனர். காலையில் விடிவதற்கு முன்பே வீட்டின் முன் அமர்ந்திருத்தல், கடன் தொகையைக் கொடுத்தால்தான் வீட்டைவிட்டுச் செல்வோம் எனச் சொல்லுதல் எனப் பல விஷயங்களில் ஈடுபட்டுவந்தனர். கடந்த மாதம் கோவில்பட்டியில் தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் பணிபுரிந்துவரும் பெண்களிடம் கடன் தொகையை வசூல் செய்வதற்காக வீட்டுக்குள் அமர்ந்து மிரட்டிய தனியார் நிதி நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கடந்த 16-ம் தேதி, தூத்துக்குடியில் மருத்துவ உபகரணங்கள் கடை நடத்திவந்த ரங்கநாதன் என்பவர், கந்துவட்டிக்காரர்களின் மிரட்டலால், கடையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். `கடையை விரிவுபடுத்துவதற்காகச் சிலரிடம் வட்டிக்கு கடன் பெற்றேன். கடந்த சில மாதங்களாகப் பணம் கேட்டு என்னை மிரட்டினார்கள். வீட்டுக்கே நேரடியாக வந்தும் மனைவி, மகள்களை அவதூறாகப் பேசினார்கள். இதனால், அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்கிறேன்’ என அவர் எழுதிவைத்த கடிதத்தின் அடிப்படையிலும், அவருடைய மனைவியின் புகாரின் அடிப்படையிலும் முன்னாள் எஸ்.ஐ உள்ளிட்ட மூன்று பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஜெயக்குமார் - தூத்துக்குடி எஸ்.பி
ஜெயக்குமார் - தூத்துக்குடி எஸ்.பி

இது போன்று மாவட்டம் முழுவதுமுள்ள காவல் நிலையங்களில் கந்துவட்டி வசூல் தொடர்பான புகார்கள் குவிந்தன. இந்தநிலையில், `தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாகக் கந்துவட்டிக்குக் கடன் கொடுத்து பொதுமக்களை அவதூறாகப் பேசி மிரட்டுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள்’ என மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், `கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலின் தாக்கத்தால் பொதுமக்கள் பலர் வேலையில்லாமல் பொருளாதாரரீதியாகச் சிரமப்பட்டுவருகின்றனர். இந்தநிலையில், பொதுமக்களுக்குக் கடன் கொடுத்த நபர்கள், கடன் பெற்ற பொதுமக்களை தற்கொலை செய்யத் தூண்டும் வகையில் அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்துவருவதாகவும், இதே போன்று பல தனியார் நிறுவனங்களும் செயல்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன. இது குறித்துப் புகார்களும் வருகின்றன. ஏற்கனவே, `பொதுமக்களைக் கடன் கேட்டு நெருக்கடி கொடுத்து துன்புறுத்தக் கூடாது’ என மாவட்ட ஆட்சியரும் அறிவுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடி எஸ்.பி., அலுவலகம்
தூத்துக்குடி எஸ்.பி., அலுவலகம்

பொதுமக்களின் உயிருக்கும், அவர்களது உடைமைக்கும் பாதுகாப்பளிக்க வேண்டியது காவல்துறையின் தலையாய கடமை. இது போன்று கடன் பெற்ற பொதுமக்களிடம் சட்டவிரோதமாகக் கந்துவட்டி கேட்டு நெருக்கடி கொடுத்து, அவதூறான வார்த்தைகளில் பேசி மிரட்டல் விடுப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள்” எனக் கூறியுள்ளார்.

ரூ.1 லட்சம் கடனுக்கு ரூ.6 லட்சம் வட்டி; பறிபோன நிலம்; கந்துவட்டி கொடுமையால் விவசாயி தற்கொலை!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு