Published:Updated:

2015ல் இயற்றப்பட்ட, ஆழ்துளைக் கிணறுகளுக்கான சட்டம் சொல்வது என்ன?

ஒரு நிலத்தின் உரிமையாளர் கைவிடப்பட்ட கிணற்றை மூடாமல் அப்படியே விட்டுவிட்டால், சம்பந்தப்பட்ட காவல்துறை ஆய்வாளர் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 304-II படி நிலத்தின்/கிணற்றின் உரிமையாளர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அவரைக் கைது செய்யலாம்.

கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறு
கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறு

2012-ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து இறந்தது. இதையடுத்து, சட்டம் பயின்றுகொண்டிருந்த சிவகாமி எனும் மாணவி, ஆழ்துளைக் கிணறு உயிழப்புகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, ஆழ்துளைக் கிணற்றுக்கான சட்டத்தை அரசு ஒரு மாதத்துக்குள் நிறைவேற்றி, கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி சட்டங்கள் இயற்றப்பட்டு 18.2.2015 முதல் செயல்பாட்டுக்கு வந்தது.

ஆழ்துளை கிணறு
ஆழ்துளை கிணறு

இச்சட்டத்தின் கீழான பாதுகாப்பு நெறிமுறைகள்

ஆழ்துளைக் கிணறு வெட்டுவதற்கான உரிமம் வைத்திருக்கும் நபர் அல்லது கிணறுக்கான உரிமையாளர் கிணறு புதிதாகத் தோண்டும்போதும் அல்லது ஆழப்படுத்தும்போதும் அல்லது சீரமைக்கும்போதும் கீழ்க்காணும் பாதுகாப்பு நெறிமுறைகளை நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும்.

1.A. கிணறு தோண்டும் பணியாளர்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன், பாதுகாப்பு உபகரணங்களுடன் வேலை செய்கிறார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

B. வேலை செய்யும் பணியாளர்கள் உரிய உரிமத்துடன் பணியாற்றுகிறார்கள் என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

`உலகைவிட்டு பிரிந்த சுர்ஜித்!'  குழியில் விழுந்தது முதல் தற்போது வரை... என்ன நடந்தது? #LiveUpdate

C. கிணறு தோண்டும் பணியை சற்று நிறுத்தினாலோ அல்லது ஓய்வுபெறும் வேளையிலோ அந்தக் கிணறு மூடி இருக்கிறதா என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

D. கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை களிமண், மணல், கற்கள் கொண்டு தரை வரை சமதளமாக கண்டிப்பாக மூடிவிடவேண்டும்.

2.a. ஆழ்துளை கிணறு வெட்டும்போதும் ஆழப்படுத்தும்போதும் சீரமைக்கும்போதும், மேற்படி நடைமுறைகள் பேணப்பட வேண்டும்.

1. கிணற்றின் உரிமையாளர் கிணறு வெட்டுவதற்கு முன்பு படிவம்-B வைத்துள்ளார் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

2. கிணறு வெட்டும்போது, வெட்டப்படவிருக்கும் ஆழ்துளைக் கிணற்றின் நீளம், அகலம், நிலத்தின் உரிமையாளர் முகவரி ஆகியவற்றை அனைவரும் தெரிந்துகொள்ளும் விதமாக தகுந்த முன்னெச்சரிக்கை பதாகைகள், தட்டிகள் வைக்க வேண்டும்.

3. நிலத்துக்கு ஏற்றார்போல் மேற்படி கிணற்றைச் சுற்றி பாதுகாப்பான வேலி அமைத்தல் வேண்டும்.

சுஜித்
சுஜித்

3. a. 0.5x0.5x0.6 மீட்டர் அளவிலான சிமென்ட் மேடை கிணற்றைச் சுற்றி அமைத்திட வேண்டும். 0.3 மீட்டர் நிலப்பரப்புக்கு கீழும், 0.3 மீட்டர் நிலப்பரப்புக்கு மேலும் மேடை அமைத்திட வேண்டும்.

b. எக்காரணம் கொண்டும் இடைவேளை நேரத்தில், திறந்த கிணற்றைவிட்டு பணியாளர்கள் விலகிச் செல்லக் கூடாது.

C. கிணறு தோண்டிய பிறகு,

1. சேறு உள்ள பகுதி அனைத்தையும், கால்வாய்களை பாதுகாப்பாக மூடி விட வேண்டும்.

2. ஏற்கெனவே நிலம் எப்படி இருந்ததோ அதே மாதிரி மீண்டும் செய்திடல் வேண்டும்.

3. இரும்பு மூடி மூலம், வெல்டிங் செய்து உறுதியான மூடியை போல்ட் மட்டும் நட் (Bolt and Nut) மூலமாக ஆழ்துளைக் கிணற்றின் வாயை மூடி பாதுகாப்பாக உள்ளது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

4. உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவர் மேற்படி ஆள்துளைக் கிணற்றின் பணி சரியாக செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். மேற்படி பணியில் திருப்தி இல்லையெனில் சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளருக்கு நோட்டீஸ் அளித்து, மீண்டும் மேற்படி கிணற்றில் பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும். மேற்படி பாதுகாப்பு விஷயத்தில் நிலத்தின் உரிமையாளர் நிபந்தனைகளை முறையாக கடைப்பிடிக்கவில்லை எனில், உரிமத்தை ரத்து செய்யலாம்...

பெங்களூரு முதல் சீனா வரை... ஆழ்துளை மீட்புக்காகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் சில வழிமுறைகள்!

இதையும் தாண்டி ஒரு நிலத்தின் உரிமையாளர் கைவிடப்பட்ட கிணற்றை மூடாமல் அப்படியே விட்டுவிட்டால், சம்பந்தப்பட்ட காவல்துறை ஆய்வாளர் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 304-II படி நிலத்தின்/கிணற்றின் உரிமையாளர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அவரைக் கைது செய்யலாம்.

இச்சட்டங்கள் ஏட்டில் இருக்கிறதே தவிர நடைமுறைபடுத்தப்படுவதில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.