ட்ராபிக் போலீசிற்கு, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் இடையேயான பனிப்போர்- தீர்வு என்ன ?
அசல் ஓட்டுநர் உரிமத்திற்கு பதில் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமத்தை காட்டலாமா?

ட்ராபிக் போலீசிற்கு, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் இடையேயான பனிப்போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே போகிறது, சாலை விதிகளை செயல்படுத்துவதில், ஹெல்மெட், லைசென்ஸ், பிற வாகன ஆவணங்கள் ஆகியவற்றை போக்குவரத்து காவல் துறையினர் சரிபார்ப்பாக்கும் நேரங்களிலும், வாய் தகராறு முதல் மரணம் வரை பல இழப்புகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

போக்குவரத்து துறை காவல் அதிகாரிகளுக்கு எவ்வளவு அதிகாரம் இருக்கிறது, மோட்டார் வாகன சட்டம் என்ன சொல்கிறது, பொதுமக்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கிறது என்ற சந்தேகங்கள் இன்றுவரை தீர்ந்தபாடில்லை.
அந்த வரிசையில் விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் 'அசல் ஓட்டுநர் உரிமத்திற்கு பதில் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமத்தை காட்டலாமா? ' என்ற கேள்வியை வாசகர் ஒருவர் எழுப்பி இருந்தார்.
சட்டம் என்ன சொல்கிறது என்று கேட்டறிந்தோம். உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெ.ஜீவகிரிதரன் " 02.11.2018 அன்று திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்ட விதி 139-இன் படி ஓட்டுநர் உரிமம் உட்பட வாகனத்தின் அனைத்து சான்றிதழ்களையும் DigiLocker அல்லது mParivahan என்ற இரு செயலிகள் மூலம் மட்டுமே டிஜிட்டல் சான்றிதழ்களாக அதிகாரிகள் கேட்கும் போது காட்ட முடியும்" என்கிறார்.
Digilocker (டிஜிலாக்கர்) என்பது சான்றிதழ்கள், அரசு ஆவணங்கள் ஆகியவற்றை எல்லாம் மின்னணு முறையில் சேமித்து வைத்துக் கொள்வதற்காக மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டது. டிஜிலாக்கர் வசதி மத்திய அரசின் சார்பில், அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் உங்கள் ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிந்து வைத்து கொள்ளலாம்.

mparivahan ( எம்-பரிவாஹன்) செயலி என்பது மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையின் மூலம், வாகனம் குறித்த ஆவணங்களை மின்னணு முறையில் பெறுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட செயலி. இதில் வாகனத்தின் எண், உள்ளிட்டவை பதிவிட்டால் வண்டி தொடர்பான அணைத்து தரவுகளையும் பெற்று விட முடியும்.
போக்குவரத்தில் இருக்கும் ஆவண சிக்கல்கள் எல்லாம் ஒருபுறம் இருந்தாலும், என் இஷ்டத்திற்கு நான் வண்டி ஓட்டுவேன் என்று பொதுமக்களுக்கும், என் அதிகாரத்திற்கு கீழ் தான் நீ இருக்கிறாய் என
காவல்துறைக்கும் இருக்கும் ஆணவ சிக்கல் தான், பாதுகாப்பற்ற சாலை பாதுகாப்பிற்கு காரணமாகின்றது. இன்றைய அவசியம் இதை இருவரும் அறிந்து, உணர்ந்து மாற்றிக்கொள்ளும் சுயஒழுக்கம் மட்டுமே.

வாசகர்கள், இதுபோன்ற உங்களின் சந்தேகங்களை விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் பதிவிட கீழ்க்கண்ட லிங்க்-ஐ அழுத்துங்கள்.... Click here